சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜாவா லேன் மற்றும் ரினௌன் அணிகளுக்கிடையிலான FA கிண்ணத்திற்கான இறுதிக் காலிறுதிப்போட்டியினை ஜாவா லேன்  அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் காலிறுதிக்கு முன்னைய சுற்றுப் போட்டியில் பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகத்தினை 8-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.  

மறுமுனையில் ஜாவா லேன் அணி, தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற கிறிஸ்டல் பெலஸ் அணியுடனான தீர்க்கமான போட்டியினை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதிக்கு தெரிவாகிய அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

காலிறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, கோல் அடிப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

குறிப்பாக ரினௌன் அணிக்காக, தலைவர் மொஹமட் ரிப்னாஸினால் உள்ளனுப்பப்பட்ட பந்தினை கோலாக மாற்றும் வாய்ப்பை மொஹமட் பசால் தவற விட்டார்.

மறுமுனையில் ஜானக ஷமிந்தவினால் அடிக்கப்பட்ட ப்ரி கிக் உதையை கோல் காப்பாளர் மொஹமட் உஸ்மான் தடுத்தார்.

இவ்வாறு இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. இந்நிலையில் மொஹமட் பசாலுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கப்பெற, அவரால் கோல் கம்பங்களையே பதம் பார்க்க முடிந்தது.

போட்டியின் முதலாவது கோலினை ஜாவா லேன் வீரர் ஜானக ஷமிந்த பெற்றுக்கொடுத்தார். 24ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரி கிக் வாய்ப்பினை லாவகமாகப் பயன்படுத்திய ஜானக, பந்தை கீழால் உதைந்து கோலாக மாற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ரினௌன் அணி போராடியபோதும் மறு முனையில் ஜாவா லேன் அணி கவுண்டர் அட்டாக் முறையில் இரண்டாவது கோலினைப் பெற்றது. போட்டியின் 34ஆவது நிமிடத்தில் உருவாக்கப்பட்ட கவுண்டர் வாய்ப்பினை இளம் வீரர் நவீன் ஜூட் கோலாக மாற்றினார்.

சஸ்னியின் கோலினால் பெற்ற வெற்றியுடன் அரையிறுதிக்குத் தெரிவாகிய கொழும்பு அணி

ரினௌன் அணிக்கு முதலாம் பாதிக்கு முன்பு கோல் அடிக்கும் வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. எனினும் பெனால்டி பகுதிக்கு உள்ளே கிடைத்த ப்ரி கிக் (Indirect Free kick) வாய்ப்பை பஸால் வெளியே அடித்தார்.

இதன் காரணமாக முதலாம் பாதியை 2 கோல்களினால் முன்னிலையுடன் முடித்தது ஜாவா லேன் அணி.

முதல் பாதி : ரினௌன் விளையாட்டுக் கழகம் 0 – 2 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

இரண்டு கோல்களினால் பின்னடைவை சந்தித்திருந்த இளம் வீரர்களைக் கொண்ட ரினௌன் அணி, இரண்டாவது பாதியை துடிப்பாக ஆரம்பித்தது.

எனினும் அதற்கு சவாலாக கவுண்டர் அட்டாக் மூலம் கோலடிக்க ஜாவா லேன் அணி வீரர்கள் எத்தனித்தனர். நவீன் ஜூட் அவரது வேகமான ஆட்டம் மூலம் அருமையான வாய்ப்பினை உருவாக்கிய போதிலும் ரினௌன் களத்தடுப்பாளர்கள் அதனை தடுத்தனர்.

தமது பந்துப் பரிமாற்றம் மூலம் போட்டியினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தாலும் ரினௌன் அணியினால் கோல் அடிக்கும் வாய்ப்புகளை பெரிதாக ஏற்படுத்த முடியவில்லை.

ஜாவா லேன் அணி தமது மூன்றாவது கோலினை 64ஆவது நிமிடத்தில் பெற்றது. நவீன் ஜூட் மிகத் திறமையாக செயற்பட்டு கோல் காப்பாளரைத் தாண்டி பந்தை உதைந்து ஜாவா லேன் ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

போட்டியை ஜாவா லேன் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தபோது ரினௌன் அணி சார்பாக 70 நிமிடங்கள் கடந்த நிலையில் மொஹமட் ஆசாத் கோலினைப் பெற்று மீண்டும் போட்டியை உயிர்ப்பூட்டினார்.

எனினும் களத்தடுப்பினை பலப்படுத்திய ஜாவா லேன் அணி வீரர்கள் சிறந்த ஒழுங்கமைப்புடன் செயற்பட்டு ரினௌன் அணி வீரர்கள் உருவாக்கிய வாய்ப்புகளை தடுத்தனர்.

எனினும் ஆட்டத்தின் நிறைவில் மேலதிக 2 கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று ஜாவா லேன் அணி அரையிறுதிக்குத் தெரிவானது.

முழு நேரம் : ரினௌன் விளையாட்டுக் கழகம் 1 – 3 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: நவீன் ஜூட் (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த ஜாவா லேன் அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் நஸார், “எமது அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். எதிரணி வீரர்களை எம் பகுதியில் பந்துப் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் நோக்கில் திட்டத்தை கட்டமைத்திருந்தோம். அதற்கேற்றவாறு விளையாடவும் செய்தோம். இதுபோன்றே, அரையிறுதியில் சந்திக்கவிருக்கும் அணிக்கெதிராகவும் சிறந்த திட்டத்தை வகுத்து சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.

தோல்வியைந்த ரினௌன் அணியின் பயிற்றுவிப்பாளர் அமானுல்லா கருத்து தெரிவிக்கையில், “நாம் போட்டியில் உத்வேகம் காட்டத் தவறினோம். குறிப்பாக முதல் பாதியில் எமது விளையாட்டு சோம்பேறித்தனமாக அமைந்தது. பந்தினை முன்னோக்கி எடுத்துச் செல்லுகையில் எம் அணியின் பல வீரர்கள் முன்னேறியதால் எதிர் தரப்பினர் அதனை பயன்படுத்தி கவுண்டர் அட்டாக் முறையில் கோல்களை அடித்தனர். தவறுகளை திருத்தி மீண்டும் சிறப்பான ஆட்டம் காண பயிற்சி செய்வோம்” என்போம்.

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் –  மொஹமட் ஆசாத் 74’

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – ஜானக சமிந்த 24′, நவீன் ஜூட் 34′ & 64’

மஞ்சள் அட்டை

ரினௌன் விளையாட்டுக் கழகம் – சாமில் அஹமட், மொஹமட் ரிப்னாஸ்

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் அலீம், ஷாமர டி சில்வா