பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

Para Olympic

146
Mahesh Jayakodi Paralympic athlete
 

இம்மாதம் 24ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டுதல் (Rowing) விளையாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மஹேஷ் பிரியமால் ஜயகொடி தெரிவாகியுள்ளார். 

இந்த வாய்ப்பை இலங்கை பெற்றிருப்பது முதல் முறை என்பதோடு இந்த விளையாட்டில் ஆசிய பிராந்தியத்தில் இருந்து பங்கேற்கும் ஒரே வீரர் மஹேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதியுடன் வெளியேறிய தருஷி, மெதானி

கடந்த மே மாதம் டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான ஆசிய பிராந்திய தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றது. அதில் நான் முதல் இடத்தை பெற்று பாராலிம்பிக்கில் பங்கேற்க தகுதியை பெற்றேன். இந்தப் போட்டியில் ஆசியாவில் வலுவான நாடுகள் என்று கருதப்படும் ஜப்பான் அல்லது சீனா போன்ற நாடுகளின் வீரர்களும் பங்கேற்றிருந்தபோதும், அவர்கள் இதற்காக தகுதி பெறவில்லை. ஆசிய பிராந்தியத்தில் நான் மாத்திரம் தான் தகுதி பெற்றேன். இவ்வாறு தகுதி பெற்றதை வெற்றி ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இதன்மூலம் இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்கு முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று மஹேஷ் ஜயகொடி ThePapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியை ஆரம்பித்தார். 

மஹேஷ் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் இடுப்பிற்கு கீழ் உடல் பாதிப்புக்கு உள்ளான 34 வயதானவராவார். அவர் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதில் அவர் படகோட்டுதல் இரட்டை துடுப்பு ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார்.   

நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக பயிற்சிகளை சரியாக செய்ய முடியாமல்போனது. ஆனால் தகுதிகாண் போட்டியை இலக்காகக் கொண்டு கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் எனக்கு முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் பயிற்சிகளில் ஈடுபட்டேன். அதிக அர்ப்பணிப்பு, உழைப்பில் ஈடுபட்டேன். அன்று தொடக்கம் இன்று வரையும் வீட்டுக்கு போகக்கூடவில்லை. வெளி விடயங்கள் எதுவும் மனதில் இல்லை. இருப்பது எல்லாம் இந்தப் போட்டிக்கு நல்ல மனநிலையுடன் பங்கேற்று எமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மாத்திரம்தான்.’ 

மஹேஷ் இன்று படகோட்டுதல் விளையாட்டுக் காரணமாக அதிக வேலைப்பலுவுடன் அதிக நேரம் கொழும்பு இராணுவ விடுதியில் இருந்தபோதும், அவரது ஊர் குருநாகல் – தொடம்கஸ்லந்த. அவர் பாடசாலை சென்றது தொடம்கஸ்லந்த மத்திய கல்லூரிக்கு.

மஹேஷின் குடும்பத்தில் அவர் தான் ஒரே பிள்ளை. மஹேஷின் தாய் மாக்ரட் விஜேசூரிய, மஹேஷுக்கு 7 வயதாக இருக்கும்போது மரணித்துள்ளார். அன்று தொடக்கம் மஹேஷுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருப்பது அவரது தந்தை ரன்ஜன் ஜனகொடி. அவருக்கு தெரிந்த காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்தார். போகத்திற்கு போகம் கூலிக்கு விவசாய வேலைகளை செய்தார். அதில் அப்படிப் பெரிதாக பணம் கைக்கு வருவதில்லை. ஆனால் மஹேஷின் தந்தைக்கு வேறு செய்வதற்கு என்று எதுவும் இருக்கவில்லை. சொத்து என்று சொல்வதற்கு ஓலைக் கூரையிலான மண் வீடு தான் இருந்திருக்கிறது.  

டோக்கியோ பாராலிம்பிக் இலங்கை அணிக்கு டயலொக் அனுசரணை

தாய் இல்லாத பிள்ளையை வளர்க்கும் பொறுப்பும் மஹேஷின் தந்தைக்கு இருந்த நிலையில், கூலிக்கு வேலைக்கு போவதும் சரியாக இடம்பெறவில்லை. அதனால் வீட்டில் பற்றாக்குறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. மஹேஷ் பாடசாலைக்குச் செல்வதும் ஒழுங்காக இடம்பெறவில்லை. என்ன இல்லாவிட்டாலும் ஏழ்மை என்பது மஹேஷுக்கு குறைவின்றி இருந்தது. 

ஒரு மழையில் எமது வீடு இடிந்து விழுந்து விட்டது. அப்பாவுக்கும் எனக்கும் இருப்பதற்கு இருந்த இடமும் இல்லாமல்போய்விட்டது. அம்மாவின் தம்பி என்னை அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பாவுக்கு இருக்க இடமில்லாததால் கூலி வேலைக்கு கொழும்புக்கு சென்றார்.’

மஹேஷின் கும்பம் இவ்வாறு கலைந்து போக அவர் தனது மாமாவான சஹன் விஜேசூரியவின் வீட்டில் தான் வளர்ந்தார். காலையில் மாமாவின் வீட்டில் இருந்து பாடாசலைக்குச் சென்ற மஹேஷ் மாலையில் மாமாவின் கடைக்கு வேலைக்குப் போனார். 

நான் அந்த நாட்களில் பாடசாலைக்குச் செல்வதை விட கடையில் வேலை பார்ப்பதையே விருப்பத்தோடு செய்தேன்என்கிறார் மஹேஷ். 

பாடசாலைக்கு செல்வதை விடவும் இப்போதும் தம்மை பின்தொடரும் வறுமையில் இருந்து தப்புவதற்கு வழி தேடவே மஹேஷ் அதிக நாட்டம் காட்டினார். அப்போது சாதாரண தர வகுப்பில் இருந்த மஹேஷுக்கு இராணுவத்தில் இணைவதே ஒரே கனவாக இருந்தது.  

ஊரில் தெரிந்த அண்ணன் ஒருவர் இராணுவத்தில் விசேட அதிரடிப்படையில் இருந்தார். அவர்தான் சாதாரண தர பரீட்சையை எழுதி முடிக்கும்படியும் அதற்கு பின்னர் இராணுவத்தில் இணைய முடியும் என்றும் கூறினார்.’ 

Mahesh Jayakodyஅந்த செய்தி மஹேஷின் வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. மஹேஷ் 2007 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து மாதுருஓய விசேட அதிரடிப் படை பயிற்சிக்கு சேர்ந்தார். 

எனக்கும் அப்பாவுக்கும் ஒன்றாக இருக்க வீடு ஒன்றை கட்டுவதே எனது வாழ்வின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். ஏழ்மையால் இவை எல்லால் கனவாக இருந்தது. அதனால்தான் இராணுவத்தில் இணைந்தேன். அப்பாவிடமும் அதற்கு எதிர்ப்பு இருப்பவில்லை.’  

ஓர் ஆண்டு பெற்ற பயிற்சிக்குப் பின்னர் சேவையில் இணைந்தார் மஹேஷ். ஆனால் 2009 ஏப்ரல் 07 ஆம் திகதி மஹேஷ் தனது வாழ்நாளில் முகம்கொடுத்த துரதிஷ்டமான நிகழ்வை சந்தித்தார்.   

Mahesh Jayakodyஅன்று நாம் 8 பேர் கொண்ட குழுவாக புதுக்குடியிருப்பு முன்னரங்கு பகுதியை சோதித்துக்கொண்டிருந்தோம். திடீரென்று தோன்றிய பயங்கரவாதக் குழுவுடன் நாம் எதிரெதிரே சண்டை போட்டோம். எம்மில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சையின்போது இருவர் உயிரிழந்தார்கள். நானும் மற்றொருவரும் உயிர்வாழ அதிர்ஷ்டம் செய்திருந்தோம்.’ 

ஆனால் அப்போது மஹேஷின் பெயர் இராணுவத்தின் பதிவில் வலது குறைந்த வீரராகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் முக்கிய சிகிச்சை பிரிவில் 6 மாதங்களுக்கு அதிக காலம் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். 

வீடு ஒன்றை கட்டுவதற்கு இராணுவத்தில் இணைந்த எனக்கு விடுமுறைக்குச் செல்ல வீடு ஒன்று இருக்கவில்லை. எனது பெரியம்மாவின் வீட்டுக்கே சென்றேன். உடல் பாதிப்புக்கு மத்தியில் துப்புரவு ஏற்பாடுகளை செய்ய முடியுமான வசதி பெரியம்மா வீட்டில் மாத்திரம் தான் இருந்தது.’   

பெரியம்மாவான சுஜீதா விஜேசூரிய, மஹேஷுக்கு இரண்டாவது தாயாராக இருந்தார். இவ்வாறு சில காலம் கடந்தபோது மஹேஷுக்கு சக்கர நாற்காலியில் இருந்து ஏதாவது செய்ய முடியுமான காலத்தில் தந்தையோடு சேர்ந்து வீடு ஒன்றை கட்டும் தமது பெரிய எதிர்பார்ப்பை நிறைவேற்ற செயற்பட்டார்.

முடியுமான அளவுக்கு ஒரு அறை, சமையலறை மற்றும் குளியலறை ஒன்றை கட்டிமுடித்தோம். இப்போதும் அப்பா இருப்பது அந்த வீட்டில். எனக்கு எத்தனையோ விடயங்கள் இல்லாமல்போனாலும் அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறியது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்’ என்கிறார் மஹேஷ்.

Mahesh Jayakodyஇதற்கிடையே ரணவிரு செவனவில் மேலதிக சிகிச்சைக்காக ஈடுபட்டார். 

அங்கே இராணுவ பாரா போட்டிகளில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் சக்கர நாற்காலி போட்டிகளில் பங்கேற்றேன். பாடசாலை செல்லும் காலத்தில் எல்லே விளையாடக் கூடப் போகாத நான் உடல் ஊனமுற்ற பின்னர் தான் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தேன். 2012 ஆம் ஆண்டு முதலாவது போட்டியில் பங்கேற்றேன். வெற்றி பெற முடியாமல்போனது. அதற்குப் பின் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 5 ஆண்டுகளாக 100 மற்றும் 200 மீற்றரில் தங்கப் பதக்கம் வெல்ல என்னால் முடிந்தது.’   

அந்தப் போட்டிகளில் பதக்கம் வென்றாலும் மஹேஷ் தனது சரியான விளையாட்டை தேர்வு செய்தது 2015 ஆம் ஆண்டில்தான்.  

அந்தக் காலத்தில் நான் அநுராதபுரம் அபிமங்சல வலதுகுறைந்தோர் புனர்வாழ்வு முகாமில் இருந்தேன். அங்கு பொறுப்பான இருந்தவர் கேணல் பந்துல பண்டார சேர். அவர் பாரா குழுவின் தலைவர் ஜெனரல் அம்பமொஹட்டி சேரிடம் என்னை அனுப்பினார். வலதுகுறைந்தோருக்கான படகோட்டப்போட்டி ஆரம்பமானது அந்தக் காலப்பகுதியில் தான். அதற்கு தேர்வு செய்யப்பட்ட முதலாமவர் நான்தான்.’ 

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதிக்கு முன்னேறிய தருஷி

அதன்படி இந்த நாட்டில் இருக்கும் முன்னணி படகோட்டப்போட்டி பயிற்சியாளர் லசந்த வலிதர அவர்களிடம் மஹேஷ் அனுப்பப்பட்டார். 

அந்த ஆண்டிலேயே சீனாவில் இருந்த படகோட்ட பயிற்சி முகாம் ஒன்றில் நான் பங்கேற்றேன். சிறந்த பயிற்சி ஒன்றை பெற்றேன். பயிற்சியின் பின் இருந்த போட்டி ஒன்றில் நான் 4ஆவது இடத்தை பிடித்தேன். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பதை விட எனக்கு இது சற்று விருப்பத்தை தந்தது. இலங்கை வந்து லசந்த சேருடன் பயிற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டேன். சக்கர நாற்காலி போட்டிகள் தானாக விடுபட்டுப்போனது.’ 

மஹேஷ் படகோட்டுதல் விளையாட்டை இந்நாட்டில் ஆரம்பித்து பங்கேற்ற காலத்தில் அவருக்கு தேவையான அளவு வசதிகள் ஆரம்ப காலத்தில் இருக்கவில்லை. அவர் பயிற்சி பெற்றது உள்ளக அரங்குகளில் இயந்திரங்கள் மூலம் தான்.

2017 ஆம் ஆண்டு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த மஹேஷ் சேனநாயக்க அவர்களிடம் நான் விடுத்த கோரிக்கைக்கு அமைய எனக்கு இந்த விளையாட்டில் பங்கேற்க உயர் தரமான படகு ஒன்றை கொண்டுவந்து தந்தார். அதனை நான் இராணுவ படகோட்ட குழாத்துடன் இணைந்து தியவன்னாவ குளத்தில் படகோட்டும் பயிற்சிக்கு பயன்டுத்தினேன்.’

பயிற்சிக்கு இடையே மஹேஷ் இத்தாலியில் இடம்பெற்ற உலக வலதுகுறைந்தோர் படகோட்டப் போட்டியில் பங்கேற்றார். அதில் திருப்தி அளிக்கும் முடிவு ஒன்றை பெறுவதற்கு மஹேஷினால் முடியாமல்போனது. ‘அப்போது சரியாக பயிற்சியில் பற்கேற்க ஆரம்பித்தது மாத்திரம்தான்’ என்று குறிப்பிடுகிறார் மஹேஷ். 

அதற்கு பின் மஹேஷ் 2018 ஆம் ஆண்டு பல்கேரியாவில் இடம்பெற்ற உலக வலதுகுறைந்தோர் படகோட்டப் போட்டியில் பங்கேற்றார். அதில் அவர் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினார். தொடர்ந்து அவர் 2019 இல் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய வலதுகுறைந்தோர் படகோட்ட சம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.   

நான் இதுவரை வந்த பயணம் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இராணுவத்தில் இருந்து தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றன. இராணுவத் தளபதி அதிகம் உதவுகிறார். இராணுவ பாரா குழு, இராணுவ விசேட அதிரடிப்படை கமாண்டர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அதிக பங்களிப்புச் செய்கிறார்கள். அதேபோன்று பயிற்சியாளர் லசந்த வெலிகல அவர்கள் என்னை இந்த நிலைமைக்கு அழைத்து வர அதிகம் உழைத்தார். எனது வெற்றியின் பின்னால் இவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்.’   

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் இருப்பது சில நாட்களே. அதற்கு பின்னர் இடம்பெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கும் மஹேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்த இரு போட்டிகளிலும் இந்நாட்டின் பெயரை கௌரவப்படுத்துவதற்கு மஹேஷினால் முடியும் என்று ThePapare.com ஆகிய நாம் பிரார்த்திப்போம்.  

டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களையும் உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com   தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com  உடன் இணைந்திருங்கள்.

மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு…