சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நேற்று (14) நடைபெற்ற பிளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பதற்கான போட்டியொன்றில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இதன்மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே-ஓஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள ஹைதராபாத் அணி பிளே-ஓப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 58ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் ஷர்மா 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அன்மோல்ப்ரீத் சிங் 27 பந்துகளில் 36 ஓட்டங்களையும், தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும் எடுத்து வெளியேறினர்.
அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் 20 பந்துகளில் 28 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ஹென்ரிச் கிளாசன் 29 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ஓட்டங்கள் அடித்து அரைச் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் தன் பங்கிற்கு 25 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களை அடிக்க, 20 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்தது.
லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- பிரப்சிம்ரனின் சதம், பிராரின் அபார பந்துவீச்சுடன் பஞ்சாப் அணிக்கு வெற்றி
- சூர்யகுமாரின் அதிரடியோடு மும்பை இந்தியன்ஸ் வெற்றி
- IPL வரலாற்றில் சரித்திரம் படைத்த சாஹல்
இந்நிலையில் 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கைல் மேயர்ஸ் 2 ஓட்டங்களுடனும், குயிண்டன் டி கொக் 29 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
அடுத்துவந்த பிரெராக் மண்கட் 45 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாச, இவரைத் தொடர்நிது களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் 40 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 13 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுக்க 19.2 ஓவர்களிலேயே லக்னோ அணி 185 ஓட்டங்களைக் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய பிரெராக் மன்கட் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்க, ஹைதராபாத் அணி 12ஆவது ஆட்டத்தில் 7ஆவது தோல்வியைத் தழுவி ஏறக்குறைய பிளே-ஓஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<