மேற்கிந்திய தீவுகளின் பலமான T20 உலகக் கிண்ண குழாம்

165
AFP

அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் 15 பேர் அடங்கிய மிகவும் பலமான அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண அணியில் கடைசியாக 2015ஆம் ஆண்டிலேயே T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வேகப் பந்துவீச்சாளரான ரவி ராம்போல் இணைக்கப்பட்டிருக்கின்றார். ரவி ராம்போல் தொடர்ச்சியாக உள்ளூர் T20  போட்டிகளில் அசத்திவரும் நிலையிலேயே அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் பெறாத சகலதுறை வீரர் ரொஸ்டன் சேஸிற்கும் உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ரொஸ்டன் சேஸ், தற்போது நடைபெற்றுவருகின்ற கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரில் தொடர்ச்சியாக தனது திறமையினை நிரூபித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கீரொன் பொலார்ட் தலைமையில் வழிநடாத்தப்படவிருக்கும் மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண அணியின் பிரதித் தலைவர் பதவி நிகோலஸ் பூரானிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டர், செல்டன் கொட்ரல் மற்றும் டர்ரன் பிராவோ ஆகிய வீரர்களுக்கு மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண பிரதான அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வீரர்கள் அனைவரும் T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலதிக வீரர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 

இவர்கள் தவிர மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ணத்திற்கான அணி கிறிஸ் கெயில், அன்ட்ரே ரஸல், சிம்ரோன் ஹெட்மேயர், லென்டல் சிம்மோன்ஸ் போன்ற முன்னணி வீரர்களுடன் பலம் பெறுகின்றது.

நடப்பு சம்பியனாக காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்திற்கான சுபர் 12 சுற்றில் விளையாடுவதற்கான நேரடி தகுதியினைப் பெற்றிருப்பதோடு, அவ்வணி குழு 1 இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண அணி

கீரொன் பொலார்ட் (தலைவர்), நிகோலஸ் பூரான், பபியன் அலன், டிவெய்ன் பிராவோ, ரொஸ்டன் சேஸ், அன்ட்ரே பிளட்ச்சர், கிறிஸ் கெயில், ஈவின் லூயிஸ், ஒபெட் மெக்கோய், ரவி ராம்போல், அன்ட்ரே ரசல், லென்டல் சிம்மோன்ஸ், ஒசானே தோமஸ், ஹய்டன் வால்ஸ் ஜூனியர் 

மேலதிக வீரர்கள் – டர்ரன் பிராவோ, செல்ட்டன் கொல்ட்ரல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<