T20 உலகக்கிண்ணத்தில் தனித்துவமான சாதனையை படைத்த முஜீப்

ICC Men’s T20 World Cup 2021

140
Afghanistan Cricket

ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப்-உர்-ரஹ்மான், T20 உலகக்கிண்ணத்தில், களத்தடுப்பாளர்களின் உதவியின்றி, 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

 ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் T20 உலகக்கிண்ணத்தில், தங்களுடைய முதல் சுப்பர் 12 போட்டியில் நேற்றைய தினம் பங்கேற்றிருந்தது. இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது.

முஜீப், ரஷித் கானின் சுழலில் வீழ்ந்தது ஸ்கொட்லாந்து

எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, முஜிப்-உர்-ரஹ்மான் மற்றும் ரஷீட் கான் ஆகியோரின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறி, 10.2 ஓவர்கள் நிறைவில் 60 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த முறையில் பந்துவீசிய முஜீப்-உர்-ரஹ்மான் 4 ஓவர்கள் பந்துவீசி, 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அணியின் நான்காவது ஓவரை வீச அழைக்கப்பட்ட முஜீப்-உர்-ரஹ்மான், ஓவரின் இரண்டாவது பந்தில், ஸ்கொட்லாந்து அணித்தலைவர் கெயல் கோட்ஷரை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்ய, அடுத்த பந்தில் கெலும் மெக்லோட்டை LBW முறையில் ஆட்டமிழக்கச்செய்தார். தொடர்ந்து பந்து ஓவரின் இறுதி பந்தில் ரிச்சி பெரிங்டனை LBW முறையில் வீழ்த்தினார்.

முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், மீண்டும் அணியின் ஆறாவது ஓவருக்காக அழைக்கப்பட்டார். இதன்போது, ஓட்டங்களை குவித்து வந்த ஜோர்ஜ் மன்ஸேவை போல்ட் முறையில், வீழ்த்தியதுடன், எட்டாவது ஓவருக்காக அழைக்கப்பட்டு, மார்க் வட்டை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்தார்.

அதன்படி, தன்னுடைய அறிமுக T20 உலகக்கிண்ண போட்டியில். ஐந்து விக்கெட்டை கைப்பற்றிய முஜிப் உர் ரஹ்மான், T20 உலகக்கிண்ணத்தில், ஆப்கானிஸ்தான் அணிக்காக ஐந்து விக்கெட் பிரதியை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், T20 உலகக்கிண்ண வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தை முஜீப் பிடித்துக்கொண்டதுடன், இந்த பட்டியலின் முதல் இரண்டு இடங்களை இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர்களான அஜந்த மெண்டிஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தக்கவைத்துள்ளனர்.

இதேவேளை, முஜீப்-உர்-ரஹ்மான் தனித்துவமான சாதனையை ஒன்றையும் பதிவுசெய்துள்ளார். குறிப்பாக, உலகக்கிண்ணத்தில் 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள், களத்தடுப்பாளர்களின் உதவியுடன் குறித்த பிரதியை பதிவுசெய்துள்ள போதும், களத்தடுப்பாளர்களின் பங்களிப்பு இன்றி, 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை முஜீப் பெற்றுக்கொண்டார். இவரின், இந்த 5 விக்கெட்டுகளில், மூன்று வீரர்களை போல்ட் முறையில் வீழ்த்தியிருந்த இவர், இரண்டு வீரர்களை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<