இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

84
 

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் குழாம் இன்று (21) அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது உறுதி

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள்….

இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே, பாகிஸ்தானின் ஒருநாள் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய தேர்வாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஒருநாள் குழாத்தில் நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் சகலதுறை வீரர் மொஹமட் நவாஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் இப்திகார் அஹ்மட் ஆகியோர் வாய்ப்பினை பெற்றுள்ளனர். 

முதல் தடவையாக இடம்பெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜொலித்ததன் மூலம் முன்னதாக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட 25 வயதேயான மொஹமட் நவாஸ், ஒரு சகலதுறை வீரராக சிறப்பாக செயற்படாததனை அடுத்து பாகிஸ்தான் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் பின்னர் இழந்திருந்தார். எனினும், அண்மையில் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் சதம் விளாசியது நவாஸிற்கு தேசிய அணியில் மீண்டும் இடத்தினை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. 

மறுமுனையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியொன்றில் விளையாடிய இப்திகார் அஹ்மட் இந்த ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்று முடிந்த உள்ளூர் ஒருநாள் தொடரில் சதங்கள், அரைச்சதங்கள் என அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தி பாகிஸ்தான் ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.

இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்களான சஹீன் அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோருக்கு இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் சஹீன் அப்ரிடி தனக்கு ஏற்பட்ட டெங்கு நோய் காரணமாகவும், ஹசன் அலி முதுகு உபாதை காரணமாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். 

இவர்கள் தவிர உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிரேஷ்ட சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த சொஹைப் மலிக் ஆகியோர் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் அணியில் இல்லாமல் போகும் ஏனைய வீரர்களாக அமைகின்றனர். 

சர்பராஸ் அஹ்மட் மூலம் வழிநடாத்தப்படும் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் அதன் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் முன்னணி வீரர்களாக பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், ஆஸிப் அலி மற்றும் பக்கார் சமான் ஆகியோர் காணப்படுகின்றனர். 

இதேநேரம் பாகிஸ்தான் தரப்பிற்கு சகலதுறை வீரர்களாக ஹரிஸ் சொஹைல் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் உள்ளனர். வஹாப் ரியாஸ், மொஹமட் ஹஸ்னைன் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக பாகிஸ்தான் அணிக்கு உறுதி வழங்க, சதாப் கான் பிரதான சுழல் பந்துவீச்சாளராக இருக்கவுள்ளார். 

அகில தனன்ஜயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில…

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் போட்டிகள் யாவும் கராச்சியில் இடம்பெறவுள்ளதோடு, ஒருநாள் தொடரின் பின்னர் இரண்டு அணிகளும் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஓக்டோபர் 05 ஆம் திகதி லாஹுரில் ஆரம்பமாகவுள்ளது. 

பாகிஸ்தான் ஒருநாள் அணிக்குழாம்

இமாம்-உல்-ஹக், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பக்கார் சமான், ஆபித் அலி, பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், ஆசிப் அலி, மொஹமட் றிஸ்வான், இமாத் வஸீம், மொஹமட் நவாஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், உஸ்மான் ஷின்வாரி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<