“உலகின் மிக மோசமான DRS கணிப்பாளர் கோஹ்லி” : மைக்கல் வோர்கன்

285
Virat Kohli
Image courtesy - GettyImages/NDTV

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் முடிவு மீளாய்வு முறைமையை (DRS/UDRS) மிக மோசமாக கையாளுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிதான் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைவருமான மைக்கல் வோகன் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்துஇந்திய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கென்னிங்டன் கியா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று (09) இடம்பெற்ற போது, விராட் கோஹ்லியால் அடுத்தடுத்து இரண்டு தவறான நடுவர் முடிவு மீளாய்வு முறைமை கோரப்பட்டது. குறித்த தவறுகளை சுட்டிக்காட்டும் வகையிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் மைக்கல் வோகன் மேற்குறிப்பிட்ட விடயத்தினை பதிவுசெய்துள்ளார்.

>> விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியே தீருவேன் – ஹசன் அலி

இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. இதில் இந்திய அணி சார்பில் 10வது ஓவரை (10.2) ரவீந்திர ஜடேஜா வீச, அதனை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கியாடன் ஜென்னிங்ஸ் எதிர்கொண்டார். துடுப்பாட்ட வீரரை ஏமாற்றிச் சென்ற குறித்த பந்து நேரடியாக அவரின் காலில் பட்டது.

நடுவர் குமார் தர்மசேனவிடம் இந்திய வீரர்கள் ஆட்டமிழப்பு கோரியும் அவர் அதனை மறுத்திருந்தார். பந்து விக்கெட்டை தாக்குவது போன்று தோன்றிய போதும், துடுப்பாட்ட வீரரின் காலில் பந்து தாக்கும் இடம் வலது பக்கத்தின் வெளியில் (Impact – outside off) இருப்பதாக சந்தேகித்து நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை. எனினும் நடுவரின் தீர்ப்பை மீளாய்வு செய்ய (DRS) கோஹ்லி கோரினார். எது எவ்வாறாயினும் நடுவரின் கணிப்பின் படி வீரரின் காலில் பந்து படும் இடம், வலது பக்கத்தின் வெளியில் இருந்ததால் கோஹ்லியின் மீளாய்வு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு ஓவர்களுக்கு பின்னர் (11.6) ஜடேஜா, அலெஸ்டயர் குக்கிற்கு வீசிய பந்து நேரடியாக அவரது காலில் பட, இந்திய வீரர்கள் ஆட்டமிழப்பை கோரினர். நடுவர் அதனையும் நிராகரிக்க, விராட் கோஹ்லி ஆட்டமிழப்பை மீளாய்வு செய்யுமாறு மீண்டுமொருமுறை கேட்டுக்கொண்டார்.  மீண்டும் துடுப்பாட்ட வீரரின் காலில் பந்து தாக்கும் இடம் வலது பக்கத்தின் வெளியில் (Impact – outside off) என்பதால் ஆட்டமிழப்பு நிராகரிக்கப்படுவதாக மூன்றாவது நடுவர் அறிவித்தார்.

இதன் காரணமாக இந்திய அணி, தங்களுடைய இரண்டு நடுவர் முடிவு மீளாய்வு முறைமைகளையும் குறைந்த நேரத்தில் இழந்தது. விராட் கோஹ்லியின் இந்த அவசர முடிவுகள் சமுக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மைக்கல் வோகன் தனது பக்கத்திலும் விமர்சித்துள்ளார்.

அவரின் டுவிட்டர் பதிவில், விராட் கோஹ்லி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆனால் அவர் உலகின் மிக மோசமான நடுவர் முடிவு மீளாய்வு முறைமை கணிப்பாளர் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் கோஹ்லியின் சில நடுவர் முடிவு மீளாய்வு முறைமைகள் கேள்விகளை எழுப்பியிருந்தன. முக்கியமாக இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், விராட் கோஹ்லி எடுத்திருந்த நடுவர் முடிவு மீளாய்வு முறைமையொன்று அதிகமான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது.  

குறித்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா வீசிய யோர்க்கர் பந்து பெப் டு ப்ளெசிஸின் துடுப்பு மட்டையில் நேரடியாக பட்டிருந்தது. பந்துக்கும் காலுக்கும் இடைவெளி தெளிவாக தெரிந்தது. எனினும், துடுப்பாட்ட மட்டையில் பட்டதற்கு கோஹ்லி எல்.பி,டபுள்யூ ஆட்டமிழப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<