ஸாஹிராவில் நூற்றாண்டு விழா றக்பி தொடர்

113

மருதானை, ஸாஹிரா கல்லூரியின் 100ஆவது ஆண்டு றக்பி நிறைவை கொண்டாடும் வகையில் 14 பாடசாலை அணிகள் பங்கேற்கும் அணிக்கு ஏழு பேர் கொண்ட றக்பி தொடர் ஒன்றை நடத்தவுள்ளது.

உள்ளூர் பாடசாலை றக்பி வரலாற்றில் 100 ஆண்டு கால வரலாற்றைப் பூர்த்தி செய்த நான்காவது பாடசாலையாக திகழும் மருதானை ஸாஹிரா கல்லூரி, அதைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி திருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய பாடசாலைகள் தவிர 100 ஆண்டுகள் றக்பி வரலாற்றைக் கொண்ட பாடசாலையாக மருதானை ஸாஹிரா கல்லூரியும் விளங்குகிறது.

1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸாஹிரா கல்லூரி றக்பி, இலங்கை தேசிய றக்பி அணிக்கு 24 வீரர்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கையின் பிரதான பாடசாலைகளுக்கிடையிலான லீக் றக்பி போட்டித் தொடரில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மருதானை ஸாஹிரா கல்லூரியின் றக்பி விளையாட்டுக்கு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ‘ஸாஹிரா நூற்றாண்டு விழா றக்பி செவன்ஸ் போட்டித் தொடர்’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டிலுள்ள 14 முன்னணி பாடசாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வெளிநாட்டுப் பாடசாலைகள் பங்குபற்றுகின்ற இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவின் Leicester Tigers Sports Club உடன் உலகளாவிய ஒத்துழைப்புப் பங்காளியாக அண்மையில் இணைந்து கொண்ட

இப்பாடசாலை, றக்பி விளையாட்டுக்கு மட்டுமன்றி இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கவுள்ளது. இதனால் ஸாஹிரா கல்லூரி வீரர்களுக்கு மட்டுமன்றி நாடு பூராகவும் றக்பி விளையாடும் பல பாடசாலைகளுக்கும் றக்பி பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருதானை, ஸாஹிரா கல்லூரி றக்பி விளையாட்டின் 100ஆவது ஆண்டு றக்பி நிறைவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள றக்பி செவன்ஸ் போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று அண்மையில் ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இதில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர றக்பி வீரர் டேவிட் காம்பேஸி கலந்துகொண்டார். இவருக்கான அனுசரணையை டயமண்ட் பெஸ்ட் புட்ஸ் நிறுவனம் Diamond Best Food (Roza and Diamond Milk Powder) வழங்கியது.

அதுமாத்திரமின்றி, டயமண்ட் பெஸ்ட் புட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹமட் அலி நூற்றாண்டு விழா ரக்பி செவன்ஸ் தொடருக்கான அனுசரணை காசோலையை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்காரிடம் கையளித்தார்.

>> Photos – Zahira Rugby Centenary Year | Press Conference

இதேவேளை, ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழா ரக்பி செவன்ஸ் தொடருக்கு இலங்கை றக்பி சம்மேளனம், இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனனம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் டயமண்ட் பெஸ்ட் புட்ஸ் நிறுவனம் ஆகியன பூரண ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<