டேவிட் ஒசாஜி, அஹமட் சஸ்னி மற்றும் நிரான் கனிஷ்கவின் கோல்களின் உதவியுடன் கொழும்பு கால்பந்துக் கழகம் சொலிட் விளையாட்டுக் கழகத்தை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன்மூலம் டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016இன் சுப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியை கொழும்பு அணி பதிவு செய்தது.

பலம் பொருந்திய சொலிட் விளையாட்டுக் கழகம் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் கடற்படை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்தது. மறுமுனையில் கொழும்பு கால்பந்துக் கழகம் நிவ் யங்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டது.

அதேபோன்று, இத்தொடரின் முதலாம் சுற்றான குழுமட்டப் போட்டிகளில் சொலிட் விளையாட்டுக் கழகம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு அணியை வெற்றி கொண்டிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி களனி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக முடிவடைந்த புளு ஸ்டார், விமானப்படை இடையிலான போட்டி 

சொலிட் அணியின் ஒரு சில முன்னணி வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. அதேபோன்று, கொழும்பு அணியின் நட்சத்திர வீரர் சர்வானுக்கும் போட்டியின் ஆரம்பத்தில் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

போட்டியின் ஆரம்பம் முதலே நடப்புச் சம்பியனான கொழும்பு கால்பந்துக் கழகம் ஆதிக்கத்தை செலுத்தியது. கொழும்பு அணியின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சொலிட் அணி சற்று பின்னடைவை சந்தித்தது.

குறிப்பாக, கொழும்பு அணியின் முன்கள வீரர் டேவிட் ஒசாஜி சொலிட் அணியின் பின்கள வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் துவான் ரிஸ்னியின் அபாரமான உள்ளீட்டை டேவிட் ஒசாஜி ஹெடர் மூலம் கோலாக்கினார்.

தொடர்ந்து சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய கொழும்பு கால்பந்துக் கழகம் பல வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், அவர்களால் மற்றுமொரு கோலினை அடிக்க முடியாமல் போனது.

மறுமுனையில் சொலிட் அணியினர் முதல் பாதியிலேயே நிரஞ்சனிற்கு பதிலாக குலரத்னவினை மைதானத்திற்குள் கொண்டு வந்தனர். எனினும் அவர்களால் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது.

முதல் பாதி: சொலிட் விளையாட்டுக் கழகம் 00 – 01 கொழும்பு கால்பந்துக் கழகம்

இரண்டாம் பாதி ஆட்டத்தை சொலிட் விளையாட்டுக் கழகம் சிறப்பாக ஆரம்பித்தது. நடுக்கள வீரரும், சொலிட் அணியின் தலைவருமான எடிசன் பிகுராடோ தனது வழமையான ஆட்டத்தை இன்றும் வெளிக்காட்டினார்.

எனினும் கொழும்பு கால்பந்து கழகம் சளைக்காமல் கவுண்டர் அட்டாக் மூலம் மற்றொரு கோலைப் போட எத்தணித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சளைக்காமல் மாறி மாறி மைதானத்தின் முன்னும் பின்னும் முன்னேறி விளையாடின. இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் சரிசமமான கோல் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் பிரபல நட்சத்திர வீரர் சர்வான் ஜோஹர், கோல் அடித்த டேவிட் ஒசாஜிக்குப் பதிலாக மைதானத்தினுள் நுழைந்தார்.

ஒரு கட்டத்தில் வீரர்கள் தளர்வாக விளையாடத் தொடங்கினர். பலர் சோர்வடையத் தொடங்கியதால் போட்டி கலையிழக்கத் தொடங்கியது. குறிப்பாக சொலிட் அணியின் வீர்களின் விறுவிறுப்பு மந்தமான நிலையிலேயே காணப்பட்டது.

எனினும் வீரர்களின் சோர்வான வாய்ப்பை லாவகமாக பயன்படுத்திய கொழும்பு அணியின் அஹமட் சஸ்னி 69ஆவது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலினைப் பெற்றார்.

அதன்பின்பு மேலும் சிறப்பாக விளையாடிய கொழும்பு அணி ஒரு சில வாய்ப்புகளை உருவாக்கியது. 85 நிமிடங்கள் கடந்த நிலையில் இளம் வீரர் நிரான் கனிஷ்க இறுதி நேரத்தில் கொழும்பு அணியின் மூன்றாவதும் போட்டியின் இறுதியுமான கோலைப் பெற்றுக்கொண்டார்.

வெற்றியின் பின் கொழும்பு கால்பந்துக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி கருத்துத் தெரிவிக்கையில், “சென்றபோட்டியில் மிகவும் திரிபடைந்து விளையாடினோம். அதனை திருத்தி புதிய திட்டங்களை வகுத்து விளையாடி இன்று வெற்றியும்பெற்றோம். எதிர்வரும் போட்டிகளில் பல புதிய திட்டங்களை கையாளும் எண்ணம் உள்ளது. எமது பின்கள வீரர் ஒருவர்இல்லாததனால் தலைவர் பின்கள வீரராக களமிறங்கினார். அது எமக்கு சாதகமாக இறுதியில் அமையப்பெற்றது” என்றார்.

பின்னர் சொலிட் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் மொஹமட் ஜஸ்மின் பேசுகையில், “எமது முக்கிய வீரர்கள் ஐந்து பேர்உபாதை மற்றும் வேறு காரணங்களால் விளையாடவில்லை. மேலும் தேசிய அணியில் நான் என்னை ஈடுபடுத்தியதால் பயிற்சிகளும்சரிவர நடைபெறவில்லை. ஆனால் வீரர்கள் தம்மால் இயன்றளவு சிறப்பாக விளையாடினர்” என்றார்.

முழு நேரம்: சொலிட் விளையாட்டுக் கழகம் 00 – 03 கொழும்பு கால்பந்து கழகம்

ThePapare.com சிறப்பாட்டக்காரர்: அஹமட் சஸ்னி (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்  

டேவிட் ஒசாஜி 31’, அஹமட் சஸ்னி 69’, நிரான் கனிஷ்க 89’