மேஜர் லீக் T20 தொடர்; NCC, கோல்ட்ஸ் அணிகள் இணை சம்பியன்

SLC Major Clubs T20 Tournament 2023

101
SLC Major Clubs T20 Tournament 2023

நிரோஷன் திக்வெல்ல தலைமையிலான NCC கழகத்திற்கும், அகில தனன்ஜய தலைமையிலான கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெறவிருந்த பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் T20 தொடரின் இறுதிப்போட்டி மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் சம்பியன் கிண்ணம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கொழும்பு SSC மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியை மாத்திரம் போட முடிந்தது. இதில் NCC கழகம் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்ட தீர்மானித்த போதிலும் தொடர்ந்து பெய்த மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இந்த இரண்டு கழகங்ளும் மேஜர் லீக் T20 தொடரின் சம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் தடவையாகும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற மேஜர் லீக் T20 தொடரில் கோல்ட்ஸ் கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

எனினும், இந்த ஆண்டு மேஜர் லீக் T20 தொடரில் B குழுவில் முதலிடம் பிடித்த கோல்ட்ஸ் கழகம் அரையிறுதிக்குள் நுழைந்தது. அங்கு அவர்கள் Ace Capital கழகத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இந்த ஆண்டு 150ஆவது ஆண்டு பூர்த்தி விழாவைக் கொண்டாடும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இம்முறை மேஜர் லீக் T20 தொடரின் சம்பியனாக மகுடம் சூடியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மறுபுறத்தில் லீக் சுற்றில் A குழுவில் முதலிடம் பிடித்த NCC கழகம் அரையிறுதியில் மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதன்படி, இணை சம்பியன்களாக மாறிய இரு கழங்களுக்கும் தலா 4 மில்லியன் ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை மேஜர் T20 லீக் தொடரில் 6 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் அரைச் சதத்துடன் 195 ஓட்டங்களைக் குவித்த NCC கழக வீரர் உபுல் தரங்க, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்துக்காக ஆடிய லஹிரு சமரகோன் தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். இம்முறை போட்டித் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய அவர் 10 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 97 ஓட்டங்களையும் குவித்தார்.awards winners

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடம் பிடித்த முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சகலதுறை வீரர் லஹிரு சமரகோன், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<