ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரொஸ் டெய்லர்

278

நியூசிலாந்து அணியின் அனுபவ மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதுடன், அந்த அணி சார்பில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஒழுக்க விதிகளை மீறிய பங்களாதேஷ், நியூசிலாந்து வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ….

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இன்று (20) விளையாடியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 330 ஓட்டங்களை குவித்த நிலையில், ரொஸ் டெய்லர் தனது பங்கிற்கு 69 ஓட்டங்களை விளாசியிருந்தார். இதில், மஷ்ரபீ மொர்டஷா வீசிய பங்களாதேஷ் அணியின் 28வது ஓவரை எதிர்கொண்ட ரொஸ் டெய்லர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தொடர்ந்தும் அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இவர், மெஹிடி ஹசன் வீசிய அணியின் 33வது ஓவரில், முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ப்ளெமிங்கின் 8007 ஓட்டங்களை கடந்து, அந்த அணிக்காக அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

நியூசிலாந்து அணியின் முன்னணி இடதுகை துடுப்பாட்ட வீரராக வளம் வந்த ஸ்டீபன் ப்ளெமிங் 268 இன்னிங்ஸ்களில் 8007 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ரொஸ் டெய்லர் 203 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி மிக குறைந்த போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன், நியூசிலாந்து அணி சார்பில் 8000 ஓட்டங்களை கடந்த முதல் வலதுகை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் டெய்லர் பெற்றுள்ளார்.

கப்டிலின் சதத்துடன் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

நியூசிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம்….

ரொஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்காக மொத்தமாக 8026 ஓட்டங்களை குவித்துள்ள போதும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ப்ளெமிங்கின் அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை எட்டுவதற்கு, இன்னும் 11 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது. ஸ்டீபன் ப்ளெமிங் நியூசிலாந்து மற்றும் ஐசிசி அணிகளுக்காக விளையாடி, ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 8037 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்டீபன் ப்ளெமிங் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 7172 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து சார்பில் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை கைவசம் வைத்துள்ளார்.

இந்த பட்டியலிலும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் ரொஸ் டெய்லர் (6523 ஓட்டங்கள்), ப்ளெமிங்கின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 649 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 >>பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<