அனுபவ வீரராக டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் சம்பத்

Para Olympic

266

2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றிருப்பவர் சம்பத் ஹெட்டியாரச்சி. இறுதியாக, 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களில் சம்பத்தும் உள்ளார்.

‘அடுத்தடுத்து இரண்டு பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்திருப்பதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக தற்போது உச்ச கட்டமாக பயிற்சி பெறுகிறேன். கடந்த பாராலிம்பிக் போட்டியின் அனுபவத்துடன் இம்முறை நாட்டிற்காக பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கிறேன்’ என்று சம்பத் ThePapare.com இற்கு தனது செவ்வியை ஆரம்பித்தார்.   

டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதிப்பார்களா இலங்கை நட்சத்திரங்கள்?

சம்பத்தின் ஊர் கிதுல்ஹிட்டியாவ, ராமதெகல. கெகிராவையில் இருந்து 16 மைல் தூரம். அக்கா உள்ள கும்பத்தில் இளையவர் சம்பத். தந்தை ஜோர்ஜ் அலெக்சாண்டர் விவசாயம் செய்தார். தாய் எம்.எம். சீலவத்தி. அவர் கல்வி அலுவலகத்தில் சேவையாற்றினார்.   

சம்பத் பாடசாலை சென்றது கெகிராவ மத்திய மஹா வித்தியாலயத்திற்கு. பாடசாலை செல்லும் காலத்தில் விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டது என்றால் அது இல்ல மட்டப் போட்டியில் மாத்திரம் தான். கற்றது சாதாரணதரம் வரை தான்.  

‘பாடசாலை செல்லும் காலம் தொடக்கம் இராணுவத்தில் இணைவது பற்றிய எதிர்பார்ப்போடு இருந்தேன். வீட்டிலும் அதைத் தான் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால், வீட்டில் அதற்கு விருப்பம் காட்டவில்லை. ‘உண்பதற்கு, குடிப்பதற்கு தருகிறேன் வீட்டுக்காகி இரு’ என்று தான் அப்பா கூறுவார். ஆனால் நான் எனது திட்டத்தை கைவிடவில்லை. சாதாரணதரம் முடிவுற்ற உடன் நான் இராணுவத்தில் இணைவதற்கு வீட்டுக்குத் தெரியாமல் விண்ணப்பித்தேன்.’ 

சம்பத் இராணுவத்தில் இணைந்தது இவ்வாறாகும். அழைப்புக் கடிதம் வந்தாலும் சம்பத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் சம்பத் தமது திட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை. அவர் வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாக இராணுவ பயிற்சியில் இணைந்தார். அதன்படி அவர் புத்தளம், சிங்கவில்வத்த விஜயபா பயிற்சி முகாமிற்கு சேர்ந்தார். 

‘பயிற்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு பின்னர் வீட்டுக்கு கடிதம் அனுப்பினேன். அம்மாவும் அப்பாவும் என்னை பார்க்க வந்தார்கள். வரும்போது பெரிதாக அதிருப்தியை காட்டவில்லை. ஆனால் மனதுக்குள் அவர்களுக்கு பெரிதாக விருப்பம் இருக்கவில்லை என்பது புரிந்தது. ஆனால் இராணுவத்தில் இருந்து விலகும்படி ஒருநாளும் கூறியதில்லை. 3 மாதங்கள் பயிற்சிக்குப் பின் 5ஆவது விஜயபா காலாற்படைப் பிரிவுடன் யாழ்ப்பாணம் சென்றேன். அது எனது முதல் படை நடவடிக்கையாக இருந்தது.’  

பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

அதன் பின் சம்பத் கிலாலி, முகமாலை போன்ற வட மாகாணத்தின் பகுதிகளில் 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றினார். 2008 டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பத் ஒரு காலை இழந்து உடல் குறைபாட்டுக்கு உள்ளானார். 

அதன்படியே சம்பத் F64 முழங்காலுக்குக் கீழ் கால் அகற்றப்பட்ட பிரிவில் பாரா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகிறார். 

சம்பத்திற்கு ஏற்பட்ட அந்த விபத்தை தாயும் தந்தை அழுத கண்களோடேயே பொறுத்துக்கொண்டார்கள். தேவாலயங்களுக்கு நேர்த்திக்கடன்கள் பட்டு சம்பத் உடல் சுகம்பெற பிரார்த்தித்தார்கள். பெற்றோரின் விருப்பம் இன்றி இராணுவத்தில் இணைந்தது பற்றி அன்று தான் சம்பத் திட்டுக்கும் பேச்சுக்கும் முகம்கொடுத்தார. சம்பத் அதனை அதிகம் பொருட்படுத்தவில்லை. எத்தனைதான் திட்டினாலும் சம்பத்திற்கு தேவையானவற்றை செய்வதற்கு அவர்கள் தவறவில்லை. 

‘பலாலிக்கு வரும் வரை நான் எதனையும் தெரிந்திருக்கவில்லை. அதற்கு அடுத்த நாளே என்னை கொழும்பு பொது வத்தியசாலைக்கு மாற்றினார்கள். அதற்கு பின்னர் பல மாதங்கள் இராணுவ வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றேன். அம்மாவும், அப்பாவும், வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் மாறி மாறி என்னை பார்க்க வந்தார்கள். வீட்டுக்கு வர அழைத்தார்கள். ஆனால் எனக்கு இராணுவத்தை விட்டு வர மனது விரும்பவில்லை. பின்னர் ராகம ரணவிரு செவனவில் செயற்கை கால் பொருத்தி நடக்கப் பழகினேன்.’ 

ஓரளவுக்க நடக்க பழகிய பின் சம்பத் போகானே, சிங்கவில்லு போன்ற விஜயபா படைப்பிரிவு முகாம்களில் பணியாற்றினார். அதனை சம்பத் விருப்பத்துடன் செய்தார். பெற்றோர் மீண்டும் அமைதியானார்கள். சம்பத்திற்கு விருப்பமானதை செய்ய வழிவிட்டார்கள்.  

‘கால் ஒன்று இல்லை என நான் எந்த சந்தர்ப்பத்திலும் உணரவில்லை. எனக்குத் தேவையாக இருந்தது ஏதாவது வேலை செய்வதாகும். இதற்கிடையே நான் விளையாட்டில் ஈடுபட்டேன். அலுதெனிய சேர் தான் என்னை விளையாட்டில் ஈடுபடுத்தினார்.’

சம்பத் ஒற்றைக் காலோடு கிரிக்கெட் ஆடினார். கரப்பந்தாட்டம் ஆடினார். அதற்கிடையே ஈட்டியெறிதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் குண்டு எறிதல் விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். இவ்வாறு சிறிது காலம் விளையாட்டில் ஈடுபட்டபோது சம்பத்திற்கு ஈட்டி எறிதல், பரிதிவட்டம் மற்றும் குண்டு எறிதலில் அதிக நாட்டம் ஏற்படுகிறது. அந்த எறிதல்கள் நல்லபடி இருந்தன. சம்பத் இராணுவத்தின் வலதுகுறைந்தோர் படையணியின் திறமைமிக்க வீரராக மாறினார். 

சம்பத் 2012 ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற திறந்த பாரா மெய்வல்லநர் போட்டியில் பங்கேற்று பரிதிவட்டம் எறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அது தான் சம்பத்தின் முதலாவது சர்வதேச போட்டியாக இருந்தது.   

அதன் பின் 2013 ஆம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற திறந்த பாரா மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2014 ஆம் ஆண்டு கொரியாவில் இடம்பெற்ற ஆசிய பாரா மெய்வல்லுநர் போட்டியில் பரிதிவட்டம் எறிதலில் 4ஆவது இடத்தையும், ஈட்டி எறிதலில் 8ஆவது இடத்தையும் பெற்றார்.   

தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டோஹா கட்டாரில் இடம்பெற்ற உலக பாரா மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்பேற்பதற்கு தகுதி பெற்று அதில் பங்குபற்றியபோதும் அதில் அவருக்கு முன்னிலை இடம் ஒன்று கிடைக்கவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு டுபாயில் இடம்பெற்ற ஆசிய பிராந்திய பாரா மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்று ஈட்டி எறிதலில் நான்காவது இடத்தை வென்று அந்த ஆண்டிலேயே பிரேசிலில் இடம்பெற்ற ரியோ பாராலிம்பிக் விழாவில் பங்கேற்க தகுதி பெற்றார். அதுவும் ஈட்டி எறிதல் போட்டிக்காகவாகும்.  

வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

‘அது எனது முதலாவது பாராலிம்பிக் அனுபவம். நான் எனது உச்ச திறமையை வெளிப்படத்தினேன். ஆனால் 9ஆவது இடத்தையே பெற முடிந்தது. முடியுமான வரை விளையாட்டில் ஈடுபடுவது என்று அன்று நான் நினைத்துக்கொண்டேன். ஏனைய விளையாட்டுகளை மறந்து ஈட்டி எறிதலில் அவதானத்தை செலுத்தினேன்.’

அதன் பின்னர் சம்பத் 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய பாரா மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2019 ஆம் ஆண்டு டுபாயில் இடம்பெற்ற உலக பாரா மெய்வல்லுநகர் போட்டியில் பங்கேற்று 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த ஆண்டு டுபாயில் இடம்பெற்ற World Para Athletics Grand Prix போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றார்.

‘நன்றாக பயிற்சி பெற்றேன். கொரோனா நிலை காரணமாக சில நாட்கள் பயிற்சி தவறியது. ஆனால் நல்ல தயார் நிலையில் இருக்கிறேன். எனது பயிற்சியாளர் பிரதீப் நிஷாந்த அவர்கள் எனக்காக அதிக அர்ப்பணிப்போடு செயற்படுகிறார். எம்மைப் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது வேறு ஒருவருக்கு பயிற்சி அளிப்பது போலல்ல. ஆனால் அவர் விருப்பத்தோடு அர்ப்பணிப்புடன் எனது முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார். அதேபோன்று இராணுவத் தளபதி உட்பட விஜயபா படைப்பிரிவின் அனைவரும், பாராலிம்பிக் குழுவின் அனைவரும் விளையாட்டு அமைச்சர் உட்பட விளையாட்டு அமைச்சுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்கிறார் சம்பத் ஹெட்டியாரச்சி. 

சம்பத் வாழ்வது பெற்றோர்களுடன் கெகிராவையில். அவருக்கு 14 வயதான அன்புக்குரிய மகள் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் செஹன்சா தம்சிறி ஹெட்டியாரச்சி. ஆரம்பத்தில் பாடசாலை சென்ற தம்புள்ளை வீர மொஹத் ஜயமஹா வித்தியாலாயத்திற்கு. 5ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற அவர் பின்னர் கண்டி மகளிர் உயர் நிலை வித்தியாலயத்திற்கு இணைகிறார். அதில் ஹொக்கி அணி தலைவியாவதற்கு அவரால் முடிகிறது. ஆனால் கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் சம்பத்தின் தாய், தந்தையரின் நிழலில் வளர வேண்டும் என்பதற்காக கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்க்கப்படுகிறார்.    

பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

‘நான் தொடர்ந்து வீட்டில் இல்லை. அதிக நேரம் இருப்பது கொழும்பில். மகளும் அதிக காலம் பாடசாலை சென்றது விடுதியில் தங்கியிருந்து. ஆனால் தற்போதைய சூழலில் மகள் வீட்டுக்கு வெளியில் இருப்பதை அம்மாவும் அப்பாவும் விரும்பவில்லை. அதனால் அவர் அம்மா மற்றும் அப்பாவுடன் வீட்டில் இருக்கிறார். அவர்கள் எனது விளையாட்டுடன் அதிக நெருக்கமாக உள்ளனர். அது பற்றி எப்போதும் கேட்டறிந்து கொள்கிறார்கள். அவர்கள் தான் உடல் ஊனமுற்ற எனது உலகம்’ என்கிறார் சம்பத். 

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழா தற்போது ஆரம்பித்துள்ளது. இந்நாட்டின் பெயரை கௌரவமான இடத்திற்கு இட்டுச் செல்வது சம்பத்தின் முயற்சியாகும். அது வெற்றிபெற வேண்டும் என்று ThePapare.com ஆகிய நாம் வாழ்த்துகிறோம்.   

டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களை உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com   தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com  உடன் இணைந்திருங்கள்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<