டயலொக் ரக்பி லீக் தொடரின் மிகவும் தீர்க்கமான போட்டியில் ஹெவலொக் அணியை தோற்கடித்த கண்டி கழகம், சம்பியன் பட்டத்தை ஏறத்தாழ தக்கவைத்துக் கொண்டது. ஹெவலொக் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி 26-11 என நிறைவடைந்ததுடன், தரவரிசையில் இறுதி நிலையில் உள்ள CH & FC உடனான போட்டியை கண்டி கழகம் இலகுவாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அவ்வணியின் சம்பியன் பட்டம் உறுதியாகியுள்ளது.

இரண்டு அணிகளும் புள்ளி அட்டவணையில் சரி சமமான புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் இப்பருவகாலத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்திருந்தது. இன்று மாலை 6.30 மணிக்கு இரு அணிகளினதும் ரசிகர்கள் நிரம்பி வழிய ஹெவலொக் மைதானத்தில் போட்டி ஆரம்பமானது.

உபாதையிலிருந்து மீண்ட ரொஷான் வீரரத்ன அணிக்கு திரும்பியமையானது கண்டி கழகத்தை வலுப்படுத்தியிருந்தது. போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளுமே எதிரணியை மிஞ்சும் வண்ணம் புத்துணர்ச்சியுடன் ஆட்டத்தில் ஈடுபட்டன.

நான்காவது நிமிடத்தில் 40m தூரத்தில் ஹெவலொக் அணியினருக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்ததுடன் அதனை கம்பங்களை நோக்கி உதைக்க அவ்வணி முடிவு செய்தது. சுற்றுப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றோரின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள துலாஜ் பெரேரா, லாவகமாக உதைத்து ஹெவலொக் அணியின் முதல் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கண்டி கழகம் 00 – ஹெவலொக் அணி 03)

சில நிமிடங்களின் பின்னர் விதிமுறைக்கு மாறான ஆட்டம் காரணமாக ஹெவலொக் வீரர் ஹிரந்த பெரேரா மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு 10 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டார். அதன் போது கிடைத்த பெனால்டி உதையை கண்டி அணியின் திலின விஜேசிங்க தவறவிட்டார். எவ்வாறாயினும் அதனை ஈடுசெய்த திலின விஜேசிங்க 12ஆவது நிமிடத்தில் ட்ரொப் கோல் ஒன்றின் மூலம் மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கண்டி கழகம் 03 – ஹெவலொக் அணி 03)

அடுத்த சில நிமிடங்களுக்கு இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்துடன் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்த போதிலும் இரண்டு அணிகளினாலும் புள்ளிகளை பெற முடியவில்லை. இந்நிலையில் ஹெவலொக் அணியின் நட்சத்திர வீரர் துலாஜ் பெரேரா உபாதை காரணமாக வெளியேற, அவ்வணி பலத்த பின்னடைவை சந்தித்தது.

சிறிது நேரம் கழித்து கண்டி வீரர்கள் சிறப்பான பந்து கைமாற்றல்களின் மூலம் ட்ரை கோட்டினை நோக்கி முன்னேறினர். எனினும் பந்தினை கைப்பற்றிய ஹெவலொக் அணி எதிர்த்தாக்குதல் நடத்தி எதிரணியின் பாதிக்குள் முன்னேறியது. பலமிக்க முன்வரிசை வீரர்களை கொண்டு ‘ரோலிங் மோல்’ மூலம் ஹெவலொக் அணி ட்ரை கோட்டினை கடந்த போதிலும் கண்டி வீரர்களின் விவேகமான தடுப்பாட்டத்தின் காரணமாக பந்தினை கீழே வைக்க முடியவில்லை. இதனால் புள்ளிகளில் மாற்றமேதும் ஏற்படவில்லை.

எதிரணியை போன்றே தமது பாதியினுள் இருந்து எதிர் தாக்குதல் நடத்திய கண்டி கழகம், அபாரமான நகர்வொன்றின் மூலம் வெற்றிகரமாக போட்டியின் முதல் ட்ரையினை வைத்தது. அணித்தலைவர் ரொஷான் வீரரத்ன பந்தினை ட்ரை கோட்டினை நோக்கி உதைக்க, அதனை துரத்திப் பிடித்து அசத்தலான ட்ரை ஒன்றினை ரிச்சர்ட் தர்மபால பெற்றுக் கொடுத்தார். திலின விஜேசிங்க உதைத்த கொன்வெர்சன் உதை கம்பத்தில் பட்டு வெளியேறியது. (கண்டி கழகம் 08 – ஹெவலொக் அணி 03)

அடுத்து ஹெவலொக் அணியினருக்கு உதைக்கக் கூடிய தூரங்களில் சில பெனால்டி வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், துலாஜ் பெரேரா களத்தில் இல்லாமை காரணமாக அவ்வணி கம்பத்தை நோக்கி உதைக்க முடிவு செய்யவில்லை. எவ்வாறாயினும் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் ராகுல் டி சில்வாவைக் கொண்டு பெனால்டி ஒன்றினை உதைக்க ஹெவலொக் அணி தீர்மானித்தது. அவர் வெற்றிகரமாக உதைக்க, புள்ளி வித்தியாசம் இரண்டாக குறைந்தது. (கண்டி கழகம் 08 – ஹெவலொக் அணி 06)

முதல் பாதி நிறைவு பெறும் தருவாயில் தவறுதலான தடுப்பாட்டம் காரணமாக கண்டி அணியின் ரொஷான் வீரரத்ன மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

முதல் பாதி : கண்டி விளையாட்டு கழகம் 08-06 ஹெவலொக் விளையாட்டு கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கண்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப் பெற்றதுடன், மீண்டுமொருமுறை திலின விஜேசிங்க உதையினை தவறவிட்டார். இரண்டாம் பாதியின் முதலாவது ட்ரையினை பெற்றுக் கொள்ள ஹெவலொக் அணிக்கு சிறப்பான வாய்ப்பு ஒன்று கிடைத்த போதிலும், தவறான நகர்வொன்றின் காரணமாக அவ்வாய்ப்பு தவறவிடப்பட்டது. அதனை போன்றே கண்டி அணியினரும் ட்ரை கோட்டிற்கு 5m தூரத்தில் பந்தை கையாள்வதில் தவறிழைத்ததினால் ட்ரை வாய்ப்பு கை நழுவிப்போனது.

போட்டியின் 56ஆவது நிமிடத்தில் கண்டி கழகம் தமது இரண்டாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. முன்கள வீரர் தமித் திஸாநாயக்க சிறப்பான ஓட்டத்தின் பின்னர் இடப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். பந்தை கீழ் வைத்தமை தொடர்பில் தெளிவின்மை காரணமாக தொலைக்காட்சி நடுவரின் உதவி பெறப்பட்டதுடன், அவர் ட்ரையினை உறுதி செய்தார். இம்முறையும் திலின விஜேசிங்க உதையினை தவறவிட்டு ஏமாற்றமளித்தார். (கண்டி கழகம் 13 – ஹெவலொக் அணி 06)

இதுவரை போட்டியில் பெரிதும் கவனத்திற்குள் வராமல் இருந்த தனுஷ்க ரஞ்சன், தனது அபாரமான வேகத்தின் மூலம் ட்ரை ஒன்றினை வைத்து கண்டி அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். இதன் மூலம் அதிக ட்ரைகள் பெற்றுக் கொண்டோரின் பட்டியலில் தனுஷ்க ரஞ்சன் தனது முதலிடத்தை உறுதி செய்து கொண்டார். கடினமான கொன்வெர்சன் உதை திலின விஜேசிங்கவினால் தவறவிடப்பட்டது. (கண்டி கழகம் 18 – ஹெவலொக் அணி 06)

67ஆவது நிமிடத்தில் அற்புதமாக எதிரணியின் தடுப்பை ஊடுருவி, நான்கு தடுப்பு வீரர்களை மீறி முன்னேறிய நிஷோன் பெரேரா ட்ரை ஒன்றினை பெற்று ஹெவலொக் அணிக்கு நம்பிக்கையளித்தார். எனினும் ராகுல் டி சில்வாவின் கொன்வெர்சன் உதை குறிதவறியது. (கண்டி கழகம் 18 – ஹெவலொக் அணி 11)

ஏழு புள்ளிகளே வித்தியாசமாக காணப்பட்டதால் ஹெவலொக் அணி இறுதி நிமிடங்களில் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொள்ள பலத்த முயற்சியை மேற்கொண்டது. எனினும் பந்தினை பெற்றுக் கொண்ட கண்டி அணியின் விஸ்வமித்ர ஜயசிங்க சற்றும் எதிர்பாராதவாறு அசத்தலான வேகத்துடன் அனைத்து தடுப்பு வீரர்களையும் தாண்டி  முன்னேறினார். ஆனால் ட்ரை கோட்டினை கடந்த நிலையில் அவர் பந்தினை தவறவிட, வெற்றியை உறுதி செய்வதற்கான சந்தர்ப்பம் வீணாகியது.

76ஆவது நிமிடத்தில் போட்டியின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய பெனால்டி உதையை திலின விஜேசிங்க உதைத்து கண்டி அணிக்கு மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். எனினும் இப்போட்டியில் வழமைக்கு மாறாக கம்பங்களை நோக்கி உதைப்பதில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலின விஜேசிங்க, தனக்கு கிடைத்த 9 வாய்ப்புகளில் வெறும் 3 உதைகளையே வெற்றிகரமாக உதைத்திருந்தார். (கண்டி கழகம் 21 – ஹெவலொக் அணி 11)

வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விட்ட நிலையில் ஹெவலொக் வீரர்கள் சற்று மந்தமான விளையாட்டுப் பாணியில் ஈடுபட, அதனை பயன்படுத்திக் கொண்ட கண்டி வீரர் ஸ்ரீநாத் சூரியபண்டார ட்ரை ஒன்றை வைத்து கண்டி அணியின் வெற்றியையும், சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்தினார். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (கண்டி கழகம் 26 – ஹெவலொக் அணி 11)

முழு நேரம் : கண்டி விளையாட்டு கழகம் 26-11 ஹெவலொக் விளையாட்டு கழகம்

கண்டி கழகத்தை போன்றே ஹெவலொக் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும் துரதிஷ்டவசமாக உபாதைகள் மற்றும் ட்ரை வாய்ப்புக்கள் கைநழுவியதன் காரணமாக தோல்வியை சந்திக்க வேண்டியேற்பட்டது. அத்துடன் நடுவரின் சில முடிவுகளும் அவ்வணிக்கு எதிராக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் அவ்வணி பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் லீக் தொடரை முடித்துக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

ஹெவலொக் அணி இறுதி வாரத்திற்கான போட்டியில் மூன்றாம் நிலையிலுள்ள மற்றுமொரு பலம்பொருந்திய அணியான கடற்படை அணியை எதிர்கொள்ளவுள்ளது. கண்டி கழகமானது தரவரிசையில் இறுதி நிலையிலுள்ள CH & FC அணியுடன் மோதவுள்ளது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ஷெஹான் பதிரன (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளைப் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம் – 26

ட்ரை – ஸ்ரீநாத் சூரியபண்டார 1, தனுஷ்க ரஞ்சன் 1, ரிச்சர்ட் தர்மபால 1, தமித் திஸாநாயக்க 1

பெனால்டி – திலின விஜேசிங்க 1

ட்ரொப் கோல் – திலின விஜேசிங்க 1

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் – 11

ட்ரை –  நிஷோன் பெரேரா 1

பெனால்டி – துலாஜ் பெரேரா 1, ராகுல் டி சில்வா 1