அபுதாபி T10 லீக்கில் கலக்கும் வனிந்து ஹஸரங்க

Abu Dhabi T10 League - 2021

2170

அபுதாபியில் நடைபெற்று வரும் அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹஸரங்க, அதிக விக்கெட்டுக்களை எடுத்து வீரராக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற அபுதாபி T10 லீக்கில் இலங்கையிலிருந்து பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான உள்ளிட்ட 10 வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இதில் வஹாப் ரியாஸ் தலைமையிலான டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக இலங்கை அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹஸரங்க விளையாடி வருவதுடன் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து, 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

டீம் அபுதாபி அணிக்கெதிராக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அவர், T10 லீக் போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் 18 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை அதிரடியாக விளாசியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 22ஆம் திகதி டெல்லி புள்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய வனிந்து ஹஸரங்க, நேற்றுமுன்தினம் நடைபெற்ற நொதர்ன் வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை அபுதாபி T10 லீக் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியலில் 9 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தை தென்னாபிரிக்க வீரர் மெர்சென்ட் டி லேங் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதில் இலங்கையின் வனிந்து ஹஸரங்க 8 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்து வீரர் டென்னி ரிச்சர்ட்ஸ் பிரிக்ஸ் 6 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<