புகைப்பட விவகாரம்: மீண்டும் பாக். குழாத்துடன் இணைந்த ஹபீஸ்

103
Hafeez

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஹபீஸுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், அவருக்கு அத்தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், மீண்டும் குழாத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. நேற்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக ரெட்போர்ட் நியமனம்

இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை மொஹமட் ஹபீஸ், கொல்ப் விளையாடியிருந்த நிலையில், ஒரு வயோதிப பெண்ணுடன் இருந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டதுடன், குறித்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் புகைப்படத்தை எடுத்துக்கொண்ட வயோதிப பெண், இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, உயிரியல் பாதுகாப்பு வட்டத்தில் இல்லாத காரணத்தினால், ஹபீஸை தனிமைப்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அவர் கடந்த புதன்கிழமை தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நேற்று மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் ஹபீஸுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் அணியுடன் இணைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், புகைப்படம் எடுத்துக்கொண்ட குறித்த வயோதிப பெண் மற்றும் ஹபீஸிற்கு இடையில், கொவிட்-19 இற்கான சமுக இடைவெளி பேணப்பட்டமைடயும் இவர் உடனடியாக அணியில் இணைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஹபீஸ் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவான தவறு என்பதால், இதற்கான மேலதிக நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கப்படவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாக். கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

ஹபீஸ் விளையாடச் சென்ற கொல்ப் அரங்கம் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், வீரர்கள் சமுக இடைவெளியை பேணவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஹபீஸ் பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்படாவிட்டாலும், T20 தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு முதலில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர், பாதுகாப்பு விதிமுறையை மீறிய இங்கிலாந்து அணியின் ஜொப்ரா ஆர்ச்சர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அணிக்கு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க