ஆஸியை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு அபராதம்

696
Getty image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் (04) நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களினால் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரங்கள் எடுத்துக் கொண்ட இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதத்தை அபராதமாக ஐ.சி.சி விதித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஐ.சி.சி இன் போட்டி மத்தியஸ்தராகச் செயற்பட்ட கிறிஸ் ப்ரோட்டினால் ஐ.சி.சி இற்கு முறைப்பாடு செய்யப்ட்டது. 

இதன்போது ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு அதிக நேரங்கள் எடுத்துக் கொண்டதாக உறுதியானது. 

விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இதன்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான உதவியாளர்கள் தொடர்பில் ஐ.சி.சி இன் ஒழுங்கு விதிமுறைகளின் 2.22 சரத்துக்கு அமைய, குறித்த ஓவர் ஒன்றுக்காக பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட அந்த அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்க முடியும் என ஐ.சி.சி அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், தாம் செய்த தவறினை இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோர்கன் ஒப்புக் கொண்டதால், அது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐ.சி.சி மேலும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (06) சவுதம்டனில் நடைபெற்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<