லிவர்பூல் அணிக்கு அடுத்தடுத்து 6ஆவது வெற்றி

60

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் முக்கிய நான்கு போட்டிகள் சனிக்கிழமை (22) நடைபெற்றன. இதில் லிவர்பூல் அணி இந்த பருவத்தில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்தது. தவிர, மன்செஸ்டர் சிட்டி, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணிகள் வெற்றியீட்டியதோடு மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் வொல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றது.

சிவப்பு அட்டை பெற்று கண்ணீரோடு வெளியேறிய ரொனால்டோ

ஜுவண்டஸ் அணிக்காக தனது முதல்…

லிவர்பூல் எதிர் சௌதம்ப்டன்

முஹமட் சலாஹ் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பெற்ற முதல் பிரீமியர் லீக் கோலின் உதவியோடு சௌதம்ப்டன் அணிக்கு எதிரான போட்டியை லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக்கில் இதுவரை அடிய ஆறு போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த அணி கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாகவே தொடரின் முதல் ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் சௌதம்ப்டன் வீரர் வெஸ்லி ஹோட்த் பெற்ற ஓன் கோல் மூலமே லிவர்பூல் அணி முன்னிலை பெற்றது. ஷெர்டன் ஷகிரி உதைத்த பந்து ஷேன் லோங்கின் மீது பட்டு ஹோட்த்திடம் சென்றபோதே அது அவருக்கு துரதிருஷ்ட கோலாக மாறியது.

எனினும் 11 நிமிடங்கள் கழித்து அலெக்சாண்டர் ஆர்னோல் அடித்த கோனர் கிக்கை உயரப்பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஜோவேல் மடிப். இதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்ற லிவர்பூல் அணி முதல் பாதி முடிவதற்குள்ளேயே வெற்றியை உறுதி செய்யும் வகையில் மற்றொரு கோலை போட்டது.  

கடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் கோல் பெறத் தவறிய லவர்பூலின் எகிப்து முன்கள வீரர் முஹமட் சலாஹ் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ஷகிரி உதைத்த பிரீ கிக் கம்பத்தில் பட்டு வெளியே வரும்போது வேகமாக ஓடிச் சென்று வலைக்குள் புகுத்தினார். இந்த பருவகாலத்தில் இது சலாஹ்வின் மூன்றாவது கோலாக இருந்தது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் காடிப் சிட்டி

ஆர்ஜன்டீனாவின் செர்கியோ அகுவேரா மன்செஸ்டர் சிட்டிக்காக தனது 300ஆவது போட்டியில் ஆரம்ப கோலை புகுத்தி அந்த அணி காடிப் சிட்டிக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.

ThePapare.com: பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் யார்?

காடிப் சிட்டி அரங்கில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி 32ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆரம்பித்து அடுத்த 12 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களை பெற்றதோடு இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை இலகுவாக நுழைத்தது.  

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் லியோன் அணியிடம் அதிர்ச்சி தோல்வி ஒன்றை சந்தித்த நிலையில் இந்த வெற்றி மன்செஸ்டர் சிட்டியின் மீள் வருகையாக இருந்தது.

இந்நிலையில் பெர்னார்டோ சில்வா பரிமாற்றிய பந்தை நெருக்கமான தூரத்தில் வைத்து வலைக்குள் உதைத்து மன்செஸ்டர் சிட்டிக்காக அகுவேரா தனது 205 ஆவது கோலை புகுத்தினார். மூன்று நிமிடங்கள் கழித்து சில்வா தலையால் முட்டி தானும் ஒரு கோலை போட்டார்.

இந்நிலையில் இல்காய் குண்டோகன் மன்செஸ்டர் சிட்டிக்காக 44 ஆவது நிமிடத்தில் மற்றொரு அபார கோலை போட்டார்.

நடப்புச் சம்பியனின் கோல் மழையால் திக்குமுக்காடிப் போன காடிப் சிட்டி இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தடுமாற்றம் கண்டது.

இந்த பருவகாலத்தில் 78.45 மில்லியன் டொலருக்கு லெய்சஸ்டர் அணியில் இருந்து ஒப்பந்தமான ரியாத் மஹ்ரஸ் மன்செஸ்டர் அணிக்காக இரண்டாவது பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வலைக்குள் புகுத்தினார்.   

இதுவரை நடைபெற்ற ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று ஒன்றை சமன் செய்த மன்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை (18) விடவம் இரண்டு புள்ளிகள் குறைவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் காடிப் சிட்டி அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் 19ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வொல்வர்ஹம்டன் வொண்டரர்ஸ்

வொல்வ்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்த மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் எட்டுப் புள்ளிகள் பின்தள்ளப்பட்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அணிகள் ஆறு போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு ஏற்கனவே முன்னிலை வகிக்கும் விலர்பூல் மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணிகளை நெருங்குவதில் தடுமாற்றம் கண்டுள்ளது.  

“வடக்கின் கில்லாடி யார்?” நான்காம் நாள் போட்டிகளின் முடிவுகள்

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் பிரெட் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வொல்வ்ஸ் பதில் கோல் திருப்பி  போட்டியை சமன் செய்தது. போர்த்துக்கல் வீரர் ஜோஸ் மாடின்ஹோ அந்த கோலை புகுத்தினார்.

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பிரைட்டன் மற்றும் ஹோவ் அல்பியோன்

தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளுக்கு முடிவுகட்டிய டொட்டன்ஹாம் அணி பிரைட்டனுடனான பிரீமியர் லீக் போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது.

கிழக்கு எசெக்ஸில் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாமின் பல கோல் முயற்சிகளும் ஆரம்பத்தில் விணாயின. எனினும் 42 ஆவது நிமிடத்தில் ஹரி கேனின் பெனால்டி உதை மூலம் டொட்டன்ஹாம் முதல் கோலை போட்டது. எதிரணி வீரர் கிளன் முர்ரேவின் கையில் பந்து பட்டதை அடுத்தே டொட்டன்ஹாமுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் மேலதிக வீரராக வந்த எரிக் லமேலா 12 யார்ட் தூரத்தில் இருந்து டானி ரோஸ் வழங்கிய பந்தை கோலாக மாற்றினார். போட்டி முடியும் நேரத்தில் அன்தோனியோ நொகார்ட் பிரைட்டன் அணிக்காக ஒரு கோலை பெற்றபோதும் அது அந்த அணியின் தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.

>>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<<