சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) 2024ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த T20 உலகக் கிண்ணத் தொடரினை வேறு நாடு ஒன்றுக்கு மாற்றாது என்பதனை உறுதி செய்திருக்கின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பில் காணப்படும் ஸ்தீரனமற்ற தன்மை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை வேறு நாடு ஒன்றுக்கு மாற்ற முடியும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேஜர் லீக்கில் விளையாட ஷானக, ஹஸரங்கவுக்கு அனுமதி மறுப்பு
அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் ஐக்கிய இராச்சியத்திற்கு (இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுக்கு) மாற்றப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்பட்டதோடு, ஐக்கிய இராச்சியத்தில் 2030ஆம் ஆண்டு நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்கு பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
எனினும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் சபைகள் (ECB) இணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கு அமைய அவ்வாறு உலகக் கிண்ணத் தொடரானது வேறு நாடொன்றுக்கு மாற்றப்படாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர், ”2024ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இடம் மாற்றப்படும் என வெளியிடப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
2024ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரினை பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு ICC திட்டமிட்டிருக்கின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் 20 நாடுகள் பங்கேற்கவுள்ளதோடு, மொத்தமாக 55 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. அதாவது ICC ஒழுங்கு செய்த கிரிக்கெட் தொடர்களில் அதிக அணிகள் ஒரே தடவை மோதிக் கொள்ளும் பல்நாட்டு கிரிக்கெட் தொடராக 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணமே அமையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேஜர் லீக் T20 தொடர்; NCC, கோல்ட்ஸ் அணிகள் இணை சம்பியன்
இதேவேளை ICC இன் அதிகாரிகளில் ஒருவர் 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கான மைதானங்களை தெரிவு செய்யும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதோடு அடுத்த ஆண்டின் ஜூன் மாதம் தொடக்கம், T20 உலகக் கிண்ண போட்டிகளை நடாத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
எனவே 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரானது திட்டமிட்டபடி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுவதனை எதிர்பார்க்க முடியும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<