தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் நிறவெறி சர்ச்சை ???

272
de kock

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான குயின்டன் டி கொக் நிறவெறிக்கு எதிரான உடல் சைகையில் (Gesture) பங்கெடுக்க விரும்பாததனை அடுத்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டியில் பங்கெடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நிறவெறிக்கு எதிரான பிரகடனத்திற்கு (Black Lives Matter) மதிப்பளிக்கும் வகையில் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்கும் தமது அணி வீரர்கள், உடல் சைகையினை வெளிப்படுத்த வேண்டும் எனக் கட்டளை வழங்கியிருந்தது. (அதாவது T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர்கள் நிறவெறிக்கு எதிராக முழந்தாளிடவோ அல்லது கை முஷ்டியினையோ காட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததது)

>> மே.தீவுகளை வீழ்த்தி வெற்றிக் ஓட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா

எனினும், டி கொக் சொந்தக் காரணங்களைக் (Personal Reasons) கருதி இந்த உடல் சைகையில் பங்கேற்றிருக்கவில்லை. இதனால் அவர் மேற்கிந்திய தீவுகள் – தென்னாபிரிக்க அணிகள் T20 உலகக் கிண்ணத்தில் ஆடிய போட்டியிலும் அணித்தெரிவுக்கு தன்னை இணைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறவெறிக்கு எதிரான பிரகடனம் ஒன்றில் டி கொக் பங்கெடுக்காமல் போனது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் அவரின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, டி கொக்கிற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.

>> அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்த நிலையில் T20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணியினை வழிநடாத்தும் டெம்பா பெவுமா, டி கொக்கின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

”அணியாக நாம் நாங்கள் (இந்த) செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ந்து போனதோடு, ஆச்சரியமும் அடைந்தோம். துடுப்பாட்டவீரராக மாத்திரமின்றி, அனுபவம் என்று வரும் போது குயின்டன் அணியின் மிக முக்கியமான வீரராக இருக்கின்றார். இது அணித்தலைவராக எனது ஆளுகையில் வராத ஒன்று, அதோடு நான் இதனை சற்றும் எதிர்பாரத்திருக்கவில்லை.”

”குயின்டன் வளர்ந்த ஒருவர். தனியாக தீர்மானம் மேற்கொள்ள கூடியவர். அவரின் தீர்மானத்தினை நாங்கள் மதிக்கின்றோம். அவரது நம்பிக்கையினை மதிக்கின்றோம். அதோடு அவர் தான் எடுத்த தீர்மானத்திற்கு நியாயங்களை கொண்டிருப்பார் எனவும் நினைக்கின்றேன்.”

அதோடு டெம்பா பெவுமா மிகவும் விரைவாக குயின்டன் டி கொக் தீர்மானம் இந்த தீர்மானத்தினை எடுத்ததாக கூறுவதோடு அவரின் தீர்மானத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை அறிய முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

>> T20 உலகக்கிண்ணத்தில் தனித்துவமான சாதனையை படைத்த முஜீப்

இதேநேரம், குயின்டன் டி கொக் தனது தீர்மானம் தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஆடிய T20 உலகக் கிண்ணப் போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<