இலங்கையின் ரக்பி ஜாம்பவான் சந்திரஷான் பெரேரா காலமானார்

289
Rugby legend Chandrishan passes away

இலங்கையின் ரக்பி விளையாட்டுக்கு அளப்பெரிய சேவையாற்றிய முன்னாள் வீரரும், பயிற்சியாரும், பிரபல ஊடகவியலாளருமான சந்திரஷான் பெரேரா தனது 60 வயதில் நேற்று (24) காலமானார்.

அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சந்திரஷான் பெரேரா, நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

சிறுவயது முதல் இங்கிலாந்தில் வளர்ந்து அங்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்த அவர், இலங்கைக்கு வந்த பிறகு CCC கழகத்தில் இணைந்து ஒரு கிரிக்கெட் வீரராக தனது விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன்பிறகு CR&FC விளையாட்டுக் கழகத்தைப் பிரநிதித்துவப்படுத்தி ரக்பி விளையாட்டில் களமிறங்கினார். அதனையடுத்து சுமார் 10 ஆண்டுகள் இலங்கை தேசிய ரக்பி அணிக்காக விளையாடியிருந்தார்.

>> இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் தலைவர் மரணம்

சந்திரஷான் பெரேரா இலங்கையின் எழுவர் அடங்கிய ரக்பி அணியின் தலைவராகவும் சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டார்.

இதேவேளை, சந்திரஷான் பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி பயிற்றுநராக கடந்த1992 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கடமையாற்றியதுடன் அணியின் ஊடக நிர்வாகியாகவும் கடமையாற்றினார்

அதேபோல, 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி பயிற்றுநராகவும் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இலங்கை பெண்கள் எழுவர் ரக்பி அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அவர், இலங்கை பெண்கள் ரக்பி அணியை ஆசியாவில் 5ஆவது இடத்துக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே, ரக்பி வீரராகவும், பயிற்சியாளராகவும், சிறந்த நிர்வாகியாகியாகவும், வர்னணையாளராகவும் அளப்பெரிய சேவையாற்றிய சந்திரஷான் பெரேராவின் மரணம் தொடர்பில் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் ThePapare.com இன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<