உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை பூர்வாங்க குழாம் அறிவிப்பு

2491

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் 30 பேர் அடங்கிய ஒருநாள் பூர்வாங்க (ஆரம்ப) குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பூரான், பிரெராக் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய லக்னோ

இலங்கை கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு, அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாட வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது.

இதேவேளை இந்த தகுதிகாண் தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகின்றது.

எனவே இரண்டு தொடர்களுக்குமான இலங்கையின் ஒருநாள் பூர்வாங்க குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தசுன் ஷானக தலைமையிலான இந்த பூர்வாங்க குழாத்தில் குசல் மெண்டிஸ் பிரதி தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் இலங்கை அணிக்காக இதுவரை அறிமுகம் பெறாத துடுப்பாட்டவீரர்களான லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, வேகப் பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க மற்றும் சுழல்பந்து சகலதுறைவீரர் துஷான் ஹேமன்த ஆகியோர் இந்த எதிர்பார்க்கை குழாத்தில் இடம்பெற்றிருக்க டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் சுழல்பந்து சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸும் வாய்ப்பை பெற்றிருக்கின்றார்.

இதேநேரம், உபாதைகளினால் இலங்கை ஒருநாள் குழாத்தில் இருந்து வெளியேறிய துடுப்பாட்டவீரர் அஷேன் பண்டார, முன்னணி வேகப் பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகியோர் ஒருநாள் குழாத்திற்குள் மீண்டும் இடம்பிடித்திருக்கின்றனர்.

மறுமுனையில் IPL போட்டிகளில் தற்போது சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக கலக்கி வரும் மதீஷ பத்திரன, மதீஷ போன்று மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவான் துஷார ஆகியோரும் எதிர்பார்க்கை குழாத்தில் வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

இந்த வீரர்கள் ஒரு பக்கமிருக்க இலங்கை ஒருநாள் அணிக்கு துடுப்பாட்டவீரர்களாக பிரதி தலைவர் குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் பலம் சேர்க்க அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அனுபவ வீரர்களாக நம்பிக்கை தருகின்றனர்.

பந்துவீச்சு துறையினை நோக்கும் போது லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோருடன் அணிக்குத் திரும்பியிருக்கும் துஷ்மன்த சமீர இளம் வீரர்களான டில்சான் மதுசங்க, பிரமோத் மதுசான் ஆகியோர் பெறுமதி சேர்க்கின்றனர்.

இவர்கள் தவிர வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் அணியின் பிரதான சுழல்வீரர்களாக காணப்படுகின்றனர்.

நிலக்ஷி டி சில்வாவின் அதிரடி ஆட்டத்துடன் தொடரை வென்றது இலங்கை

இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இலங்கை பூர்வாங்க குழாம்

தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ் (பிரதி தலைவர்), குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, அஷேன் பண்டார, அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, சாமிக கருணாரட்ன, வனிந்து ஹஸரங்க, துஷான் ஹேமன்த, துனித் வெல்லாலகே, லஹிரு குமார, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித, மதீஷ பதிரன, மிலான் ரத்நாயக்க, நுவான் துஷார, பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ, மகீஷ் தீக்ஷன, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<