இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க

1234

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர்  சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின்மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தமது முதல் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.  

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹதுருசிங்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்….

இவ்வாறான நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர், பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (7) நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, ஹதுருசிங்கவின் பதவி நீக்கம் குறித்தும், புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை தெரிவுசெய்வது குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த, ருமேஷ் ரத்நாயக்க, இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என்பதை ஊடகங்களிடம் அறிவித்தார். 

சம்மி சில்வா அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“எமது தலைமையில் கிரிக்கெட் சபை அமைக்கப்படும் போது, உலகக் கிண்ணத்துக்கு இரண்டு மாதங்கள் மாத்திரமே இருந்தன. எமக்கு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என தோன்றிய போதும், உலகக் கிண்ணம் நெருங்கி வருவதால் அதே பயிற்றுவிப்பாளருடன் செல்வோம் என முடிவுசெய்தோம். ஆனால், இப்போது குறித்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது, இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க செயற்படவுள்ளார்” 

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ஆறாவது உலகக்….

அதேநேரம், சந்திக்க ஹதுருசிங்கவின் தற்போதைய நிலை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த சம்மி சில்வா, 

 “தற்போது அணியின் முழுக்கட்டுப்பாடும் இலங்கை கிரிக்கெட் சபையின் கீழ் உள்ளது. இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க செயற்படுகிறார். சந்திக்க ஹதுருசிங்கவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளோம். குறித்த கடிதத்திற்கு 14 நாட்களுக்குள் அவர் பதில் வழங்குவார் என எதிர்பார்த்துள்ளோம். அதன்பின்னர்தான் எமது முழுமையான தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும்” என்றார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க