பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் அக்கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவ்வணியின் முன்களத்தின் வேகம் குறைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப பீவீபீ டோர்ட்மண்ட் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் தேசிய அணியின் முன்கள வீரரான 20 வயதுடைய ஒஸ்மானே டேம்பல்லேவை பார்சிலோனா தம்மோடு இணைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்

பிரேஸில் கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மர் டி சில்வாவை உலக சாதனை தொகையான..

ஸ்பெய்ன் நாட்டின் பிரபல்யம் வாய்ந்த கழகங்களில் ஒன்றான பார்சிலோனாவின் முக்கிய வீரர்களுல் ஒருவரான நட்சத்திர வீரர் நெய்மர் 2017/18 ஆம் பருவகாலம் முதல் ஜேர்மன் நாட்டின் மிகப் பிரபல்யம் வாய்ந்த பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துடன் 222 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தமிட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகிலே மிகப் பெறுமதியான வீரர் என்ற பட்டத்தையும் நெய்மர் தனதாக்கிக்கொண்டார்.

நெய்மர் பார்சிலோனா கழகத்தை விட்டு விலகியதானது அக்கழகத்தின் முன்களத்திலே பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாக இறுதியாக பார்சிலோனா அணி கலந்துகொண்ட போட்டிகளின் முடிவுகள் போதுமானவையாகும். இதனால் ஆதரவாளர்கள் அவ்வணியின் நிர்வாகத் தலைவரான ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் மெரியா பார்தோமியுடன் சற்று கோபத்துடனே காணப்படுகின்றனர்.

நெய்மரின் இடைவெளியை நிரப்புவதற்காக பார்சிலோனா நிர்வாகம் பிரபல இளம் வீரர்கள் பலரை தமக்காக கையொப்பமிட முயற்சிக்க தவறவில்லை. அவர்களுல் இத்தாலி வீரரும், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்தின் மத்தியகள வீரருமான மார்கோ வேராட்டி, லிவர்பூல் மற்றும் பிரேசில் நாட்டின் மத்தியகள வீரரான பீலிப் கடீனீயோ மற்றும் பீவீபீ டோர்ட்மண்ட் அணியினதும், பிரான்ஸ் தேசிய அணியினதும் முன்கள வீரர் ஒஸ்மானே டேம்பல்லே ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவர்களுல் 20 வயதான பிரான்ஸ் நாட்டு வீரர் டேம்பல்லேவை பார்சிலோனா அணி 105 மில்லியன் யுரோக்களுக்கு பீவீபீ டோர்ட்மண்ட் அணியிடமிருந்து ஒப்பந்தமிடவிருப்பதாக அவ்வணியின் வலைத்தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2016/17 இற்கான UEFA இன் விருதுகளை வென்றோர் விபரம்

UEFA யின் 2016/17 ஆம் பருவகாலத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இம்முறையும்..

1997ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி பிறந்த டேம்பல்லே கடந்த பருவகாலம்(2016/17) முதல் டோர்ட்மண்ட் அணிக்காக விளையாட கையொப்பமிட்டார். இதற்கு முன்னர் பிரான்ஸ் கழகமான ஸ்டெட் ரெனாய்ஸ் கால்பந்துக் கழகத்திற்காக அவர் விளையாடினார். கடந்த ஒரு பருவகாலத்தில் பார்சிலோனா அணி நிர்வாகத்தின் கவனத்தை மட்டுமன்றி, பிரான்ஸ் கால்பந்து ஒன்றியத்தின் கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரராக இவர் உள்ளார்.

டேம்பல்லே பிரான்ஸ் தேசிய அணி வீரராக 2016 செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இத்தாலிக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் களமிறங்கி, தனது முதல் சர்வதேச அறிமுகத்தைப் பதிவு செய்தார். அத்துடன் 2017 ஜுன் மாதம் 13ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் தனது நாட்டிற்கான தனது முதல் கோலைப் பதிவு செய்து அப்போட்டியில் அணிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்.

மிக லாவகமாகவும் மற்றைய வீரர்களை விட வேகமாகவும் எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டிச் சென்று கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுக்கும் திறமை வாய்ந்த ஒரு வீரராக டேம்பல்லே அடையாளம் காணப்பட்டு வருகிறார். முன்களத்திலே வலது பக்கம், இடது பக்கம் மற்றும் மத்தியில் என மூன்று இடங்களிலும் விளையாடக்கூடிய இவரால் இரு பாதங்களாலும் ஒரே வகையில் விளையாட முடியுமாய் இருப்பதும் ஓரு சிறப்பம்சமாகும்.

கடந்த பருவகாலத்தில் மட்டும் 103 தடவை வெற்றிகரமாக தனது ட்ரிப்ளிங் (Dribbling) திறமை மூலம் எதிரணியின் பின்கள வீரர்களை திணறடிக்க செய்துள்ளார்.  இந்தச் சாதனையானது பூன்டஸ்லீகா (Bundesliga) சுற்றுப் போட்டியில் எந்தவொரு வீரராலும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

நெய்மர் மீது வழக்குத் தொடுத்த பார்சிலோனாவுக்கு எதிராக முறைப்பாடு

அண்மையில் பிரான்ஸின் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்கு மிகப் பெரிய தொகைக்கு..

மேலும், டேம்பல்லே கடந்த பருவகாலத்தில் மட்டும் 49 போட்டிகளில் பங்குபற்றி டோர்ட்மண்ட் அணிக்காக 10 கோல்களையும், 20 தடவைகள் தனது அணி கோல்களை பெறுவதற்காக உதவிய வீரராகவும் காணப்படுகின்றார். தனது இளமைப் பருவத்திலேயே பார்வையாளர்களை தனது திறமையால் மெய்சிலிர்க்க வைத்துள்ள டேம்பல்லேவை வரவேற்க பார்சிலோனா அணியின் ஆதரவாளர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27ஆம் திகதி) டேம்பல்லே பார்சிலோனா நகருக்கு வருவதாகவும், திங்களன்று நடைபெறவிருக்கும் வைத்திய பரிசோதனையின் பின்னர் பார்சிலோனா கழகத்துடன் ஓப்பந்தமிட்டுக் கொள்வார் என்றும் பார்சிலோனா நிர்வாகம் தனது தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவுத்துள்ளது.

லியொனல் மெஸ்ஸி மற்றும் லுயீஸ் சுவாரேஸ் ஆகிய பார்சிலோனாவின் முன்னணி முன்கள வீரர்களுடன் இணைந்து டேம்பல்லே எவ்வாறு விளையாடப் போகின்றார் என்பதைக்காண பார்சிலோனா கழக ரசிகர்கள் மட்டுமன்றி உலக கால்பந்து ரசிகர்களும் ஆர்வமாய் உள்ளனர்.