ஜெதர்சனின் அபார பந்துவீச்சினால் சம்பியனானது சட்டத்தரணிகள் அணி

Professionals' Cricket League 2023

93
Professionals' Cricket League 2023

இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு இடையில் நடைபெற்ற T20 லீக் கிரிக்கெட் தொடரில் பொறியியலாளர்கள் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சட்டத்தரணிகள் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.  

கொழும்பு BRC மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பொறியியலாளர்கள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் அகில ஜயசுந்தர 22 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 43 ஓட்டங்களையும், கசுன் ஹெட்டியாரச்சி 37 பந்துகளில் ஒரு பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர் 

பந்துவீச்சில் பொறியியலாளர்கள் அணியின் கீத் சங்கல்ப 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சந்துல பிரேமரத்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர் 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி பொறியியலாளர்கள் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணி சார்பில் ஹிருஷ பலபிட்டிய 30 பந்துகளில் 29 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். 

சட்டத்தரணிகள் அணியின் பந்துவீச்சில் சண்முகப்பிள்ளை ஜெதர்சன் 3 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, துசித் பலிவத்த 2 விக்கெட்டுகளையும், சசித்ர தென்னகோன், அகில ஜயசுந்தர, ஜூட் மனேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர். 

எனவே, 18 ஓட்டங்களால் வெற்றயீட்டிய எர்ஷான் ஆரியரத்தினம் தலைமையிலான சட்டத்தரணிகள் அணி இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு இடையில் நடைபெற்ற T20 லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக தெரிவாகியது 

இதனிடையே, 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் விற்பனையாளர்கள் அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி வைத்தியர்கள் அணி வெற்றியைப் பதிவு செய்தது 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<