IPL பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்!

IPL 2024

53

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரின் பிளே-ஓஃப் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண குழாத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

T20 உலகக் கிண்ணத்திற்குரிய முதற்கட்ட இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

அதன்படி பிளேஓஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை கொண்டுள்ள சென்னை அணியின் மொயீன் அலி, கொல்கத்தா அணியின் பில் சோல்ட் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் ஆகியோர் பிளே-ஓஃப் சுற்றை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த வீரர்களை தவிர்த்து ஜொனி பெயார்ஸ்டோவ், செம் கரன், லியம் லிவிங்ஸ்டன், வில் ஜேக்ஸ்  மற்றும் ரீஷ் டொப்லே ஆகிய வீரர்கள் விளையாடும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறித்த இந்த அணிகள் தகுதிபெற்றாலும் மேற்குறிப்பிட்ட வீரர்கள் பிளே-ஓஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

IPL தொடரின் பிளேஓஃப் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி முதல் 26ம் திகதிவரை நடைபெறவுள்ளன. குறிப்பிட்ட காலப்பகுதியில் பாகிஸ்தான் தொடர் நடைபெறவுள்ளதால், உலகக்கிண்ணத்துக்காக வீரர்களை தயார்நிலையில் வைத்துக்கொள்வதற்காக வீரர்களை பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அழைப்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 

அதுமாத்திரமின்றி IPL தொடரின் லீக் போட்டிகள் 19ம் திகதி நிறைவுக்கு வரவுள்ள நிலையில், வீரர்களை 18-19ம் திகதிகளில் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. எனவே சில வீரர்கள் அணிகளின் கடைசி லீக் போட்டியையும் தவறவிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<