பொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பு

224
 

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு நேற்று முன்தினம் (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு 13 விளையாட்டுப் போட்டிப் பிரிவுகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, மெய்வல்லுனர், பளுதூக்கல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், மேசைப்பந்து, எழுவர் ரக்பி, கடற்கறை கபடி, கடற்கரை கரப்பந்தாட்டம், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக், பெட்மிண்டன், குவாஷ்; மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகளுக்காக இலங்கையிலிருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள்

அதிலும் முக்கியமாக அடைவு மட்டத்தை பூர்த்தி செய்த பதக்கங்களை வெல்லக்கூடியவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே அனுப்பப்படுவர். வெறுமனே வீரர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி அரசின் பணத்தை வீணடிக்க நான் தயாரில்லை. அதற்காக நாம் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும் குறித்த வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சுனில் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட விசேட குழுவின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும்” அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் ஆயத்தமாக அதில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்காக போதியளவு நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் எமக்கு தெரியப்படுத்தும்படி உரிய சங்கங்களுக்கு அறிவித்துள்ளோம். அத்துடன், இதற்கான தகுதிகாண் போட்டிகள் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்துனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை 39 போட்டிப் பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ளதாகவும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் அடுத்த அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.