2022 ICC விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு

101

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை பாராட்டும் விதமாக விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒருநாள், T20i மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும், மூன்று வகையான பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டியாளர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த T20i கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அந்தவகையில், 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்காக வழங்க்கப்படுகின்ற Sir Garfield Sobers விருதுக்கு 4 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேபோல, 2022ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்காக வழங்க்கப்படுகின்ற Rachael Heyhoe Flint விருதுக்கு நியூசிலாந்தின் அமெலியா கெர், அவுஸ்திரேலியாவின் பெத் மூனி, இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் மற்றும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஆகிய நால்வரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 2022 ஐசிசி விருதுகள் பட்டியலில் எந்தவொரு பிரிவிலும் இலங்கை வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2022 வெற்றியாளர்களைத் தெரிவு செய்ய உலகின் முன்னணி கிரிக்கெட் ஊடக பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிறப்பு ஐசிசி வாக்களிப்பு அகடமியுடன் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தங்கள் வாக்குகளை அளிக்கலாம். இதற்கான வாக்களிப்பு அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளதுடன், icc-cricket.com எனும் இணையத்தளத்திற்குச் சென்று ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்க முடியும்.

ஐசிசி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் விபரம்:

ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது: பாபர் அசாம் (பாகிஸ்தான்), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), டிம் சவுத்தி (நியூசிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது: அமெலியா கெர் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (அவுஸ்திரேலியா), நாட் ஸ்கைவர் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருது: ஜொன்னி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), கங்கிசோ ரபாடா (தென்னாப்ரிக்கா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது: பாபர் அசாம் (பாகிஸ்தான்), சாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஆடம் ஜம்பா (அவுஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரங்கனைக்கான விருது: அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா), ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்ரிக்கா), அமெலியா கெர் (நியூசிலாந்து), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த T20i வீரருக்கான விருது: சாம் கரன் (இங்கிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), மொஹமட் ரிஸ்வான் (பாகிஸ்தான்), சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

ஆண்டின் சிறந்த T20i வீராங்கனைக்கான விருது: நிடா தார் (பாகிஸ்தான்), சோஃபி டெவின் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), தஹ்லியா மெக்ராத் (அவுஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது: பின் ஆலன் (நியூசிலாந்து), மார்கோ ஜான்சன் (தென்னாப்ரிக்கா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா), இப்ராஹிம் சத்ரன் (ஆப்கானிஸ்தான்)

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது: யாஸ்திகா பாட்டியா (இந்தியா), டார்சி பிரவுன் (அவுஸ்திரேலியா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து), ரேணுகா சிங் (இந்தியா)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<