IPL ஆரம்ப போட்டிகளில் விளையாட முடியாத இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள்

164

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் 29 பேர் இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டின் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின்றது.

கொவிட் – 19 வைரஸிலிருந்து தப்பிய டோனி

இதேநேரம், இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் தொடர் ஆரம்பமாக 14 நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்று தங்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. 

எனினும், ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகும் அதே காலப்பகுதியில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் இங்கிலாந்து மண்ணில் நடைபெறவிருக்கின்றன.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதனை அடுத்து தொடர் நிறைவடைந்த பின் ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதன் காரணமாகவே ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றனர்.

அதன்படி செப்டம்பர் 26ஆம் திகதி வரை இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள்  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனால், செப்டம்பர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியும். 

பல விமர்சனங்களை ஏற்படுத்திய பவாத் ஆலம்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாட வாய்ப்பிழந்த அவுஸ்திரேலிய வீரர்களில் டேவிட் வோர்னர் (சன் ரைஸர்ஸ் ஹைதரபாத்), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான் ரோயல்ஸ்), பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்) மற்றும் ஆரோன் பின்ச் (ராஜஸ்தான் ரோயல்ஸ்) ஆகியோர் முக்கியமானவர்களாக காணப்படுவதோடு, இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்), பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ரோயல்ஸ்), இயன் மோர்கன் (சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்) மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்) ஆகியோர்  முக்கியமானவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத அவுஸ்திரேலிய வீரர்களான கிறிஸ் லின் (மும்பை இந்தியன்ஸ்), நதன் கூல்டர்-நைல் (மும்பை இந்தியன்ஸ்) ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்தில் இருந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<