இலங்கை அணியை இன்னலுக்கு தள்ளியுள்ள லேத்தமின் கன்னி இரட்டைச்சதம்

831
Image courtesy - Sri Lanka Cricket Twitter

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, டொம் லேத்தமின் அபார இரட்டைச் சதத்தின் உதவியுடன் 578 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், இலங்கை அணி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொள்ளும் நியூசிலாந்து

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு….

நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றிருந்த நியூசிலாந்து அணியின் மூன்றாவது விக்கெட், இன்று மேலதிகமாக ஒரு ஓட்டம் பெறப்பட்ட நிலையில் வீழ்த்தப்பட்டது. லஹிரு குமாரவின் பந்து வீச்சில் ரோஸ் டெய்லர் 50 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ், டொம் லேத்தமுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். நிக்கோலஸ் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, இவர்கள் இருவரும் நன்காவது விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை பகிர்ந்தனர். நிக்கோலஸின் ஆட்டமிழப்புக்குப் பின்னர் களம் நுழைந்த பி.ஜே. வெட்லிங் ஓட்டங்கள் இன்றி லஹிரு குமாரவின் பந்து வீச்சில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கொலின் டி கிரெண்டோம் வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க, டொம் லேத்தம் தன்னுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச் சதத்தை கடந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, கிரெண்டோம் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து, அரைச்சதத்தை தவறவிட்டார். எனினும், இறுதிவரை பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுடன், விக்கெட்டினை விட்டுக்கொடுக்கமால் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டொம் லேத்தம் 264 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 578 ஆக உயர்த்துவதற்கு உதவியிருந்தார்.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட மெதிவ்ஸ், திமுத் மற்றும் டிக்வெல்ல

வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள சுற்றுலா இலங்கை …

டொம் லேத்தமினைத் தவிர, நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸிற்காக நேற்றைய தினம், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும், ஜீட் ராவல் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், தனன்ஜய டி சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதேவேளை, தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி, முதல் இன்னிங்ஸை போன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. திமுத் கருணாரத்ன, தனன்ஜய டி சில்வா மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரின் விக்கெட்டுகள் 13 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட, இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, டீம் சௌதி 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் பின்தங்கியுள்ள இலங்கை அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 276 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்