‘நோ போல்’ பிடிப்பதை மூன்றாம் நடுவரிடம் வழங்க ஐ.சி.சி. திட்டம்

678

பந்துவீச்சாளர்களின் முன் கால் “நோ போல்” பிடிக்கும் அதிகாரத்தை மூன்றாவது நடுவருக்கு வழங்குவதற்கு சர்வேதச கிரிக்கெட் கௌன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாகவுள்ளன.  

இதன்படி அடுத்த ஆறு மாத காலத்தில் தேர்வு செய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டித் தொடர்களில் கள நடுவருக்கு பதில் தொலைக்காட்சி நடுவர் கோட்டைத் தாண்டி முன் காலை வைப்பது தொடர்பில் நோ போல் பிடிக்கவுள்ளார். 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ………

கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இந்த முறை பயன்படுத்தப்பட்டபோதும் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை. 

“ஒரு சில வினாடிகளில் முன் கால் வைக்கப்பட்ட படம் மூன்றாவது நடுவருக்கு வழங்கப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவர் நோ போல் வீசப்பட்டதாக கள நடுவருக்கு அறிவுறுத்துவார். அவ்வாறு அழைக்கப்படாத பட்சத்தில் ஆடப்படும் அனைத்து பந்துகளும் சரியான பந்துகளாக அமையும்” என்று ஐ.சி.சியின் கிரிக்கெட் செயற்பாட்டு பொது முகாமையாளர் ஜெப் அல்லார்டிக் குறிப்பிட்டுள்ளார். 

“சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்டுத்துவது சாத்தியமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. எனவே, முதல்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய அணுகுமுறை கைகொடுத்தால், அதை அப்படியே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த முறை பயன்பாடுத்தப்பட்டபோது கால் தரையில் பட்டது மற்றும் தொலைக்காட்சி நடுவர் மூலம் தீர்மானிப்பதற்கு இடையே சராசரியாக ஏழு விநாடிகள் எடுத்துக் கொண்டன. இந்த முடிவு விரைவாக எடுக்கப்படுவது குறித்து ஐ.சி.சி திருப்தி அடைந்தபோது, தீர்க்கமான சில சந்தர்ப்பங்களில் முடிவெடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது. அதனை தொலைக்காட்சி நடுவர்கள் அதிகமாக பயன்படுத்தும்போது இந்த செயல்முறை வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த முறையை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் போதுமானவரை பயன்படுத்துவதற்கு ஐ.சி.சியின் கிரிக்கெட் குழு விருப்பத்தை வெளியிட்டதை அடுத்தே இந்த பரீட்சார்த்த முயற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும், இது இலகுவான சவாலாக இருக்காது என்று அல்லார்டிக் குறிப்பிட்டார்.  

“இதனை அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் பயன்படுத்த கிரிக்கெட் குழு பரிந்துரைத்துள்ளது. ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த இரு வடிவங்களிலும் 2018ஆம் ஆண்டு சுமார் 84,000 பந்துகள் வீசப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வெவ்வேறான இடங்களிலும் ஒவ்வொரு பந்தினதும் நோ போலை கண்காணிப்பது பெரும் பயிற்சியாகும். அனைத்து போட்டிகளிலும் இதனை அமுல்படுத்துவதற்கு முன்னர் அனைத்து சவால்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 

கிரிக்கெட் உலகில் நோ போல் விவகாரம் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே ஐ.சி.சி. அது தொடர்பில் சரியான முடிவுகளை எடுப்பது குறித்து அதிக அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளது. 

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவராக டு ப்ளெசிஸ் நியமனம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் …….

சர்வதேச போட்டிகள் மாத்திரமன்றி ஐ.பி.எல் போட்டிகளிலும் நோ போல் சர்ச்சையை ஏற்பத்தி இருந்தது. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் லசித் மாலிங்க கோட்டை தாண்டி காலை வைத்ததை பார்க்க நடுவர் எஸ். ரவி தவறவிட்டார். அதற்கு ரோயல் செலஞ்சர்ஸ் அணித்தலைவர் விராட் கொஹ்லி வெளிப்படையாகவே அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அந்த அணி வெற்றியை நோக்கி துரத்தி ஆடிய போது கடைசி ஓவரின் கடைசி பந்திலேயே அந்த தவறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.       

மிக அண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ண போட்டியில் நடுவர் நோ போல் பிடிக்க தவறியதால், அடுத்த பந்தில் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்தார். அந்தப் பந்தை நோ போல் பிடித்திருந்தால் அடுத்த பந்து ப்ரீ ஹிட் பந்தாக அமைந்திருக்கும்.

அதேபோன்று, கடந்த நவம்பரில் நோ போல்களை தவறவிட்டது குறித்து நடுவர் ரவி மீண்டும் பேசப்பட்டார். கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் காலையில் தனது ஐந்து ஓவர்களுக்குள் லக்ஷான் சதகன் 12 நோ போல்களை வீசியது தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிந்தது. அதில் ஒரே ஒரு நோ போல் மாத்திரமே நடுவரால் வழங்கப்பட்டிருந்தது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<