FA கிண்ணத்தில், விமானப்படை அணியுடனான காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகிய மற்றொரு அணியாக கொழும்பு கால்பந்துக் கழக அணி தம்மைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு கால்பந்துக் கழகத்தைப் பொறுத்தவரை தமது முதல் போட்டியில் SLTB விளையாட்டுக் கழகத்தை 2-0 எனவும், யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தை வோக் ஓவர் முறையிலும், காலிறுதிக்கு முன்னைய சுற்றில் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 5-0 எனவும் வெற்றி கொண்டிருந்தது. 

இரண்டாம் பாதி அதிரடியினால் புளு ஸ்டாரை வீழ்த்திய சௌண்டர்ஸ்

அதேபோன்று, விமானப்படை விளையாட்டுக் கழக வீரர்கள் ரியலைன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 13-0 என அபாரமாக வெற்றி கொண்டனர். பின்னர் சிவில் பாதுகாப்பு அதிகாரசபை அணியை பெனால்டியில் 4-3 எனவும், மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழத்தை 3-0 எனவும் வெற்றி கொண்டனர்.

இந்நிலையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் விமானப்படை வீரர்கள் தமது வேகத்தின் மூலம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களிலேயே விமானப்படை வீரர் நுவன் வெல்கமகே மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கைக்கு உள்ளாகினார். எனினும், அவ்வணி வீரர்கள் தமக்கிடையே நீண்ட தூர மற்றும் குறுகிய தூரப் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

கொழும்பு அணி பெற்ற முதல் வாய்ப்பான, நாகுர் மீரா எதிரணியின் கோல் திசைக்கு கொண்டு வந்த பந்தை, கோல் காப்பாளர் ருவன் அருனசிரி தடுத்தார். மீண்டும் அவர் மேற்கொண்ட முயற்சியின்போது பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

ஆட்டத்தை மாற்றும் வகையில் தனுஷ்க மதுசங்க சிறந்த முறையில் பந்தை முன்னே கொண்டு வந்து, டிலானுக்கு வழங்கினார். கோலுக்கு அண்மையில் இருந்த டிலான், பந்தை சஸ்னிக்கு வழங்க அவர் மிக வேகமாக கோலுக்குள் பந்தை அடித்து, கொழும்பு அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்தும் விமானப்படை வீரர்கள் முன்னர் போன்றே ஆட்டத்தை கொண்டு சென்றனர். எனினும் அவர்களது பந்துப் பரிமாற்றங்களின்போது சில தவறுகள் இடம்பெற்றமை அவ்வணியின் முதல் கோலுக்கான வாய்ப்புக்களைத் தடுத்தன.

முதல் பாதியின் மற்றொரு சிறந்த வாய்ப்பாக, கவிது இஷான் கொண்டுவந்த பந்தை இறுதி நேரத்தில் கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் தடுத்து திசை திருப்பினார்.

காலிறுதிக்கு தெரிவாகிய அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் விமானப்படைக்கு தொடர்ச்சியாக பல கோணர் வாய்ப்புக்கள் கிடைத்தும் அவற்றின்மூலம் அவர்கள் பயனைப் பெறவில்லை.

முதல் பாதி : விமானப்படை விளையாட்டுக் கழகம் 0 – 1 கொழும்பு கால்பந்துக் கழகம்

இரண்டாவது பாதியின் முதல் வாய்ப்பாக விமானப்படை அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது, அவர்கள் அடித்த பந்தை இம்ரான் தட்டி விட்டார். எனினும் அங்கு இரு தரப்பினராலும் பல உதைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் பந்து கோல் திசையில் இருந்து வெளியேறியது.

அதன் சில நிமிடங்களின் பின்னர் சர்வான் ஜோஹர் அடித்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

தொடர்ந்து, நாகுர் மீரா நீண்ட தூரம் பந்தை எடுத்துச் சென்று, இறுதியாக கோலுக்கு அடிக்கும்பொழுது, பந்து கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

அதன் பின்னர் கவிது இஷான் பல வீரர்களைத் தாண்டிச் சென்று பந்தை பரிமாற, இறுதியாக துமிந்த கோலை நோக்கி உதைந்தார். பந்து ரௌமி மொஹிடீனின் கையில் பட்டதாக நடுவரால் சைகை காண்பிக்கப்பட்டு, விமானப்படை அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும், அதன்போது கவிது உதைந்த பந்தை, இம்ரான் பாய்ந்து தடுத்தார்.  

மீண்டும், டிலான் பந்தை எதிரணியின் கோல் திசை வரை தனியே எடுத்துச் சென்றார். எனினும், இறுதி நிமிடத்தில் கோல் காப்பாளர் ருவன் அருனசிரி பாய்ந்து பந்தைத் தடுத்தார்.

போட்டியின் 85ஆவது நிமிடத்தில் துமிந்த கோல் ஒன்றைப் பெற்றார். எனினும் அவர் ஓப் சைட் இருந்ததாக நடுவர் மூலம் சைகை காண்பிக்கப்பட, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

முழு நேரம் : விமானப்படை விளையாட்டுக் கழகம் 0 – 1 கொழும்பு கால்பந்துக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: மொஹமட் இம்ரான் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்துக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி ThePapare.com இடம் பிரத்தியேகமாகக் கருத்து தெரிவிக்கும்பொழுது, “வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் எம்மால் வெற்றி பெற முடியும் என்பதனை நிரூபித்துள்ளோம். எமது களத் தடுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். எனினும் மத்திய கள வீரர்களின் ஆட்டம் சற்று குறைவாய்க் காணப்பட்டது. ராணுவப்படை மிகவும் சிறந்த அணி. அவர்களுக்கெதிராக சரியான திட்டங்களை வகுத்து நாம் அரையிறுதியில் விளையாடுவோம்”என்றார்.

 தொடர்ந்து விமானப்படை அணியின் பயிற்றுவிப்பாளர் சரத் பெரேரா, “நாம் கொழும்பு அணியை விட சிறப்பாக விளையாடினோம். எனினும் உருவாக்கிய வாய்ப்புகளை எம்மால் சரிவர கோலாக மாற்ற முடியாமல் போனது. பெனால்டி வாய்ப்பு பறிபோனமையும் இதிலடங்கும். அவர்கள் அடித்த கோல் மிகவும் எதிர்பாராத வண்ணம் அமைந்தது. ஆனால் பதிலடி கொடுக்க நேரம் இருந்தும் எம்மால் அதனை உபயோகிக்க முடியவில்லை” என்றார்.

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கால்பந்துக் கழகம் – மொஹமட் சஸ்னி 31’

மஞ்சள் அட்டை

விமானப்படை விளையாட்டுக் கழகம் – நுவன் வெல்கமகே 9’, ஹர்ஷ பெர்னாண்டோ 47’, DK துமிந்த 90+4’

கொழும்பு கால்பந்துக் கழகம் – சர்வான் ஜோஹர் 35’, ரௌமி மொஹிடீன் 72’