இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி நேற்று ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சுரேஷ் ரைனா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை எதிர்த்து மோதியது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர்  மஹேந்திர சிங் டோனி  முதலில் துடுப்பாட்டத்தை  தெரிவு செய்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.  றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  சார்பாக பெப் டுப்லசிஸ்  43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களையும், கெவின் பீட்டர்சன்  31 பந்துகளில் 37 ஓட்டங்களையும், தலைவர் டோனி ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 22  ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் லயன்ஸ்  அணியின் சார்பில் பந்து வீச்சில் பிரவின் தம்பெ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்ற  டுவயின் பிராவோ 1 விக்கட்டைத் தன் வசப்படுத்தினார்.

பதிலுக்கு 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி  துடுப்பாடிய குஜராத் லயன்ஸ் அணி 18 ஓவர்களில் 12 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து, 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை தோல்வி அடையச் செய்தது. குஜராத் லயன்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அரோன் பின்ஞ் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும், ப்ரண்டன் மெக்கலம் 31 பந்துகளில் 49 ஓட்டங்களையும், சுரேஷ் ரைனா 24 பந்துகளில் 24 ஓட்டங்களையும், டுவயின் பிராவோ ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் லயன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அரோன் பின்ஞ் தெரிவு செய்யப்பட்டார்.