மஞ்சி மகளிர் சுப்பர் லீக் அரையிறுதியில் மோதுவுள்ள அணிகள்!

Munchee National Volleyball Championship 2021

107

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மஞ்சியின் அனுசரணையில் நடைபெற்று வரும் மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் மகளிருக்கான மஞ்சி மகளிர் சுப்பர் லீக் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், மகளிருக்கான அரையிறுதிப் போட்டிக்கு குழு ஏ இலிருந்து விமானப்படை மற்றும் ஹைட்ராமனி விளையாட்டு கழக அணிகள் தகுதிபெற்றுள்ளதுடன், குழு பி இலிருந்து இராணுவப்படை விளையாட்டு கழகம் மற்றும் கடற்படை விளையாட்டு கழகங்கள் தகுதிபெற்றுள்ளன.

Galaxy கிண்ணத்தை வெல்லும் அணிக்கு ஒரு மில்லியன் பணப்பரிசு!

விமானப்படை மகளிர் அணி, தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, 9 புள்ளிகளுடன் ஏ குழுவில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன், ஹைட்ராமனி மகளிர் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் விமானப்பைட அணியானது துறைமுக அதிகார சபை அணியை எதிர்கொண்டதுடன், போட்டியில் 25-8, 25-19 மற்றும் 25-19 என 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது. ஹைட்ராமனி அணி தங்களுடைய இறுதிப் போட்டியில் மாஸ் கெஷுலைன் அணியை எதிர்கொண்டதுடன், 25-16, 25-18 மற்றும் 25-20 என 3-0 என செட் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்தநிலையில் ஏ குழுவில் விளைாயடிய  மாஸ் கெஷுலைன் (MAS Casualline) அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றதுடன், துறைமுக அதிகாரசபை அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதன் காரணமாக இவ்விரு அணிகளும் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தன. 

மகளிருக்கான பி குழுவினை பொருத்தவரை இராணுவப்படை அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், கடற்படை அணி இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது. 

முதல் சுற்றுப் போட்டியில் தோல்விகளின்றிய அணிகளாக தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இராணுவப்படை அணி மற்றும் கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தியதுடன், இதில், இராணுவப்படை அணி 3-0 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இராணுவப்படை அணி 25-21, 25-18 மற்றும் 25-20 என்ற செட்கள் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தியது. 

அதேநேரம், குழு பி யில், ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்ற மஹஹுஸ்வெவ மற்றும் வெற்றிகளின்றி தொடரை கடந்த தேசிய இளைஞர் சேவைகள் விளையாட்டு கழகங்கள் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளன.

எவ்வாறாயினும் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்ட அணிகள் நாளைய தினம் (28) மோதவுள்ளதுடன், மூன்றாவது இடத்துக்கான போட்டிகள் எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<