இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ்  அணியின் தலைவர் விராத் கொஹ்ளி மற்றும் தென் ஆபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் எ.பி.டி வில்லியர்ஸ் ஆகியோர்  பெட்மேன் – சுப்பர்மேன் போன்றவர்கள் என்று பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்து இருந்தது.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 8 பந்துகள் மீதமிருக்க  186 ஓட்டங்களைப் பெற்று தொடரின் 6ஆவது வெற்றியைப் பதிவு செய்து இருந்தது.

பெங்களூர் துடுப்பாட்டத்தில் விராத் கொஹ்லி  51 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்களையும், டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் பெற்று பெங்களூர் அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவி இருந்தார்கள்.

அது போன்று  கடந்த சனிக்கிழமைபெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணி 248 ஓட்டங்களைக் குவித்து இருந்தது.

ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான், மேற்கிந்திய அணிகள் இலங்கை வரும் வாய்ப்பு

இதில் டி வில்லியர்ஸ் மிக அற்புதமாகவும் அதிரடியாகவும் விளையாடி  52 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கலாக 129 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும், விராத் கொஹ்லி  55  பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.

அத்தோடு இந்த ஜோடி 3ஆவது விக்கட்டுக்காக  96 பந்துகளில் 226 ஓட்டங்களைப் பகிர்ந்து இருந்தது. இந்த ஜோடியின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி கடைசி 10 ஓவர்களில் 172 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

இதுவரை பெங்களூர் அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் விராத் கொஹ்லி 83.55 என்ற துடுப்பாட்ட சராசரியோடு 3 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 752 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 60 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்கள் அடங்கும். இத்தொடரில் கொஹ்லி பெற்ற அதி கூடிய ஓட்டம் 109 ஆகும்.

அத்தோடு ஐ.பி.எல் கிரிக்கட் வரலாற்றின் ஒரு பருவகாலத்தில் ஒரு வீரரால் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை விராத் கொஹ்லி தன் வசமாக்கி இருந்தார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு க்றிஸ் கெயிலால் 733 ஓட்டங்களும், 2013ஆம் ஆண்டு மைக் ஹசியினால் 733 ஓட்டங்களும் பெறப்பட்டு இருந்தமையே தனி ஒரு வீரரால் ஒரு ஐ.பி.எல் பருவகால போட்டித் தொடரில் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்களாகக் காணப்பட்டது. தற்போது 9ஆவது ஐ.பி.எல் பருவ காலத்தில் விராத் கொஹ்லி 12 போட்டிகளிலேயே 752 ஓட்டங்களைப் பெற்று இந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

மறுபக்கம் 360o என்று வர்ணிக்கப்படும் எ.பி.டி.விளியர்ஸ் இப்பருவ ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 59.70 என்ற துடுப்பாட்ட சராசரியோடு ஒரு சதம் மற்றும் 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 597 ஓட்டங்களைப் பெற்று இப்பருவ ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார். அவர் பெற்றுள்ள 597 ஓட்டங்களில் 51 பவுண்டரிகள் மற்றும் 32 சிக்ஸர்கள் உள்ளடங்குகிறது. அத்தோடு இத்தொடரில் டி.விளியர்ஸ் பெற்ற அதி கூடிய ஓட்டம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் பெற்ற 129 ஓட்டங்கள் ஆகும்.

இந்த இரண்டு வீரர்களையும் ஒன்றாக உற்று நோக்கினால் இவர்கள் பெங்களூர் அணிக்காக 12 போட்டிகளில் மொத்தமாக 1349 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். அதில் 111 பவுண்டரிகள் மற்றும் 60 சிக்ஸர்கள் அடங்கும். இத்தொடரில் தற்போது வரைக்கும் 499 சிக்ஸர்களே விளாசப்பட்டுள்ளன. அதில் 5 இல் ஒரு பங்கு சிக்ஸர் இந்த இரண்டு வீரர்களாலும் விளாசப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது வரை இப்பருவகால ஐ.பி.எல் தொடரில் பெறப்பட்டுள்ள 1303 பவுண்டரிகளில் 111 பவுண்டரிகளை அடித்த பெருமை இந்த ஜோடியை சாரும்.

இந்நிலையில் இந்த மந்திர இலக்கங்களை கண்டு மற்றுமொரு பவுண்டரி மற்றும் சிக்சர் மன்னன் க்றிஸ் கெயில் விராத் கொஹ்ளியும், எ.பி.டி வில்லியர்ஸும் பெட்மேன் – சுப்பர்மேனை  போன்றவர்கள் என்று கூறியுள்ளார்.

நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் பின்னர் இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் பேசிய போது , “மிகவும் அற்புதமானது. விராத் கொஹ்ளியும், எ.பி.டி வில்லியர்ஸும் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர். பாராட்டு கண்டிப்பாக இருவருக்கும் செல்ல வேண்டும். விராத் கொஹ்ளி தலைமைப் பதவியைச் சிறப்பாக மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக இது சிறந்த குழு முயற்சி. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் பங்களிப்பு செலுத்திய வீரர்களின் முயற்சி. தொடர்ந்து அவர்கள் வெற்றியை நோக்கி இட்டுச் செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்