ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா

139
AFP

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20I தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியினை 5 விக்கெட்டுக்களால்  வீழ்த்தி தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை!

ஞாயிற்றுக்கிழமை (28) துபாய் நகரில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இரு அணிகளும் 2021ஆம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தை அடுத்து விளையாடும் முதல் போட்டியாக, ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது போட்டி அமைந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் ஆட்டம் ஆரம்பித்திருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சி முடிவுக்கு அமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த அதன் தலைவர் பாபர் அசாம் சிறந்த தொடக்கத்தினை வழங்காது 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றிய போதும், ஏனைய ஆரம்பவீரரான மொஹமட் ரிஸ்வான் பொறுப்பான முறையில் ஆடி ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மொஹமட் ரிஸ்வானின் விக்கெட்டின் பின்னர் பாகிஸ்தானின் மத்திய வரிசையில் இப்திக்கார் அஹ்மட் தவிர ஏனைய வீரர்கள் ஓட்டங்கள் பெற தடுமாறிய போதும் ஹரிஸ் ரவுப் மற்றும் ஷாஹ்நவாஸ் தஹானி ஆகியோர் பின்வரிசை அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் 19.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 147 ஓட்டங்களை எடுத்தது.

பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் 42 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் இப்திக்கார் அஹ்மட் 22 பந்துகளில் 28 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சாஹ் நவாஸ் தஹானி 2 சிக்ஸர்கள் அடங்கலாக 6 பந்துகளுக்கு 16 ஓட்டங்களையும், ஹரிஸ் ரவுப் 7 பந்துகளுக்கு 13 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் 4 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி ரவிந்தீர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்ட உதவியோடு, போட்டியின் வெற்றி இலக்கினை 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

இந்திய அணியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த ஹர்திக் பாண்டியா 17 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அத்துடன் விராட் கோலியும் 35 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர்கள்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 3 விக்கெட்டுக்களையும், நஸீம் சாஹ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் சகலதுறைவீரரான ஹர்திக் பாண்டியா தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<