ஷஹீன் அப்ரிடியின் நிலைமை குறித்து மகிழ்ச்சியான செய்தி

ICC T20 World Cup 2022

259

காயத்தில் இருந்து பூரண குணமடைந்துள்ள பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் அணியுடன் 15ஆம் திகதி இணையவுள்ள அவர், T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன் நடைபெறவுள்ள 2 பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 தொடர், இங்கிலாந்து தொடர் மற்றும் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு T20i தொடர் ஆகியவற்றிலிருந்து ஷஹீன் அப்ரிடி விலகினார். எனினும், T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றார்.

எனினும், காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் மீண்டும் முழு உடல் தகுதியை பெறும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் காயத்திலிருந்து ஷஹீன் அப்ரிடி குணமாகி முழு உடற்தகுதியை அடைந்து விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அப்ரிடி பங்கேற்பார் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டது குறித்து கருத்து தெரிவித்த ஷஹீன் அப்ரிடி, ”கடந்த 10 நாட்களாக என்னால் 6 முதல் 8 ஓவர்கள் வரை சிக்கலின்றி பந்துவீச முடிந்தது. அதுவும் முழு ஓட்ட வேகத்துடன் வீச முடிந்தது. அணியுடன் இல்லாமல் இருந்த நாட்களை வெறுமையாக உணர்ந்தேன். வலையில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை மகிழ்ச்சியுடன் செய்தாலும் உண்மையான போட்டி சூழ்நிலை என்பது உற்சாகமானது” என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக ஷஹீன் அப்ரிடி அமைந்தார். இதில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி ஆகிய மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.

இதனால் இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஷஹீன் அப்ரிடி சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முழங்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பகர் ஸமானும் உடல் தகுதி பெற்று விட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஒக்டோபர் 17ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும், ஒக்டோபர் 19ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<