விறுவிறுப்பான ஆட்டத்தில் தர்மராஜவிடம் தோல்வியடைந்த கிங்ஸ்வூட் கல்லூரி

171

பரபரப்பான நிலையில் நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்று வரும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளில், இன்று (25) இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றன.

 தர்மராஜ கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி

28  ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் கண்டி பாடசாலைகளான தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகள் இடையிலான வருடாந்த ஒரு நாள் பெரும் சமரில், தர்மராஜ கல்லூரி 5 ஓட்டங்களால் த்ரில் வெற்றியைச் சுவைத்திருக்கின்றது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியில் தர்மராஜ கல்லூரி அணியானது வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து கொண்டது.

முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரிக்கு எதிர்பார்த்த முறையில் ஓட்டங்கள் சேர்க்க முடியாது போயிருந்தது. எனினும் துலாஜ் பண்டார அரைச்சதம் தாண்டி பெற்றுக் கொண்ட 67 ஓட்டங்களுடனும், மிதில கயஷான் 31 ஓட்டங்களுடனும் தமது தரப்புக்கு முடிந்த பங்களிப்பை வழங்கினர். இதன் காரணமாக, தர்மராஜ வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தனர். கிங்ஸ்வூட் கல்லூரியின் பந்துவீச்சில் உத்பல ஜயலத் 3 விக்கெட்டுக்களையும், செளம்ய பியசேன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த 215 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய கண்டி கிங்ஸ்வூட் அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து நல்ல முறையில் இலக்கை நோக்கி முன்னேறியிருந்த போதிலும் பின்னர் தடுமாற்றத்தை காண்பித்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 209 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமான தோல்வியைச் சந்தித்தது.

தனுஷ்க குணதிலக்கவின் சதத்தால் உள்ளூர் ஒருநாள் சம்பியனான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள்…

கிங்ஸ்வூட் கல்லூரியில் அதிகபட்சமாக கனிந்து கம்புறுகமுவ 33 ஓட்டங்களை சேர்த்திருக்க, முக்கிய தருணங்களில் எதிரணிக்கு அழுத்தம் தந்த வீரர்களான நவிந்த டில்ஷான், யசித்த சமரரத்ன, உபேந்திர வர்ணகுலசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தர்மராஜ கல்லூரியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி – 214/7 (50) – துலாஜ் பண்டார 67, மிதில கயஷான் 31, உத்பல ஜயலத் 3/40, செளம்ய பியசேன 2/47

கிங்ஸ்வூட் கல்லூரி – 209 (48.1)கனிந்து கம்புறுகமுவ 33, ஹசிக்க கமகே 29, யசித்த சமரரத்ன 2/13, நவிந்த டில்ஷான் 2/31, உபேந்திர வர்ணகுலசூரிய 2/35

முடிவு – தர்மராஜ கல்லூரி 5 ஓட்டங்களால் வெற்றி


 களுத்துறை வித்தியாலயம் எதிர் திஸ்ஸ மத்திய கல்லூரி

களுத்துறை மாவட்ட பாடசாலைகளான களுத்துறை வித்தியாலயம், திஸ்ஸ மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 10 ஆவது ஒரு நாள் சமரில், திஸ்ஸ மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி அடைந்திருக்கின்றது.

பாணந்துறை பொதுமைதானத்தில் இடம்பெற்றிருந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த களுத்துறை வித்தியாலய வீரர்கள் முதலில் துடுப்பாடி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்திருந்தனர்.

களுத்துறை வித்தியாலய அணியின் துடுப்பாட்டத்தில் தனியொரு நபராக அதிக ஓட்டங்களை அவிஷ்க லக்ஷான் (31) பெற்றிருந்தார். மறுமுனையில் திஸ்ஸ மத்திய கல்லூரிக்காக சிறப்பாக செயற்பட்ட தாரக்க சந்தருவன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய திஸ்ஸ மத்திய கல்லூரி ஆரம்பத்தில் சற்று தளர்வினை காட்டிய போதிலும் நிலுபுல் தர்ஷன, ரொஹான் சஞ்சய ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் 33.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களுடன் இலக்கை தொட்டது. இதில் நிலுபுல் தர்ஷன 43 ஓட்டங்களையும், ரொஹான் சஞ்சய 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்று அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை வித்தியாலயம் – 161 (49.3)அவிஷ்க லக்ஷான் 31, தாரக்க சந்தருவன் 4/35

திஸ்ஸ மத்திய கல்லூரி – 166/6 (33.2) – நிலுபுல் தர்ஷன 43, ரொஹான் சஞ்சய 41*, அவிஷ்க லக்ஷான் 3/27

முடிவுதிஸ்ஸ மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி