2023 இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்

265

2023ஆம் ஆண்டானது உலக அரங்கைப் போல, இலங்கைக்கும் விளையாட்டுத்துறையில் சிறந்த ஆண்டாக அமைந்தது. அதில் சில மறக்கமுடியாத தருணங்கள் மற்றும் வரலாற்று சாதனைகள் பதிவாகின. மறுபுறத்தில் ஒருசில சோகமான சம்பவங்களும், சர்ச்சைகளும் கடந்த ஆண்டு அரங்கேறின.விளையாட்டுத்துறையில் சில வெற்றிகள், பல தோல்விகளுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் மாற்றம், தேர்வுக் குழு மாற்றம், தேசிய விளையாட்டுப் பேரவை உறுப்பினர்கள் மாற்றம் என அனைத்தும் கிரிக்கெட் அடிப்படையிலேயே அமைந்தன. ஆண்டின் ஆரம்பத்தில் அந்த நாற்காலிகளில் இருந்த பலர் இன்று அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில் இலங்கையின் 3 பிரதான விளையாட்டுகளுக்கு சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. அரசியல் தலையீடு, நிர்வாக சிக்கல் உள்ளிட்ட ஒருசில காரணங்களுக்காக இலங்கையின் கால்பந்து, றக்பி மற்றும் கிரிக்கெட் ஆகிய 3 சங்கங்களும் சர்வதேச அமைப்புகளால் தடைகளுக்கு உள்ளாகின. இதனால் குறித்த 3 விளையாட்டுகளும் பாரிய பின்னடைவை சந்தித்தன. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிறைவடைய முன்னர் குறித்த 3 சங்கங்களினதும் தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இலங்கையர்களால் பெரிதும் விரும்புகின்ற கிரிக்கெட் விளையாட்டானது கடந்த ஆண்டு மிகப்  பெரிய பின்னடைவை சந்தித்தது . ஆசியக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை வந்த இலங்கை அணி இந்தியாவிடம் தோற்நு சம்பியனாகும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 அணிகளில் 9ஆவது இடத்தைப் ப பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.2023இல் இலங்கை ஆடவர் அணி பல தோல்விகளை சந்தித்த அதேவேளை, கடந்த ஆண்டில் மகளிர் கிரிக்கெட் சில வரலாற்று வெற்றிகளைக் குவித்தனர். அதில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து வெளிப்படுத்திய திறமையை உலகம் முழுவதும் உணர முடிந்தது.அவரது தலைமைத்துவ திறமை மற்றும் சகலதுறை பிரகாசிப்பினால் இலங்கை மகளிர் அணிக்கு 7 T20I மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது. அதேபோல, 2023 இல், 8 ஒருநாள் மற்றும் 16 T20I போட்டிகளில் வெற்றி பெற்றனர்,குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் வைத்து இங்கிலாந்தையும், நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையிலும் வரலாற்று வெற்றிகளை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி குவித்தது.  அதன்படி 2023ஆம் ஆண்டானது இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் அரிய வெற்றிகளை பெற்ற ஆண்டாக கருதலாம்.உலகின் முதன்மையான மகளிர் பிரீமியர் லீக் போட்டியான பிக் பாஷ் மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தார் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் அல்ல.

>> 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் – ஒரு மீள்பார்வை

இதேவேளை, கடந்த ஆண்டு மெய்வல்லுனர் விளையாட்டிலும் இலங்கை வீரர்கள் பல வெற்றிகளைக் குவித்து அசத்தியிருந்தனர்.  அதிலும் குறிப்பாக, ஆசியாவை அதிரவைத்த 19 வயது பாடசாலை மாணவி தருஷி கருணாரத்னவின் சாதனைகள். வலள ஏ.ரத்நாயக்க கல்லூரியில் இருந்து மெய்வல்லுனர் விளையாட்டிற்கு காலடி வைத்த தருஷி கருணாரத்ன, கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவராக வரலாற்றில் இடம்பிடித்தார்.இதனிடையே, இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் ஓய்வும் கடந்த ஆண்டை பொறுத்தமட்டில் இலங்கையின் விளையாட்டுத்துறையில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியது.  எனவே 2023இல் விளையாட்டுத்துறையில் இலங்கை சாதித்தது என்ன?  விளையாட்டுத்துறையில் சாதித்த, சாதனைகளை முறியடித்த வீரர்கள் யார்? குறிப்பாக இந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் ஜொலித்த தமிழ் பேசும் வீரர்கள் யார்?  என்பதை  இந்த சிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜனவரி

* இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL)புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டார்.

* பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் போட்டித் தடையை ஏற்கனவே சந்தித்துள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷ ஏஷானுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

* இலங்கை கால்பந்து சம்மேளனத்தினை தடை செய்வதாக சர்வதேச கால்பந்து சம்மேளனங்களின் சங்கம் (FIFA)உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

* இலங்கை வலைபந்தாட்ட வரலாற்றில் வெற்றிகரமான பயிற்றுநர் என்ற பெயரையும் புகழையும் கொண்டிருக்கும் திலகா ஜினதாச மீண்டும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

* இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக லயன்நேஷன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்கின் நிர்வாக இயக்குநர் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டார்.

பெப்ரவரி

* சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவை மகளிர் கிரிக்கெட் வழிகாட்டியாகவும் மேம்பாட்டு ஆலோசகராகவும் இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது.

* இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டப் தொடரில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB)சம்பியனானக மகுடம் சூடியது.

* இலங்கை றக்பி சம்மேளனம் நடத்திய முதல் தர கழகங்களுக்கு இடையிலான றக்பி லீக் போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை தக்கவைத்து 23ஆவது தடவையாக சம்பியன் ஆனது.

மார்ச்

* அமெரிக்காவில் நடைபெற்ற 2023 ஆர்னோல்ட் கிளாசிக் உடற்கட்டுப் போட்டியில் இலங்கை வீரர் லூசியன் புஷ்பராஜ் 4 ஆம் இடத்தைப் பெற்றார்.

* டுபாயில் நடைபெற்ற 14ஆவது Fazza Dubai Grand Prix மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கை பாரா அணி 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என 4 பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

* பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை கபடி அணியின் தலைவராக கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரரான அஸ்லம் சஜா முதல் தடவையாக நியமிக்கப்பட்டார்.

* யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவானகினார்.

ஏப்ரல்

* கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை செஸ் சம்பியன்ஷிப் (2023) தொடரின் 9 வயதின் கீழ் திறந்த சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தெஹாஷ் ரித்மித கிரிங்கொட சம்பியனாக முடிசூடினார்.

* தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.16 மீட்டர் உயரத்தைத் தாவி சச்சின் எரங்க ஜனித் புதிய இலங்கை சாதனை படைத்தார்.

* உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையைப் பிரதிநிதித்ததுவப்படுத்தி பங்குகொண்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழாவொன்றில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

* இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார்.

மே

* நேபாளத்தில் நடைபெற்ற மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது.

* இலங்கை றக்பி சம்மேளனத்தினை தடை செய்வதாக சர்வதேச றக்பி சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

* பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.

* 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கடற்கரை கபடியில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் சார்பில் போட்டியிட்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமும், பெண்கள் பிரிவில் வட மாகாண அணியும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தன.

* இலங்கை மீதான பிஃபாவின் தடை நீக்கப்பட்டதன் பின்னர், தான் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைவர் சுஜான் பெரேரா அறிவித்தார்.

ஜுன்

* தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

* இந்திய கராத்தே சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பகிரங்க சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பில் பங்குகொண்ட கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி டி சனுஜா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

* தென் கொரியாவின் யெச்சியோன் விளையாட்டரங்கில் நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

* ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் வெண்கலப் பத்தக்கத்தை சுவீகரித்தார்.

* ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க வெற்றி கொண்டார்.

ஜுலை

* மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தபத்து பெற்றுக் கொண்டார்.

* தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட 19 வயது பாடசாலை மாணவியான தருஷி கருணாரத்ன, ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்து தங்கப் பதக்கம் வென்று புது வரலாறு படைத்தார்.

* 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கராத்தே போட்டிகளின் தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் தொடர்ச்சியாக 9ஆவது தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றார்.

* இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

* 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மேல் மாகாண அணியை வீழ்த்தி கிழக்கு மாகாண அணி 9 ஆண்டுகளின் பிறகு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

* பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி தொடரையும் 0–2 என முழுமையாக இழந்தது.

* 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண அணியை வீழ்த்தி வட மாகாண அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

* தாய்லாந்தின் தாய்பேயில் நடைபெற்றுவரும் ஆடவருக்கான ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சவுதி அரேபியாவை வீழ்த்திய இலங்கை அணி 13ஆவது இடத்தை பிடித்துக்கொண்டது.

* பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட தினேஷ் பிரியன்தவும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 பிரிவில் பங்குகொண்ட சமித்த துலானும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

ஆகஸ்ட்

* தென்னாப்பிரிக்காவின் நடைபெற்ற 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை ஒரே ஒரு வெற்றியுடன் ஒட்டுமொத்த நிலையில் 16ஆவது இடத்தைப் பெற்றது.

* இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடையை நீக்குவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA)உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

* இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் சிரேஷ்ட வீராங்கனைகளில் ஒருவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

* மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நடைபெற்ற ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் நிலுபுல பெஹசர வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

* 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா, 5 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டிச் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

* இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனையான நதீகா லக்மாலி, 23 ஆண்டு கால தனது மெய்வல்லுனர் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.

* மாளிகாவத்தை யூத் அணியை வீழ்த்தி கொழும்பு கால்பந்து கழகம் சிடி கால்பந்து லீக் தலைவர் கிண்ணம் 2023 தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

* 47ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மேல் மாகாணம் தட்டிச் சென்றது.

* இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற சியட் கிரிக்கெட் விருது விழாவில் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆண்டின் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளராக விருதை தட்டிச் சென்றார்.

* டயலொக் பாடசாலை ரக்பி லீக் இறுதிப் போட்டியில் இசிபத்தன கல்லூரியை வீழ்த்தி பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி 13 ஆண்டுகளின் பின்னர் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

* 4ஆவது லங்கா பிரீமியர் லீக் தொடரி்ன் இறுதிப்போட்டியில் தம்புள்ள ஓரா அணியை வீழ்த்தி பி-லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியாகத் தெரிவாகியது.

* சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹஸரங்க அறிவித்தார்.

செப்டம்பர்

* 2022இல் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்.

* சீனாவின் ஹான்சு நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிற்காக அறிவிக்கப்பட்ட இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டார்.

* ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 19 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

* இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றி ஒன்றை பதிவு செய்து புது வரலாறு படைத்தது.

ஒக்டோபர்

* இங்கிலாந்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலகக் கிரிக்கெட் குழு தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டார்.

* சீனாவின் ஹான்சு நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் 18 வயது இளம் வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

* இலங்கை அணிக்கு உற்சாகமூட்டி வந்த பிரபல ஆதரவாளர் பேர்சி அபேசேகர தனது 87ஆவது வயதில் காலமானார்.

* சீனாவின் ஹான்சு நகரில் இடம்பெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு விழாவில் பங்குகொண்ட இலங்கை அணி, 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 8 பதக்கங்களை வென்று அசத்தியது.

* 2026 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் யெமனுக்கு எதிரான இரண்டாவது கட்ட போட்டியை இலங்கை கால்பந்து அணி 1–1 என சமநிலை செய்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் எட்டாவது போட்டியில் குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் பெற்று ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதிவேக சதம் பெற்ற இலங்கை வீரராக சாதனை படைத்தார்

* பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

* டயலொக் அனுசரணையில் கொழும்பில் நடைபெற்ற மத்திய ஆசிய ஆடவர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

* இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட ‘800’ திரைப்படம் வெளியிடப்பட்டது.

நவம்பர்

* இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபை ஒன்றை நியமித்தார்.

* அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடிய இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அந்தத் தொடரின் நாயகியாக தெரிவாகியுள்ளார்.

* கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் அல்–அஷ்ரக் தேசிய பாடசாலையின் 15 வயதுக்கு உட்பட்ட அணி தங்கப் பதக்கம் வென்றதோடு அதன் 18 வயதுக்கு உட்பட்ட அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

* இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்கள் காரணமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த, 19 வயதுக்குட்பட்ட ICC இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

* இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க ஐசிசி கனவு அணியில் இடம்பிடித்தார்.

* சர்வதேச கிரிக்கெட் சபையின் உயரிய விருதான ஹோல் ஒப் பேம் கெளரவம் இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவிற்கு வழங்கப்பட்டது.

டிசம்பர்

* இலங்கை ஒருநாள் அணித் தலைமை பொறுப்பை குசல் மெண்டிஸிடமும், டி20 தலைமைப் பொறுப்பை வனிந்து ஹசரங்கவிடமும் வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்தது.

* 20 வயதின் கீழ் பிரிவு – 1 பாடசாலை அணிகளுக்கான ”தி போல் பிளாஸ்டர் – 2023 (The Ball Blaster 2023)” கால்பந்து தொடரின் சம்பியன்களாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை தெரிவாகியது.

* டுபாயில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும், வேகப் பந்துவீச்சாளர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய ரூபாய்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியாலும் வாங்கப்பட்டனர்.

* இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார்.

* பொலன்னறுவையில் நடைபெற்று வரும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்கர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

* இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவி்ன் புதிய தலைவராக முன்னாள் வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டார்.

* இலங்கை கபடி சம்மேளனம், இலங்கை வில் வித்தை சங்கம், இலங்கை மல்யுத்த சம்மேளனம், இலங்கை பிரிட்ஜ் சம்மேளனம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஆகிய 5 விளையாட்டு சம்மேளனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

* 2024இல் நடைபெறவுள்ள தெற்காசி கால்பந்து சம்மேளன (SAFF)ஆடவர் கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்க களுத்துறை, புளு ஸ்டார் அணி தகுதி பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<