இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை அண்மைக்காலம் மிகக் கடினமானது. அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அணி மீதும் அதிகாரிகள் மீதும் பலவகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை அணிக்கு மேலும் நெருக்கடியாகவே இருந்து வருகின்றது.

மூலம்: www.sportskeeda.com

ஜிம்பாப்வேயிடம் 2-3 என ஒருநாள் தொடரை தோற்றதை அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் அணித்தலைமை பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்தார்.

இந்த துயர நிலையின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 என அனைத்து போட்டிகளிலுமே இலங்கை ஒட்டுமொத்தமாக 0-9 என தோல்வி கண்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை.

கோஹ்லியின் அதிரடியோடு இலங்கையை T20 போட்டியிலும் வீழ்த்திய இந்தியா

அணியின் தற்போதைய நிலை முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானதோடு அணியில் முன்னேற்றம் இன்மை குறித்து ரசிகர்கள் கூட களைப்படைந்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாக அணி தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டனர்.

உண்மையில் இவ்வாறான கடினமான தருணத்திலும் எதிர்காலத்தில் நம்பிக்கை தரக்கூடிய சாதகமான சூழல் இருக்கத்தான் செய்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியில் அவ்வாறான திறமைகள் மற்றும் அனுகூல நிலை கண்ணில் தென்படாமல் இருப்பது வழக்கமானதே.

எனவே, இலங்கை அணி முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு உள்ள நம்பிக்கை தரும் ஐந்து விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.

5. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்களின் மீள் வருகை

இலங்கை அணி தனது வழக்கமான சில வீரர்கள் இன்றியே அண்மைய தினங்களில் ஆடிவருவதை மறந்துவிடக்கூடாது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இதனை அதிகம் பார்க்கலாம். நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் அசேல குணரத்ன போன்ற வீரர்கள் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்கும் வீரர்கள் என்றபோதும் காயங்களால் அண்மைக் காலத்தில் அவர்கள் விளையாடுவதில்லை என்பது தளம்பலை ஏற்படுத்தியது.

நுவன் பிரதீப்
நுவன் பிரதீப்

இந்தியாவுடனான முதல் டெஸ்டில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகமற்ற ஆடுகளத்தில் கூட நுவன் பிரதீப் எதிரணியை தள்ளாடச் செய்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். எனவே அவர் அல்லது லக்மால் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மாலிங்க டெஸ்ட் அணியில் இருந்து ஒதுங்கிக் கொண்ட வேளையில் இவர்களே வேகப்பந்து வீச்சில் பலம் சேர்த்தனர். ஆனால் இவர்களால் கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டாக அணியில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.

சுரங்க லக்மாலின் வேகம் மற்றும் நேர்த்தியான பௌன்ஸர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்திருக்கக் கூடும்.

லஹிரு குமார உற்சாகமாக பந்துவீசி தனது வேகத்தால் இந்திய வீரர்களை அதிர்ச்சியுறச் செய்தபோதும் அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு ஓவரிலும் விட்டுக் கொடுத்த பௌண்டரிகள் எதிரணிக்கு அழுத்தத்தை குறைத்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிறப்பு விருதுகள்

பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தை வைத்திருக்க முடியாத நிலையில் அவ்வாறான திறமையை வெளிக்காட்டிய குமார மற்றும் சமீரவால் ஆகியோராால் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது.  

குமார மற்றும் சமீரவுடன் லக்மால் மற்றும் பிரதீப் அணிக்கு திரும்பினால் அந்த கலவை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தாது. அது எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சவால் கொண்டதாக இருக்கும்.

உண்மையில் தற்போதைய டெஸ்ட் அணிகள் அனைத்தையும் பார்த்தோம் என்றால் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்த ஒரு அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையும் பலம் கொண்டதாக இல்லை.

4. ரங்கன ஹேரத், லசித் மாலிங்கவிடம் தங்கியிருக்கும் யுகம் முடிகிறது

முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆடிய காலத்தில் அவர்கள் அணிக்கு பலம் சேர்த்தது போலவே ரங்கன ஹேரத் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் இன்றியமையாத வீரர்களாக உள்ளனர். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இலங்கை அணி ஹேரத்தின் சுழலில் தங்கியிருப்பதோடு ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் மாலிங்கவின் வேகம் இலங்கை அணிக்கு தேவைப்படுகிறது.

லசித் மாலிங்க
லசித் மாலிங்க

எனினும் காயங்கள் மாற்று வீரர்கள் பற்றி யோசிக் வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இதனாலேயே அகில தனன்ஜய மற்றும் மலின்த புஷ்பகுமாரவுக்கு அணியில் இடம் பிடிக்க முடிந்தது.

புஷ்பகுமார அதிக தாக்கம் செலுத்தும் வீரராக இருப்பதோடு அவரது பலம் மற்றும் நிதானம் காயமடைந்த ரங்கன ஹேரத்தின் இடைவெளியை நிரப்ப போதுமாக இருந்தது. இது இலங்கை அணி ஹேரத்துக்கு மாற்று வீரரை யோசிக்கும் நேரத்தில் சாதக சூழலாக உள்ளது.  

எனினும் ஹேரத்தின் இடத்தை பிடிக்க புஷ்பகுமார நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கும் என்பதோடு தற்போதைக்கு அவர் சிறந்த மாற்று தேர்வாக மாறி இருக்கிறார் என்ற வகையில் நல்லதே.

ஷேசாடின் அதிரடியால் சுதந்திர கிண்ணத் தொடர் பாகிஸ்தான் வசம்

இதே நிலைமையே மாலிங்கவின் கோணத்திலும் ஏற்பட்டுள்ளது. அவர் இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் எதிர்பார்த்த அளவு சோபிக்காதபோது அகில தனன்ஜய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

சமீர, குமார மற்றும் லக்மால் போன்ற வீரர்கள் தமது ஆட்டத் திறமையை அதிகரித்துக் கொண்டால் மாலிங்கவின் இழப்பு பெரிதாக இருக்காது. இது அவரது ஓய்வுக்கு பின்பும் இலங்கை பந்துவீச்சு பலவீனம் அடைவதை தவிர்க்க போதுமாக இருக்கும்.

3. திறமையை காட்டும் துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம்

ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் இந்தியாவுடனான போட்டிகளில் இலங்கையின் துடுப்பாட்டம் அதிருப்தி கொள்வதாகவே இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். ஒருநாள் தொடர் மற்றும் ஒரு T-20 போட்டிகளில் விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து ஒட்டங்கள் குவிக்கத் தவறினர்.   

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்ன அபார சதங்கள் குவித்தனர். நிரோஷன் திக்வல்ல தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்றார்.

திரிமான்ன மற்றும் சந்திமால்
திரிமான்ன மற்றும் சந்திமால்

அணியின் தூண்களாக அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க மற்றும் டினேஷ் சந்திமால் உள்ள நிலையில் ஏனைய இளம் வீரர்களும் முழுமையாக தமது திறமைகளை காட்டினால் இலங்கை அணிக்கு பூரணமான துடுப்பாட்ட வரிசை ஒன்று கிடைக்கும்.

குசல் மெண்டிஸ் தன்னால் சிறப்பாக துடுப்பாட்ட வீரராக வர முடியும் என்பதை இந்த தொடர் மூலம் காட்டியதோடு கருணாரத்ன நெருக்கடியான நேரத்தில் திறமையாக ஆடி இருந்தார். இவர்கள் இருவராலும் இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு நெருக்கடி கொடுக்க முடிந்தது.

ஒருநாள் தொடரை பொறுத்தவரை மெதிவ்ஸ், தரங்க சோபிக்கவில்லை. லஹிரு திரிமான்ன தனது அனுபவ ஆட்டத்தை காட்டி இருந்தார். அவரது முன்னேற்றம் ஒருநாள் போட்டிகளில் அணி நல்ல பாதையை நோக்கி செல்வதற்கான சமிக்ஞையை காட்டியுள்ளது.

புனித பத்திரிசியார் கல்லூரிக்கு நெருக்கடி தந்த அஷான் டேனியல்

அசேல குணரத்ன சகலதுறை வீரராக முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு பின் வரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்கிறார். அவர் காயத்தால் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. அவரது இடத்திற்கு வந்த மிலின்த சிரிவர்தன சிறந்ததொரு பந்துவீச்சு தேர்வு என்பதையும் முக்கிய நேரங்களில் ஓட்டங்கள் பெறுபவர் என்பதையும் நிரூபித்துள்ளார்.  

2. அனைத்து போட்டிகளிலும் சோபித்த நிரோசன் திக்வல்ல

அதிகம் கவரக் கூடிய துடுப்பாட்ட வீரராகவும் எல்லா பந்துகளிலும் ஓட்டங்களை தேடுபவராகவுமே திக்வல்லவை பார்க்க முடியும். அதேபோன்று அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் முதல் நிலை விக்கெட் காப்பாளராகவும் அவர் தம்மை நிரூபித்துள்ளார்.

அவர் இந்தியாவுடனான தொடர் முழுவதும் ஓட்டங்களை பெற்றவராக இருந்ததோடு தைரியமாக பந்துகளுக்கு ஓட்டங்களை குவிப்பவராகவும் தன்னைக் காண்பித்துள்ளார். எனினும் அவர் மிக விரைவில் விக்கெட்டை பறிகொடுப்பவராக இருந்ததை தொடர் முழுவதிலும் பார்க்க முடிந்தது.

களத்தடுப்பில், விக்கெட்டுக்கு பின்னால் ஒரு சுறுசுறுப்பான விக்கெட் காப்பாளராக, திறமையாக பந்தை தடுப்பதோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கைவிடாதவராகவும் உள்ளார். இந்த பண்புகள் இலங்கை அணிக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தையே காட்டுகிறது.  

தற்போதைய நிலையில் திக்வல்ல ஒரு விக்கெட் காப்பாளராக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் எவ்வாறு செயற்படுகிறார் என்பது குறித்து அவதானத்துடன் இருப்பது அவசியமாகும். எனவே அவரை நல்ல முறையில் கையாள்வது அவசியம் என்பதோடு அதிக சுமைகளை சுமத்துவது பாதகமாகவே முடியும்.  

1. அகில தனன்ஜய அடுத்த அஜன்த மெண்டிஸா?

2008 ஆம் ஆண்டு அஜன்த மெண்டிஸ் தனது கன்னி டெஸ்டில் இந்தியாவை எதிர்கொண்டபோது அவரது பந்துவீச்சு இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு மாயமாக இருந்ததை மறந்திருக்க மாட்டார்கள். அந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மெண்டிஸ் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணியால் அந்த டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸால் வெல்ல முடிந்தது.  

அகில தனன்ஜய  
அகில தனன்ஜய

காலம் போகப்போக மெண்டிஸின் புதிர் பந்துவீச்சை அலசி ஆராய்ந்த எதிரணியினர் அவருக்கு முகம்கொடுக்க பழகிக் கொண்டார்கள். இது அவர் தேசிய அணியில் இருந்து விடுபடுவதற்கு காரணமானது.

எனினும் இந்திய அணி தற்போது வலுவாக இருப்பது மட்டுமல்ல அதன் துடுப்பாட்ட வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு திறமையாக முகம்கொடுக்கின்றனர்.

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அணித் தலைவர் கோலி, ராகுல் மற்றும் ஜாதவ் என்று இந்திய துடுப்பாட்ட வரிசையை சாய்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

எம்.எஸ் தோனி மற்றும் புவனேஷ்வர் குமாரின் எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம் கைகொடுக்காவிட்டால் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றிருக்கும்.

இந்த பந்து வீச்சை தவிர்த்து பார்த்தால் ஒருநாள் தொடரில் தனன்ஜயவுக்கு இந்திய அணி ஒப்பீட்டளவில் அதிக நெருக்கடி இல்லாமல் துப்பெடுத்தாடியது. ஆனால் அவரது பந்து வீச்சு தொடர்ந்து எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருப்பதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியதாகவும் உள்ளது.

உண்மையில் இலங்கை அணி மற்றொரு மெண்டிஸை கண்டுபிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு விரைவாக பதில் கூற முடியாதிருக்கிறது. தனன்ஜயவின் தொடர்ச்சியான ஆட்டத் திறமையே அதனை நிரூபிக்கும். எப்படி இருந்தாலும் இப்போதைய தருணத்தில் தனன்ஜய இலங்கை அணியின் அதிக நம்பிக்கை தரும் வீரராக மாறிவிட்டார்.