மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா

75

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், லா லிகா தொடர்களின் முக்கிய போட்டிகள் சில சனிக்கிழமை (07) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் AFC போர்ன்மௌத் 

விடாலிட்டி அரங்கில் நடைபெற்ற போர்ன்மௌத்துக்கு (Bournemouth) எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்ற லிவர்பூல் ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 11 புள்ளிகள் இடைவெளியுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

SAG கால்பந்து: எந்தவித வெற்றியும் இன்றி நாடு திரும்பும் இலங்கை அணி

தெற்காசிய விளையாட்டு விழாவில், ஆண்களுக்கான கால்பந்தாட்டப்…

ஏழு மாற்றங்களுடன் களமிறங்கிய லிவர்பூல் அணிக்காக அலெக்ஸ் ஒக்லாடே-சம்ப்ரியன் (Alex Oxlade-Chamberlain) முதல் கோலை பெற்றார். ஜோர்டன் அன்டர்சன் நீண்ட தூரத்தில் இருந்து அபாரமாக கடத்திய பந்தைக் கொண்டே அவர் அந்த கோலை பெற்றார்.     

முதல் பாதி முடியும் நேரத்தில் மொஹமட் சலாஹ் பரிமாற்றிய பந்தை நபை கீட்டா கோலாக மாற்றினார். இந்நிலையில் கீட்டா உதவி புரிய மொஹமட் சலாஹ் லிவர்பூலுக்காக மூன்றாவது கோலை பெற்றார்.

இதன் மூலம் லிவர்பூல் 33 லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு இந்தப் பருவத்தில் 16 போட்டிகளில் 15 இல் வெற்றியீட்டியுள்ளது.  

மன்செஸ்டர் சிட்டி எதிர் மன்செஸ்டர் யுனைடட்

நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள ஆடிவரும் மன்செஸ்டர் சிட்டி அணி மன்செஸ்டர் யுனைடட் உடனான போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்து நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இதனால் ப்ரீமியர் லீக்கில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் அந்த அணி 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது. 

போட்டியை அதிரடியாக ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைடட் சார்பில் மார்கஸ் ரஷ்போர்ட் மற்றும் அன்தனி மார்ஷியா பெற்ற முன்கூட்டிய கோல்கள் அந்த அணிக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. வருகை அணியான மன்செஸ்டர் சிட்டி கடைசி நேரத்தில் நிகொலஸ் ஒட்டமண்டி மூலம் பெற்ற கோலால் பரபரப்பு எற்பட்டபோதும் மன்செஸ்டர் சிட்டி மற்றொரு கோலை திருப்பும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு பெப் குவர்டியோலா முகாமையாளராக பொறுப்பேற்ற பின் மன்செஸ்டர் சிட்டி தனது சொந்த மைதானத்தில் விளையாடிய லீக் போட்டியில் ஆரம்பத்திலேயே எதிரணிக்கு இரு கோல்களை விட்டுக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும். 

எவர்டன் எதிர் செல்சி

எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என தோல்வியை சந்தித்த செல்சி அணி கடைசியாக விளையாடிய 4 ப்ரீமியர் லீக் போட்டிகளில் மூன்றாவது தோல்வியை எதிர்கொண்டது. 

போட்டி ஆரம்பித்த 5 ஆவது நிமிடத்திலேயே ட்ஜிப்ரில் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி ரிச்சாலிசன் எவர்டன் அணிக்காக முதல் கோலை பெற்றார். 

இரண்டாவது பாதியை அதிரடியாக ஆரம்பித்த எவர்டன் அணி சார்பில் கல்வேர்ட் லெவின் மூலம் இரண்டாவது கோலையும் பெற்றது. எனினும் கொவாசில் இங்கிலாந்து கோல்காப்பாளரான ஜோர்டன் பிக்போர்டை முறியடித்து செல்சி சார்பில் கோல் ஒன்றை பெற்றார். 

தொடர்ந்து கல்வேர்ட் லெவின் 84 ஆவது நிமிடத்தில் பெற்ற இரண்டாவது கோல் மூலம் எவர்டன் தனது வெற்றியை உறுதி செய்தது. 

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பர்ன்லி

பர்ன்லி அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கோல் மழை பொழிந்த டொட்டன்ஹாம் அணி அந்தப் போட்டியை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

போட்டியின் நான்காவது நிமிடத்தில் நிக் பொபே நீண்ட தூரத்தில் இருந்து கடத்திய பந்தைக் கொண்டு ஹெரி கேன் முதல் கோலை பெற்றதோடு ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு யார் தூரத்தில் இருந்து லூகாஸ் மௌரோ மற்றொரு கோலை பெற்றார்.

முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னர் கேனின் உதவியோடு சொன் ஹியுன் மின் கோல் பெற டொட்டன்ஹாம் 3-0 என முன்னிலை பெற்றது. இதன்போது தென் கொரிய வீரரான மின் பந்தை மைதானத்தில் தனது பகுதியில் இருந்து கடத்திச் சென்று அபாரமாக அந்த கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஹெரி கேன் மற்றும் மௌசா சிசோகோ டொட்டன்ஹாமுக்காக மேலும் கோல்களை பெற்றனர்.

இந்த வெற்றியுடன் ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் ஒரு புள்ளியால் மாத்திரமே டொட்டன்ஹாம் பின்தங்கியுள்ளது.

பார்சிலோனா எதிர் மல்லொர்கா

பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற லியோனல் மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் மல்லொர்கா அணியை 5-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற பார்சிலோனா அணி லா லிகா புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 

போட்டியின் முதல் பாதியில் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து இரண்டு அபார கோல்களை பெற்ற மெஸ்ஸி 83 ஆவது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலை பெற்றார்.

எனினும் போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே அன்டொயின் கிரீஸ்மன் பார்சிலோனா அணி சார்பில் முதல் கோலை பெற்றதோடு, லுவிஸ் சுவாரஸ் மற்றொரு கோலை பெற்றார்.  

தடுமாற்றம் கண்ட மல்லொர்கா அணி சார்பில் அன்டே புடிமிர் (Ante Budimir) இரண்டு கோல்களை பெற்றார்.

இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பல்லொன் டிஓர் விருது வென்றதை தனது ரசிகர்களுடன் மெஸ்ஸி கொண்டாடினார்.

இதில் மெஸ்ஸி பெற்ற ஹெட்ரிக் கோலானது லா லிகாவில் அவர் பெறும் 35 ஆவது ஹெட்ரிக் கோலாகும். இதன் மூலம் அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். 

ரியல் மெட்ரிட் எதிர் எஸ்பன்யோல்

கரிம் பென்சமாவின் கோல் மற்றும் கோல் உதவியின் மூலம் எஸ்பன்யோல் அணிக்கு எதிராக ரியல் மெட்ரிட் நெருக்கடி இன்றி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

எனினும் பெர்லாண்ட் மென்டி சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் ரியல் மெட்ரிட் கடைசி நிமிடங்களில் 10 வீரர்களுடனேயே விளையாடியது.

இதன் போது பிரான்ஸ் அணியின் சக வீரரான ரபேல் வரனே 37 ஆவது நிமிடத்தில் கோல் பெற உதவிய பென்சமா இரண்டாவது பாதியின் 79 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று ரியல் மெட்ரிட்டின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்த வெற்றியுடன் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட ரியல் மெட்ரிட் கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<