ரெட் புல் அணுசரணையில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உலக கிரிக்கட் கிண்ணத்திற்கான போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த பி.எம்.எஸ் அணி இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த யூனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைகழகத்தை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பல கிரிக்கட் வீரர்களைக் கொண்ட இலங்கையைச் சேர்ந்த வணிக முகாமை கல்லூரியானது (பி.எம்.எஸ்) இலங்கை பல்கலைக்கழகங்களுடன் மோதி அதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக நாடுகளில் வேறு பல்கலைகழகங்களுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல தலைவர் பதவி வகிக்க ஷானக மற்றும் ஷெஹான் ஜயசூரிய போன்ற இலங்கை அணி வீரர்களும் இவ் அணியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதலாவது அரையிறுதி

இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாப் மத்திய பல்கலைக்கழத்திற்கும், வங்காளதேசத்தைச் சேர்ந்த யூனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழத்திற்கும் இடையில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டயாப் தாஹிர் 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்து தமது அணிக்கு பலம் சேர்த்தார். தொடர்ந்து ஜுனைட் அலி 18 பந்துகளில் அதிரடியாக 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம் அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பொழுதும் யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியை சேர்ந்த மஹ்பூர் ரஹ்மான் 3 விக்கட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில் நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம் 8 விக்கட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப்பெற்றது.

153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியின் முதல் விக்கட்டு 3 ஓட்டங்களைப் பெற்று இருந்த பொழுது கைப்பற்றப்பட்டது. எனினும் ஹசன் உஸ்மான் 35 ஓட்டங்களும் மித்ரா 22 ஓட்டங்களும் பெற்று அணியை நிலைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணி 81 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது. எனினும் மரராஜ் நிலோயின் 28 ஓட்டங்களால் 8 விக்கட்டுகளை இழந்து 19.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இடம் பிடித்தது.

போட்டியின் சுருக்கம்

பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம் – 152/8(20) – டயாப் தாஹிர் 60, ஜுனைட் அலி 30, மெஹ்ரான் 24, மஹ்பூபூர் ரஹ்மான் 14/3

யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் – 155/8(19.2) – ஹசன் உஸ்மான் 35, மரராஜ் நிலோய் 28, மொஹ்சின் 9/2, அப்தாப் 32/2


இரண்டாவது அரையிறுதி

இலங்கையைச் சேர்ந்த வணிக முகாமை கல்லூரியும் (பி.எம்.எஸ்), இந்தியாவைச் சேர்ந்த மித்ரா மண்டால் வணிக கல்லூரியும் 2ஆவது அரை இறுதியில் மோதிக்கொண்டன. என்.சி.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மித்ரா மண்டால் வணிக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

மித்ரா மண்டால் வணிக கல்லூரி அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 75 ஓட்டங்களைப் பெற்று  சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். ஓம்கார் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மேலும் தன்ராஜ் ஷிண்டே 43 ஓட்டங்களைக் குவித்து மித்ரா மண்டால் வணிக கல்லூரி அணி 169 ஓட்டங்களைப் பெற உதவினார். நியமித்த 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து மித்ரா மண்டால் வணிக கல்லூரி அணி 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பி.எம்.எஸ் அணி சார்பாக விமலதர்ம 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணியை பிரதிநித்துவப்படுத்திய வீரரான நிரோஷன் டிக்வெல்ல தலைமையில் 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வணிக முகாமை கல்லூரி சார்பாக விமலதர்ம அதிரடியாக 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். தலைவர் டிக்வெல்ல 24 ஓட்டங்களைப் பெற்றார். 86 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த பின் 4 ஆவது  விக்கட்டுக்காக இணைந்த ஜயசூரிய மற்றும் ஜனித் லியனகே பி.எம்.எஸ் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர்.

இத் தொடரில் ஆரம்பம் முதலே பிராகாசித்து வந்த ஷெஹான் ஜயசூரிய இப்போட்டியில் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்று பி.எம்.எஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாக முக்கிய காரணியாக அமைந்தார். அவருக்குத் துணையாக நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 28 ஓட்டங்களைப்பெற்றார். இறுதியில் வெறும் 16.4 ஓவர்களில் 174 ஓட்டங்களைப் பெற்று இறுதிப் போட்டியில் தமது இடத்தைப் பதிவு செய்துகொண்டது பி.எம்.எஸ் அணி.

போட்டியின் சுருக்கம்

மித்ரா மண்டால் வணிக கல்லூரி – 169/8 (20) – ஒம்கார் 46, தன்ராஜ் 43, விமலதர்ம 33/3

வணிக முகாமை கல்லூரி – 174/3(16.4) – ஷெஹான் ஜயசூரிய 56. ஜனித் 28, விமலதர்ம 28, யாஷ் நஹார் 25/2


இறுதிப் போட்டி

செப்டெம்பர் 11ஆம் திகதி காலி சர்தேச கிரிக்கட் மைதானத்தில் மைதானத்தில் கிண்ணத்திற்காக இலங்கையை சேர்ந்த வணிக முகாமை கல்லூரியும் (பி.எம்.எஸ்), வங்காளதேசத்தை சேர்ந்த யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகமும் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. தமக்கு முதலில் துடுப்பெடுத்தாட கிடைத்த வாய்ப்பை தவறவிடாத வணிக முகாமை கல்லூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 191 எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

வணிக முகாமை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டி சில்வா 32 ஓட்டங்களைக் குவித்து சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தாலும் வேகமாக ஓட்டங்களைக் குவித்தனர். 7ஆவது விக்கட்டுக்காக களமிறங்கிய ரணித்த லியனாராச்சி 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 27 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று வணிக முகாமை கல்லூரி சிறப்பான முறையில் இனிங்ஸை முடிக்க உதவினார்.

நியமிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை வணிக முகாமை கல்லூரி பெற்றுக்கொண்டது. யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கிய பொழுதும் அறிபுர் ரஹ்மான் 20 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 3 விக்கட்டுகளைப் பெற்றுக்கொண்டார்.

192 ஓட்டங்கள் எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஸாபித் ஹுசைனை ஆட்டமிழக்கச் செய்தார் ரணித்த லியனாராச்சி. எனினும் 2ஆவது விக்கட்டுக்காக 88 ஓட்டங்களை மித்ரா மற்றும் ஹசனுஸ்மான் பகிர்ந்துகொள்ள யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணி வலுவான நிலை அடைந்தது.

எனினும் அவிஷேக் மித்ரா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஹசனுஸ்மானும் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவற நியமிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியால் 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. சிறப்பாகப் பந்து வீசிய ஜெயவிக்ரம 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இறுதியில் 24 ஓட்டங்களால் யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணியை வென்ற வணிக முகாமை கல்லூரி ரெட் புல் கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக ரணித்த லியனாராச்சி தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

வணிக முகாமை கல்லூரி – 191/9 (20) – ரணித்த லியாணர்ச்சி 52, டி சில்வா 32, அறிபுர் ரஹ்மான் 20/3

யுனிவர்சிட்டி ஒப் லிபரல் ஆர்ட்ஸ் அணி – 167/8(20) – ஹசனுஸ்மான் 39, அவிஷேக் மித்ரா 28, ஜெயவிக்ரம 27/4

இலங்கையை பிரதிநித்துவப்படுத்திய பி.எம்.எஸ் கல்லூரியானது உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களுடன் வெற்றி பெற்ற சாதனையை நிலை நாட்டியது மட்டுமல்லாது அனைத்து போட்டிகளிலும் இலகுவாக வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது