9ஆவது ஐ.பி.எல் தொடரின் 50ஆவது போட்டி நேற்று பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முரளி விஜே தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. பெங்களூரில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. நேரம் அதிகமானதால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது. பின் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் முரளி விஜெய் முதலில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன் படி பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக  க்றிஸ் கெய்ல் மற்றும் விராத் கொஹ்லி ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் 3 ஓவரில் பெங்களூர் அணி 17 ஓட்டங்களை மட்டுமே பெற்று இருந்தது. போட்டியின்  4ஆவது ஓவரை கைல் அபோட் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கி வைத்தார்.

அதன்பின் இருவரும் வானவேடிக்கை நடத்தினார்கள். இதனால் ஓட்டங்கள் மின்னல்  வேகத்தில் உயர்ந்தது. பெங்களூர் அணி 4.4 ஓவரில் 50 ஓட்டங்களைத் தொட்டது. விராட் கொஹ்லி 28 பந்துகளில்  6 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் அரைச்சதம் அடித்தார். மறுமுனையில் கிறிஸ் கெய்ல் 26 பந்துகளில் அரைச்சதத்தைத்  தொட்டார்.  இதன் பின்பும் தொடர்ந்து பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர்களை இந்த ஜோடி பதம் பார்த்தது . பின் இறுதியில் க்றிஸ் கெய்ல் 32 பந்துகளில்  4 பவுண்டரிகள், 8 சிக்ஸருடன் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். கெய்ல் ஆட்டம் இழக்கும் போது போது பெங்களூர் அணி 11 ஓவர்களில் 147 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அப்போது கொஹ்லி மறுமுனையில் 69 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அடுத்து வந்த இன்னுமொரு சிக்ஸர் மன்னன் டி வில்லியர்ஸ் 2 பந்துகளை சந்தித்து ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்தார். பின் அவரைத் தொடர்ந்து அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். மறுமுனையில் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர் கோட்டுக்கு அப்பால் செலுத்திக் கொண்டு இருந்த விராத் கொஹ்லி  47 பந்துகளில்  11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்தார். இது இவ்வருட ஐ.பி.எல் தொடரில் விராத் கொஹ்லி அடித்த 4ஆவது சதமாகும்.

கொஹ்ளியும், வில்லியர்ஸும் பெட்மேன் – சுப்பர்மேனைப் போன்றவர்கள் – கெயில்

பின் தொடர்ந்து விளையாடிய கொஹ்லி 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸருடன் 113 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் ராகுல் முதல் மற்றும் கடைசிப் பந்துகளில் பவுண்டரி அடிக்க பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைக் குவித்தது.

பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் சந்திப் சர்மாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10க்கு மேற்பட்ட ஓட்டங்களை வாரி வழங்கி இருந்தார்கள். அதில் 5 பந்துவீச்சளர்களும் தலா 3 ஓவர்கள் வீதம் வீசினார்கள். அதில் கரியப்பா 55 ஓட்டங்களையும், அபோர்ட் 48 ஓட்டங்களையும், அக்சார் 46 ஓட்டங்களையும் வாரி வழங்கினர்.

பினனர் 90 பந்துகளில் 212 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான ஹசீம் அம்லா மற்றும் முரளி விஜே ஜோடி களமிறங்கியது. ஆரம்பம் முதல் ஓவருக்கு 14க்கும் அதிகாமான ஓட்டங்களைப் பெற வேண்டிய அழுத்தமான நிலை இருந்தது. இதன் காரணமாக ஆரம்பம் முதல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக ஆட முயன்று தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார்கள். அதிகப்பட்சமாக சஹா மட்டுமே 10 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார். முரளி  விஜய் 16 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அரவிந்த் வீசிய பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு  ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்களில் கன்க்ரிட் சிங் 18 ஓட்டங்களையும், மோஹித் ஷர்மா 14  ஓட்டங்களையும், அக்சார் படேல் 13  ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் பஞ்சாப் அணி 14 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பெங்களூர் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் சஹல் 4 விக்கட்டுகளை வீழ்த்த ஸ்ரீநாத் அவர்விந் மற்றும் ஷேன் வொட்சன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள். போட்டியின் ஆட்டநாயகனாக தொடரில் 4ஆவது சதம் அடித்த  விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் பின் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. 1வது இடத்தில ஹைதராபாத் அணியும், 3வது இடத்தில் கொல்கத்தா அணியும், 4வது இடத்தில் மும்பை அணியும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு நேற்றைய போட்டியில் கொஹ்லி பெற்ற சதத்தோடு அவர் ஐ.பி.எல் கிரிக்கட் வரலாற்றில் 4000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இதுவரை அவர் ஐ,பி.எல் தொடர்களில் 4002 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவ்வருட ஐ.பி எல் தொடரில் மட்டும் விராத்  கொஹ்லி 13 போட்டிகளில் 865 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்