T-20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த பின்ச் : ஷமான், ராஹுல் முன்னேற்றம்

1871

ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு T-20 தொடர் மற்றும் இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் ஆகியவற்றை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) T-20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையை இன்று (09) வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பாகிஸ்தான்

ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு T-20 தொடரின் இறுதிப் போட்டியில்…

முத்தரப்பு T-20 தொடரின் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியிருப்பதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான T-20 தொடரை இந்திய அணி 2-1 என வெற்றிக்கொண்டிருந்தது.

இந்த தொடர்களின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள T-20 துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் 891 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பக்ஹர் ஷமான் இரண்டாவது இடத்துக்கும், இந்திய அணியின் கே.எல்.ராஹுல் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பட்டியலில் தங்களது ஆதிக்கத்தை செலுத்திவந்த பாபர் அஷாம், கொலின் மன்ரோ மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகியோர் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச், முத்தரப்பு T-20 தொடர் நடைபெற்று வந்த தருணத்தில், ஐசிசி துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்திருந்தார். இதனால் T-20 துடுப்பாட்ட வீரர்கள்  தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருந்தார். எனினும், தொடர் நிறைவடைந்த பின்னர் ஆரோன் பின்ச் புள்ளிகளை இழந்திருந்தாலும் 891 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ரோஹித் சர்மாவின் அபார சதம், ஹர்திக் பாண்டியாவின் சகலதுறை ஆட்டம் என்பவற்றின் உதவியால்…

அவுஸ்திரேலிய அணிக்கு பல முன்னேற்றங்களை நடைபெற்று முடிந்த முத்தரப்பு தொடர் கொடுத்திருந்தது. இதில் அணித் தலைவரான ஆரோன் பின்ச்சின் துடுப்பாட்டம் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு போட்டிக்கொண்ட T-20 தொடரில் 84 ஓட்டங்களை பெற்றிருந்த பின்ச், முத்தரப்பு தொடரிலும் சாதிக்க தவறவில்லை.

இவர் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 172 ஓட்டங்களை குவித்து உலக சாதனை நிகழ்த்திய பின்ச், அடுத்த போட்டிகளில் 16, 3 மற்றும் 47 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் தரவரிசையில் நான்காவது இடத்திலிருந்த பின்ச் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமான் அடைந்துள்ள முன்னேற்றம் மிகப்பெரியது. இவர் தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முத்தரப்பு T-20 தொடரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த பக்ஹர் ஷமான் இறுதிப் போட்டியில் 46 பந்துகளுக்கு 91 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் இவர் 91 ஓட்டங்களை பெற்று, தனது அதிகூடிய சர்வதேச T-20 ஓட்ட எண்ணிக்கையையும் இதன்போது பதிவுசெய்திருந்தார். பக்ஹர் ஷமான் இந்த தொடரில் 61, 6, 47, 73 மற்றும் 91 ஓட்டங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொடுத்திருந்தார்.

பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகியிருக்கும் பின்ச்சின் அதிரடி சதம்

அவுஸ்திரேலிய T20 அணியின் தலைவர் ஆரோன் பின்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெறும் 76 பந்துகளில்…

இதேபோன்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்த கே.எல்.ராஹுல் இந்த வரிசையில் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டார். கடைசி வெளியீட்டிலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறியே ராஹுல் இந்த இடத்தை பிடித்துக்கொண்டார். முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய இவர், அடுத்த போட்டிகளில் 8 மற்றும் 19 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். எனினும் புதிய தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்து இந்திய அணிக்கான வாய்ப்பையும் இவர் தக்கவைத்துக்கொண்டார்.

இவர்களுடன் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  டி ஆர்சி ஷோர்ட் முதன்முறையாக முதல் 10 வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளார். இவர் 690 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை தக்கவைத்துள்ளார். டி ஆர்சி ஷோர்ட் முத்தரப்பு தொடரில் 46 மற்றும் 76 ஓட்டங்களை பெற்றிருந்தார்.   இதனைத் தொடர்ந்து  இந்திய அணியின் ரோஹித் சர்மா (678 புள்ளிகள்) 11ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் 641 புள்ளிகளுடன் 15ஆவது இடத்தையும், ஜோஸ் பட்லர் 614 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேவேளை முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் ஆறுதல் அளித்த சொலமன் மிர் 202 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். சொலமன் மிர் முதல் இரண்டு போட்டிகளில் 27 மற்றும் 28 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் 94 மற்றும் 63 ஓட்டங்களை விளாசியிருந்தார். இவர் தனது வாழ்நாள் முன்னேற்றமாக 581 புள்ளிகளை பெற்று, 25ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க