தொடர்கிறது லெஸ்டர் அணியின் சோகம்: ஆர்சனல் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

411
international football tamil

பிரீமியர் லீக் தொடர்

சேம் வோக்ஸின் இறுதி நேர கோலின் உதவியுடன் பர்ன்லி அணியானது, பிரீமியர் லீக் தொடரின் நடப்புச் சம்பியனான லெஸ்டர் அணியை தோற்கடித்து தமது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 87ஆவது நிமிடத்தில் பர்ன்லி அணி வீரர் சேம் வோக்ஸ் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். பந்து அவ்வீரரின் கையில் உரசிய போதிலும் நடுவர் அதனை கவனிக்கத் தவறினார். இது தொடர்பாக லெஸ்டர் அணியின் பயிற்றுவிப்பாளர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இப்பருவகாலத்தில் மோசமாக விளையாடி வரும் லெஸ்டர் அணி புள்ளி அட்டவணையில் 21 புள்ளிகளுடன் 16ஆம் நிலையிலுள்ளது. தொடரின் இறுதியில் 18, 19 மற்றும் 20 ஆம் நிலையிலுள்ள அணிகள் இரண்டாம் மட்ட தொடரிற்கு கீழிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் இரண்டாம் மட்ட கால்பந்து லீக் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து பிரீமியர் லீக் தொடரிற்கு முன்னேறிய பர்ன்லி அணி சிறப்பாக விளையாடி வருவதுடன், தமது சொந்த மைதானத்தில் இறுதியாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளது. அவ்வணி 29 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திலுள்ளது.

செல்சி எதிர் லிவர்பூல்

chelsea vs liverpoolஇதேவேளை, பிரபல செல்சி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ள செல்சி அணிக்கு போட்டியில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், இரண்டாம் பாதியில் கிடைத்த பெனால்டி உதையினை டியாகோ கோஸ்டா தவறவிட்டார். இதன் காரணமாக அவ்வணிக்கு இருந்த வெற்றி கைநழுவிப் போனது.

எவ்வாறாயினும் இரண்டாம் இடத்தில் இருந்த ஆர்சனல் அணி அதிர்ச்சித் தோல்வியை தழுவியதாலும், மூன்றாம் இடத்தில காணப்பட்ட டோட்டன்ஹம் அணி தனது போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதாலும், செல்சி அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வோட்பார்ட் எதிர் ஆர்சனல்

arsenal vs watfordவோட்பார்ட் அணியுடனான போட்டியில் பிரபல ஆர்சனல் அணி 2-1 என அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இதனால் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு அவ்வணி தள்ளப்பட்டுள்ளது.

டோட்டன்ஹாம் எதிர் சண்டர்லண்ட்

டோட்டன்ஹாம் அணியும் சண்டர்லண்ட் அணியுடனான போட்டியில் மோசமான ஆட்டத்தின் காரணமாக வெற்றியை பெற தவறியது. அப்போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடிவடைந்த போதிலும், ஆர்சனல் அணியின் தோல்வி காரணமாக டோட்டன்ஹாம் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

கிரிஸ்டல் பெலஸ் எதிர் போர்ன்மத்

இரண்டாம் மட்ட தொடரிற்கு கீழிறக்கப்படும் அபாயத்துடன் தரவரிசையில் 18ஆம் நிலையிலுள்ள கிரிஸ்டல் பெலஸ் அணி 12 ஆம் நிலையிலிருந்த போர்ன்மத் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தது. இதன் காரணமாக போர்ன்மத் அணி 14 இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

மிட்ல்ஸ்ப்ரோ எதிர் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன்

middle sboroughvs wet bromதொடர் தோல்விகளை சந்தித்து வந்த மிட்ல்ஸ்ப்ரோ அணியானது வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியுடனான போட்டியை ஒருவாறாக 1-1 என சமநிலையில் முடித்துக் கொண்டது. இதன் மூலம் அவ்வணி புள்ளி அட்டவணையில் ஒரு இடம் முன்னேறி 15ஆம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் ப்ரோம்விக் அல்பியன் கழகம் தொடர்ந்தும் 8ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

பிரீமியர் லீக் தொடரின் இவ்வாரத்திற்கான மேலும் மூன்று போட்டிகள் இன்று நள்ளிரவு (பெப்ரவரி 1 ஆம் திகதி) இடம்பெறவுள்ளன. வெஸ்ட் ஹேம் அணியை எதிர்த்து மன்செஸ்டர் சிட்டி அணி போட்டியிடவுள்ளதுடன், ஹால் சிட்டி அணியுடன் மன்செஸ்டர் யுனைடெட் கழகம் மோதவுள்ளது. இதேவேளை மற்றுமொரு போட்டியில் ஸ்டோக் சிட்டி அணியும் எவெர்ட்டன் அணியும் மோதக் காத்திருக்கின்றன.

இத்தாலிய கிண்ண தொடர்

கோப்பா இட்டாலியா எனப்படும் இத்தாலிய கிண்ண சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது இவ்வாரத்தின் மற்றுமொரு அதிர்ச்சி வெற்றியாக லாஸியோ அணி பிரபல இன்டர் மிலான் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

lazio-inter-coppa-italiaவிறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளின் வீரர்களுக்கும் ஒவ்வொரு சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டதால் 10 வீரர்களுடனே விளையாடியிருந்தன. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னர் சீரி தொடரின்போது இன்டர் மிலான் அணி, லாஸியோ அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்திருந்தது.

எனினும் இம்முறை அபாரமாக விளையாடி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்த லாஸியோ வீரர்கள் இன்டர் மிலான் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் 2-1 என தோற்கடித்தனர்.

நாபொலி மற்றும் ஜுவென்டஸ் அணிகள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், லாஸியோ கழகம் மூன்றாவது அணியாக அரையிறுதிச் சுற்றில் இடம்பிடித்தது.

அரையிறுதிக்கான இறுதி அணியை தெரிவு செய்வதற்கான நான்காவது காலிறுதிப் போட்டி ரோமா மற்றும் சிசேனா அணிகளுக்கிடையில் இன்று நள்ளிரவு (பெப்ரவரி 1ஆம் திகதி) இடம்பெறவுள்ளது.