கார்த்திக் மெய்யப்பனின் ஹீரோ வனிந்து, நெய்மரை அல்ல

ICC T20 World Cup 2022

112

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிராக தான் எடுத்த ஹெட்ரிக் விக்கெட் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பதை தனது குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்த பிறகு உணர்ந்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் சுழல் பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் வனிந்து ஹஸரங்வைப் போல பந்துவீசுவதால் அவரது பாணியை தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும், அதன் காரணமாக விக்கெட் எடுத்த பிறகு அவரைப் போலவே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த 22 வயதுடைய லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். இவர் இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஹெட்ரிக் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், T20 உலகக் கிண்ண வரலாற்றில் இவ்வாறானதொரு மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பையும் பெற்றுக் கொண்டார்.

T20 உலகக் கிண்ண ஹட்ரிக் நாயகர்கள்

கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த மெய்யப்பனின் குடும்பம் 2012 இல் நிரந்தரமாக டுபாயில் குடியேறியது. தொடர்ந்து கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம் பிடித்தார்.

முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிரெட் லீயின் பந்துவீச்சுப் பாணியை பின்பற்றி வேகப் பந்துவீச்சாளராக கிரிக்கெட்டை ஆரம்பித்த கார்த்திக், வேகப் பந்துவீச்சு தனது உடலுக்கு பொருந்தாது என்பதை பின்னர் உணர்ந்தார்.

இந்த நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பில் கார்த்திக் மெய்யப்பன் ESPN Cricinfo இணையத்தளத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். குறித்த நேர்காணலில் தனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் இலங்கைக்கு எதிராக பெற்றுக் கொண்ட ஹெட்ரிக் சாதனை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”இது ஒரு சாதனை (ஹெட்ரிக்) என்பதை உணர சிறிது காலம் எடுத்தது. பல ஆண்டுகளாக எனது குடும்பத்தாரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்து வருகின்றது. மேலும் அவர்களிடம் திரும்பி வந்து கண்ணியமான முறையில் அவர்கள் முன் நின்று, எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பானுக போன்ற ஒரு துடுப்பாட்ட வீரரின் லெக் திசையில் இருந்து பெரிய ஷொட்கள் அடிக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். சரித் அசலங்க ஆடுகளத்திற்கு வந்தபோது, அவர் நல்ல போர்மில் இல்லை என்பதை உணர முடிந்தது. எனவே எனது சிறந்த பந்தை அவருக்கு வீச வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல, தசுன் ஷானக ஆடுகளத்திற்கு வந்தபோதும், மற்ற இருவரைப் போலவே இவரும் ஒரு தவறான பந்தை (ஷானகவின் விக்கெட்டுக்குள்) அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இறுதியில் எனது முயற்சி வெற்றி அளித்தது” என தெரிவித்தார்.

அத்துடன், ஒரு லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளராக என்னால் கூக்லியை மிக எளிதாக வீச முடியும், T20 வடிவத்தில் கூக்லி சிறந்த ஆயுதம் என குறிப்பிட்டார்.

அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முன்பு, இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தபோது செஸ் விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

”செஸ் என்பது எனது குடும்பத்தில் இருந்து கிடைத்த வரமாகும். என் தாத்தா, என் மாமாமார்கள் மற்றும் என் தந்தை ஆகியோரிடமிருந்து நான் பெற்றது தான் செஸ். கோவையில் இருந்த காலத்தில் நானும் செஸ் விளையாடினேன்” என தெரிவித்தார்.

2019 இல் ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பை கார்த்திக் பெற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கு அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, எவ்வாறாயினும், இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்துக்;கான தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

நான் சுமார் ஒரு மாதம் சென்னைக்கு வந்து எம்.வெங்கடராமணனிடம் பயிற்சி செய்தேன். அவர் என் பந்துவீச்சில் சில மாற்றங்களைச் செய்தார். எனவே இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நான் எடுத்த 3 விக்கெட்டுகளும் கேக் ஒன்றுக்கு போட்ட ஐசிங் போல. ஆனால் அதற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது என கூறினார்.

ஐபிஎல்லில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகளின் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக பந்து வீசும் வாய்ப்பை கார்த்திக் பெற்றார், அங்கு அவர் வனிந்து ஹஸரங்க மற்றும் அவரது கிரிக்கெட் ஹீரோ எம்எஸ் டோனியை சந்தித்தார்.

ஷேன் வோர்னின் பந்துவீச்சுப் பாணியை ஆரம்ப காலத்தில் பின்தொடர்ந்தேன். ஆனால், அதன்பிறகு தற்போது நான் வனிந்துவின் பந்துவீச்சுப் பாணியைத் தான் பின்பற்றி வருகிறேன். நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக பந்து வீசுவதால் அவரது பந்துவீச்சிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

அதன் பிறகு அவரைப் போலவே விக்கெட் எடுத்த பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். அந்த கொண்டாட்டம் வனிந்துவிடமிருந்து கிடைத்தது, நெய்மரிடமிருந்து அல்ல. மேலும், உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, அந்தக் கொண்டாட்டத்தை அவரிடமிருந்து கொபி செய்தேன் என்று வனிந்துவிடம் நான் கூறினேன்.

அதேபோல, அயர்லாந்தின் சுற்றுப்பயணத்திற்கு முன்பு (ஒக்டோபர் 2021 இல்) நான் சென்னை சுபர் கிங்ஸ் அணியின்ன் வலைப் பந்துவீச்சாளராக பணியாற்றினேன், அங்கு நான் எம்எஸ் டோனியைச் சந்தித்தேன். அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார் என அவர் தெரிவித்தார்.

T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் சவால்

கார்த்திக் மெய்யப்பனின் தந்தை பி.எல்.மெய்யப்பனும் ஒரு லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் ஆவார், இவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

என் தந்தை கிரிக்கெட்டில் தொடர விரும்பினாலும், அவரது குடும்பத்தினர் அவருக்குத் தேவையான ஆதரவை கொடுக்கவில்லை. ஆனால் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், தந்தையாக அவர் மிகவும் பெருமைப்படுவார் என்று நான் நம்புகிறேன் அவர் குறிப்பிட்டார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<