மே.தீவுகளுடன் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பிக்கும் நியூசிலாந்து

106

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தங்களுடைய இந்த பருவகாலத்துக்கான கிரிக்கெட் தொடர்களை எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி மேற்கிந்திய தீவுகளுடனான தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது. 

இந்த பருவகாலத்துக்கான போட்டித் தொடர், மேற்கிந்திய தீவுகளுடன் ஆரம்பிக்கப்படும் நிலையில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் அடுத்தடுத்த மாதங்களில் நியூசிலாந்துக்கு செல்லவுள்ளன. 

மீண்டும் பிற்போடப்படும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்!

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தலா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளது.

நியூசிலாந்துக்கு முதலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 T20I போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், பாகிஸ்தான் அணி டிசம்பரில் 3 T20 போட்டிகளில் விளையாடுவதுடன், பொக்சிங் தினத்தில் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது. 

பின்னர் நியூசிலாந்து அணி, தங்களுடைய இந்த பருவகாலத்தில் எதிர்வரும் பெப்ரவரி 21 முதல் மார்ச் 7ம் திகதிவரை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 T20I போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், பங்களாதேஷ் அணி மார்ச் 13ம் திகதியிலிருந்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்காக நியூசிலாந்து செல்கிறது.

குறித்த இந்த தொடர்கள் தொடர்பில் அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வைட், “இந்த தொடர்களை நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கான நிதியினை திரட்டிக்கொள்ள வேண்டும். அதேநேரம், கடினமான காலப்பகுதியிலும் கிரிக்கெட்டின் மீது பற்றுக்கொண்டுள்ள ரசிகர்களுக்காக போட்டிகள் நடத்தப்பட வேண்டும்” என்றார். 

Video – விராட் கோலி செய்த தவறு என்ன? | Cricket Galatta Epi 37

அதேவேளை, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரொன்றுக்கு தயாராகிவரும் அவுஸ்திரேலிய அணி, அதே காலப்பகுதியில் நியூசிலாந்துக்கு T20I அணியொன்றை அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டமைக்கு டேவிட் வைட் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நியூசிலாந்து டெஸ்ட் அணி இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாடவுள்ளதுடன், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் எதிர்வரும் ஆண்டு விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<