தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள இலங்கை இளம் மகளிர் கிரிக்கெட் அணி

36

இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண T20 தொடரில் இன்று இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதிய நிலையில், இங்கிலாந்து இளம் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>நியூசிலாந்து T20i அணியின் தலைவராகும் மைக்கெல் பிரேஸ்வெல்

முன்னதாக ஹம்பந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இலங்கை – இங்கிலாந்து இளம் மகளிர் அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய அவர்கள் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தனர். இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக அஷானி கவ்சல்யா 24 ஓட்டங்கள் குவித்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அவா லீ மற்றும் சர்லோட் லாம்பார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 127 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்தின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

இங்கிலாந்து தரப்பின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் டாவினா பெர்ரின் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை பந்துவீச்சில் ஹிருனி ஹன்சிக்கா ஒரு விக்கெட்டினை கைப்பற்றிய போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

இப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியானது முக்கோண T20 தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைப் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

 

இலங்கை – 126/9 (20) அஷானி கவ்சல்யா 24, அவா லீ 19/2, சர்லோட் லாம்பார்ட் 23/2

 

இங்கிலாந்து – 127/4 (14.3) டாவினா பெர்ரின் 54(34)

 

முடிவு இங்கிலாந்து 19 வயதின் கீழ் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<