ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் சம்பியனாகுமா இலங்கை?

234
Sri Lanka vs Netherlands Final Preview

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இருக்கும் இறுதி சவால் இந்த தொடரின் இறுதிப் போட்டியாகும்.  

அதன்படி தகுதிகாண் தொடரில் இதுவரை தோல்வியடையாத இலங்கை கிரிக்கெட் அணி நாளை (09) ஹராரேவில் வைத்து தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தினை எதிர்கொள்கின்றது. 

கவனிக்க வேண்டிய விடயங்கள்

கிரிக்கெட் வல்லுனர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளே அதிக சவால் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

>> தோல்வியின்றி உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை

எனினும் இந்த அணிகளை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அதிகம் எதிர்பார்க்கப்படாத நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற அணிகளிடம் துடுப்பாட்டத்தில் அதிக சவால்களை எதிர்கொண்டிருந்தது. இதிலும் குறிப்பாக நெதர்லாந்திடம் இலங்கை அணிக்கு துடுப்பாடும் போது அதிக சவால்கள் மற்றும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன. உண்மையில் இலங்கை அணி இந்த தகுதிகாண் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராகவே குறைவான மொத்த (213) ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பயிற்சிப் போட்டியிலும் இலங்கை வீரர்கள் நெதர்லாந்துக்கு எதிராக துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காண்பித்திருந்தனர். 

விடயங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த தகுதிகாண் தொடரில் சிறப்பாக செயற்பட்ட அணியொன்றுடனேயே இலங்கை இறுதிப் போட்டியில் ஆடவிருக்கின்றது. எனவே தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு மிகப் பெரும் சவால் காத்திருக்கின்றது.  

இலங்கை அணி  

முழுமையாக இந்த தொடரில் பந்துவீச்சாளர்கள் மூலம் ஆதிக்கம் காட்டிய இலங்கை அணி அதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகியிருக்கின்றது. இலங்கை அணியினைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இலங்கை அணியின் பெரும் நம்பிக்கையாக தொடரில் இருந்ததோடு தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முதல் இரண்டு இடங்களில் காணப்படுகின்றனர். இந்த வீரர்களின் சேவை நாளைய நெதர்லாந்து மோதலிலும் இலங்கை அணிக்கு தேவையாக இருக்கும்.

>> பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்

மறுமுனையில் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசியிருக்கின்றார். மறுமுனையில் திமுத் கருணாரட்னவின் ஆட்டமும் நிதானமான முறையில் காணப்படுகின்றது. இரு வீரர்களும் நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை ஒருநாள் அணிக்கு கிடைத்த சிறந்த ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக மாறியிருக்கின்றனர்.  

மறுமுனையில் அணித்தலைவராக தசுன் ஷானக்க இலங்கை அணியினை சரியான பாததையில் வழிநடாத்த தொடங்கியிருக்கின்றார். தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இறுதியாக மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் தற்போது தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றது. அதேநேரம் நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றி மூலம் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பதிவு செய்து அதன் மூலம் இலங்கை அணியினை ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக தடவைகள் வெற்றிக்கு அழைத்துச் சென்ற மற்றுமொரு தலைவராக மாறுவதற்கான அரிய வாய்ப்பினை தசுன் ஷானக்க பெற்றிருக்கின்றார். தசுன் ஷானக்க ஒரு வீரராகவும் குறிப்பாக துடுப்பாட்டத்தில் கைகொடுப்பது அவரினை இன்னும் பெறுமதிமிக்க தலைவராக மாற்றும் என்பதில் சந்தேகம் கிடையாது.  

அத்துடன் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மோதலில் களத்தடுப்பில் சில தவறுகளை மேற்கொண்டிருந்தது. அந்த விடயங்களையும் இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் சரிப்படுத்த முயல வேண்டும். இல்லையெனில் அது எதிரணி வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிட முடியும். 

>> உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான 10ஆவது அணியாக நெதர்லாந்து

இலங்கை அணியில் ஏற்படப் போகும் மாற்றங்களை நோக்கும் போது மேற்கிந்திய தீவுகள் மோதலில் ஓய்வு வழங்கப்பட்ட தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணிக்குள் மீள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எதிர்பார்க்கப்படும் இலங்கை குழாம் 

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, மதீஷ பத்திரன 

நெதர்லாந்து அணி 

இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் இம்முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாமல் போனமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நெதர்லாந்து கிரிக்கெட் அணி காணப்படுகின்றது.  

அந்தவகையில் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து மற்றுமொரு உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வாய்ப்பினை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி மூலம் மீண்டும் பெற்றிருக்கின்றது. இலங்கை அணியினை இதுவரை ஒருநாள் போட்டியொன்றில் நெதர்லாந்து தோற்கடிக்காத போதும் அதற்கான ஆற்றல் கொண்ட வீரர்கள் அவ்வணியில் காணப்படுகின்றனர்.  

அணியின் துடுப்பாட்டசகலதுறைவீரராக இருக்கும் பாஸ் டி லீடே அணியில் அதிக எதிர்பார்ப்புமிக்க ஒருவராக காணப்படுகின்றார். ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான சுபர் சிக்ஸ் போட்டியில் சதம் விளாசிய அவர் பின்னர் பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இவர்கள் தவிர அணியின் தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ், வெறும் 20 வயது மாத்திரம் நிரம்பிய விக்ரமஜித் சிங் ஆகியோர் அவ்வணியின் ஏனைய துடுப்பாட்ட நம்பிக்கைகளாக காணப்படுகின்றனர். இந்த இரண்டு வீரர்களும் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்டவீரர்களாக காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் தென்னாபிரிக்க வம்சாவளி வீரரான மெக்ஸ் ஓடோவ்ட் உம் அணிக்கு பெறுமதி சேர்க்க கூடிய மற்றுமொரு துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றார்.     

அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது பாஸ் டி லீடே உடன் இணைந்து லோகன் வான் பீக் வேகப்பந்துவீச்சாளராக பலமளிக்க, ஆர்யன் தத் மற்றும் சகீப் சுல்பிகார் போன்றோர் பிரதான சுழல்வீரர்களாக காணப்படுகின்றனர்.  

>> கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவிலிருந்து வெளியேறிய பர்விஸ் மஹரூப்

நெதர்லாந்து அணி ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட அதே குழாத்துடன் இலங்கையையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

எதிர்பார்க்கை நெதர்லாந்து குழாம் 

விக்ரமஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பரேஸி, பாஸ் டி லீடே, தேஜா நிடாமனுரு, ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), சகீப் சுல்பிகார், லோகன் வான் பீக், ஆர்யான் தத், கிளய்டன் ப்ளோய்ட், ரியான் கிளய்ன் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<