LPL தொடரிலிருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகல்

2390

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற்று ஒரு வாரமே கடந்திருக்கும் நிலையில், ஏலத்தின் போது தெரிவு செய்யப்பட்ட ஐந்து வெளிநாட்டு வீரர்கள் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, ஏலத்தில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்களாக அன்ட்ரூ ரசல், பாப் டு பிளேசிஸ், டேவிட் மில்லர், டேவிட் மலான் மற்றும் மன்விந்தர் பிஸ்லா ஆகிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர். 

>>ஜப்னா ஸ்டலியன்ஸ் மூலம் மாற்றம் பெறவுள்ள வட மாகாண கிரிக்கெட்<<

இதில் தென்னாபிரிக்க வீரர்களான டு பிளேசிஸ், டேவிட் மில்லர் மற்றும் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஆகியோர் தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ள இருதரப்பு தொடரின் காரணமாக LPL தொடரில் இருந்து விலகுவதோடு, அன்ட்ரூ ரசல் அவருக்கு ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக வெளியேறவிருக்கின்றார். அதேநேரம், மன்விந்தர் பிஸ்லா தொடரில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வீரர்கள் வெளியேறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட LPL தொடரின் இயக்குனர் ரவீன் விக்ரமரட்ன, வெளியேறியிருக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்களை தெரிவு செய்த LPL அணிகள் வேறு வீரர்கள் மூலம் பிரதியீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியிருக்கின்றது எனக்  குறிப்பிட்டிருக்கின்றார். 

வெளியேறியிருக்கும் வீரர்களில் பாப் டு பிளேசிஸ், அன்ட்ரூ ரசல் மற்றும் மன்விந்தர் பிஸ்லா ஆகியோர் கொழும்பு கிங்ஸ் அணியினால், LPL வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்க டேவிட் மில்லர் தம்புள்ளை ஹோக்ஸ் அணியினாலும், டேவிட் மலான் ஜப்னா ஸ்டலியன்ஸ் அணியினாலும் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், LPL தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.  

இதனால், இந்த LPL தொடர் ஆரம்பமாக இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியே காணப்படுகின்றது. அத்தோடு, இலங்கை சுகாதார அமைச்சு கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலினால் வெளிநாட்டவர்கள் இலங்கை வரும் போது 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. 

>>சர்ச்சைகளால் வலம்வந்த IPL முதல்பாதி ஆட்டங்கள்<<

இவ்வாறான விடயங்கள் LPL தொடரினை எதிர்பார்த்த திகதியில் நடாத்த சில முட்டுக்கட்டைககளை உருவாக்கியிருப்தோடு, இந்த விடயங்களை சுட்டிக்காட்டி தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சிலரும் அதிருப்தியினை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

விடயங்கள் எவ்வாறு இருந்த போதும் இலங்கை கிரிக்கெட் சபை லங்கா ப்ரீமியர் லீக் தொடரினை நவம்பர் மாதம் நடாத்துவதில் நம்பிக்கையுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<