இலங்கை குழாத்தில் இணையும் இரு புதுமுக வீரர்கள்!

Afghanistan tour of Sri Lanka 2022

1209

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில், புதுமுக வீரர்களான நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இன்று வெள்ளிக்கிழமை (25) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

>> ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

போட்டித்தொடருக்கான இலங்கை குழாம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குழாத்திலிருந்து விலகுவதாக அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

எனவே அவருக்கு பதிலாக இளம் துடுப்பாட்ட வீரர் நுவனிந்து பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் 23 லிஸ்ட் ஏ போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 748 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

>> கேள்விக்குறியாகியுள்ள தசுன் ஷானகவின் பிரகாசிப்பு!

அதேநேரம் இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் பிரமோத் மதுசான், பயிற்சியின் போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இவர் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதுடன், இவருக்கு பதிலாக புதுமுக வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க இடம்பிடித்துள்ளார். இவர் இதுவரை 20 லிஸ்ட் ஏ போட்டிகளில் 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

மிலான் ரத்நாயக்க ஏற்கனவே அணியுடன் இணைந்துக்கொண்டுள்ளதுடன், நுவனிந்து பெர்னாண்டோ இன்றைய தினம் அணியுடன் இணைந்துக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<